தற்போதைய செய்திகள்

மாவட்ட தி.மு.க. செயலாளரின் உதவியாளர், காரை தி.மு.க.வினரே தாக்கினர்- சங்கரன்கோவிலில் பரபரப்பு சம்பவம்

தென்காசி

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் சீட் வேண்டும் என்றால் மாவட்ட செயலாளரின் காலில் விழு என்று கூறிய மாவட்ட தி.மு.க. செயலாளரின் உதவியாளரையும், காரையும் தி.மு.க.வினர் தாக்கிய சம்பவம் சங்கரன்கோவில் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க செயலாளராக சிவபத்மநாதன் இருந்து வருகிறார். நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் சீட் ஒதுக்கீடு செய்யும் பிரச்சினையில் சங்கரன்கோவில் அருகே உள்ள மடத்துப்பட்டியை சேர்ந்த ராஜதுரை என்பவர் தி.மு.க. மாவட்ட இளைஞரணியில் பொறுப்பு வகித்து வருகிறார்.

அவர் தனக்கும் மற்றும் ஆதரவாளர்கள் சிலருக்கு சீட் கேட்டு நெருக்கடி கொடுத்து வருகிறார். இந்த நிலையில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமசந்திரன், தென்காசி வருவதை முன்னிட்டு அவரை வரவேற்க குத்துக்கல்வலசை பகுதியில் தி.மு.க. மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் மற்றும் ஆதரவாளர்களுடன் நின்று கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த ராஜதுரை சீட் கேட்டு தகராறு செய்துள்ளார். அந்த நேரத்தில் மாவட்ட செயலாளரின் உதவியாளர் சுரேஷ் என்பவர் சீட் வேண்டுமென்றால் மாவட்ட செயலாளர் காலில் விழு என்று கூறியதாக கூறப்படுகிறது.

இதை கேட்டு கொதிப்படைந்த ராஜதுரை அருகில் இருந்த டீக்கடையில் உள்ள குப்பைத்தொட்டியை தூக்கி சிவபத்மநாதன் வாகனம் மீது அடித்துள்ளார். இதில் கார் கண்ணாடி முழுவதும் உடைந்து அவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. அதோடு மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் உதவியாளர் சுரேஷையும் தாக்கியுள்ளார்,

இந்த சம்பவம் குறித்து ராஜதுரை உட்பட ஏழு பேர் மீது இலத்தூர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதன் கழக ஆட்சியின் போது தென்காசி நகராட்சி ஆணையரை பணம் கேட்டு மிரட்டியது முதல் அவரது அடாவடி ஆரம்பித்தது. நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் கடையம் ஊராட்சியில் தி.மு.க. பெண் கவுன்சிலரை தலைவராக்க ஒரு கோடி ரூபாய் கேட்டதாக வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆனது.

இந்த சூழ்நிலையில் மாவட்ட தி.மு.க. செயலாளர் தி.மு.க.வினரால் தாக்கப்பட்டதால் இது தேவை தான். இனியாவது கட்சியினரை மதிக்கட்டும் என்று பெயர் சொல்லாத தி.மு.க.வினர் தெரிவிக்கின்றனர். ஆளுங்கட்சி தி.மு.க மாவட்ட செயலாளருக்கு பாதுகாப்பு இல்லை என்று சமூக வலைதளங்களில் வீடியோவை வைரல் ஆக பரவ விட்டு வருகின்றனர். உண்மை நிலையை தெரிந்து கொண்ட மக்கள் இந்த வீடியோவை கண்டு முகம் சுளிக்கின்றனர்.