சிறப்பு செய்திகள்

எவ்வளவு திறமை இருந்தாலும், வேகமிருந்தாலும் சரியான பாதையில் செல்லவில்லை என்றால் இலக்கை அடைய முடியாது – மாணவர்களுக்கு முதலமைச்சர் அறிவுரை

சென்னை

எவ்வளவு திறமை இருந்தாலும், வேகமிருந்தாலும் சரியான பாதையில் செல்லவில்லை என்றால் இலக்கை அடைய முடியாது என்று முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சவீதா மருத்துவ மற்றும் தொழில்நுட்ப அறிவியல் நிறுவனத்தின் 15-வது பட்டமளிப்பு விழாவில் (இணைய வழி) முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி பேசியதாவது:-

இன்றைக்கு பட்டம் பெற்று, பல்கலைக்கழகத்திலிருந்து, வெளிவரும் மாணர்களாகிய நீங்கள், இந்த உலகமே பயனடையும் வகையில் சாதனைகளை நிகழ்த்த, முதலில் சரியான இலக்கு மற்றும் அதை அடையக்கூடிய வழிமுறைகள் ஆகியவற்றை நிர்ணயித்துக் கொள்ள வேண்டும். அவ்வழிமுறைகளில் இடைவிடாது செயல்பட்டால் உங்களது லட்சியத்தை வெகு சுலபமாக அடைந்து, வெற்றி அடையமுடியும்.

வாழ்க்கையில் நாம் பல பிரச்சனைகளை எதிர்கொள்ளும் போது, அந்த பிரச்சனைகளுக்கு தீர்வு காண, நாம் சரியான இலக்கை நிர்ணயித்து, பாதையை வகுத்து, சரியான திசையில் செல்லும் முடிவே பெரிய வெற்றியை தரும்.ஒருவர் எவ்வளவு தான் திறமையானவராக இருப்பினும், வேகமாக செயல்படக் கூடியவராக இருப்பினும். சரியான பாதையில் செல்லவில்லை என்றால் அவர் அவரது இலக்கினை அடைவது இயலாத காரியமாகும்.

மாணவர்களாகிய உங்கள் வாழ்விற்கு சரியான திசையை தேர்ந்தெடுப்பது முக்கியமான ஒன்றாகும். வெற்றிக்கு வேகமாக ஓடுவதைக் காட்டிலும், சரியான திசையில் ஓடுவது முக்கியமான காரணமாக இருக்கிறது. எனவே உங்கள் திசையை, வழியை சரியாக தீர்மானியுங்கள். பயணம் வெற்றி பெறும்.

திட்டமிடுங்கள்! உழையுங்கள்!

வெற்றி பெறுங்கள்! என்கடன் பணிசெய்து கிடப்பதே என்றனர் ஆன்றோர் பெருமக்கள்.

ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்பேன்”” என்றார் அண்ணா .

காட்டில் நிலவாய், கடலில் மழையாய் பிறந்தால்

யாருக்கு லாபம்? பகையில் துணையாய், பசியில் உணவாய் இருந்தால்

ஊருக்கு லாபம் என்றார் புரட்சித் தலைவர்

மாணவர்களாகிய நீங்கள் வருங்காலத்தில், பொது மக்களுக்கு பயன்தரத்தக்க ஒரு வாழ்க்கையை வாழ்வதே சிறந்ததாகும் என்பதை இங்கே வலியுறுத்தி கூற விரும்புகிறேன். இன்றைய தினம் மக்களின் நோயைப் போக்கும் புனிதப்பயணத்தை சிலரும், சிறந்த பொறியாளர்களாக வேண்டும் என்ற பயணத்தைச் சிலரும், பிறதுறை வல்லுநர்களாக வேண்டும் என்ற பயணத்தை சிலரும் தொடங்குகிறீர்கள்.

இந்தத் தருணத்தில் உங்கள் மனதில் எழும் புனிதமான எண்ணங்கள், உங்கள் கரங்களுக்கும் இதயங்களுக்கும் வழிகாட்டியாக அமையட்டும் என வாழ்த்துகிறேன். இந்த நிகழ்வினை நல்ல முறையில் ஏற்பாடு செய்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கு எனது பாராட்டுதல்களையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி பேசினார்.