தற்போதைய செய்திகள்

தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியலில் மிகப்பெரிய குளறுபடி – மாநில தேர்தல் ஆணையத்திடம், கழகம் சார்பில் புகார்

சென்னை

வாக்காளர்களை இடமாற்றி தேர்தல் விரோத நடவடிக்கையில் தி.மு.க. ஈடுபட்டு இருக்கிறது. தமிழகம் முழுவதும் வாக்காளர் படடியலில் மிகப்பெரிய குளறுபடி உள்ளது. இந்த குளறுபடிகளை களைய வேண்டும் என்று மாநில தேர்தல் ஆணையத்திடம் கழக வழக்கறிஞர் பிரிவு இணை செயலாளர் ஆர்.எம்.பாபுமுருகவேல் புகார் செய்துள்ளார்.

வார்டு மறுவரையறை என்ற பெயரிலும், வாக்காளர் பட்டியல் திருத்தம் என்ற பெயரிலும் தேர்தல் அலுவலர்களால் வாக்காளர் பட்டியலில் ஏற்பட்ட பிழைகளை திருத்தம் செய்ய வேண்டி மாநில தேர்தல் ஆணையத்தில் கழக வழக்கறிஞர் பிரிவு இணை செயலாளர் ஆர்.எம்.பாபுமுருகவேல் அளித்துள்ள புகார் மனுவில்
கூறப்பட்டுள்ளதாவது.

வார்டு மறுவரையறை வாக்காளர் பட்டியல் பெயர் திருத்தம் என்ற பெயரில், தி.மு.க அரசு அதிகாரிகளை தன்னுடைய கைப்பாவையாக மாற்றி தங்களுக்கு சாதகமில்லாத பகுதிகளிலிருந்து வாக்காளர்களை சாதகமான பகுதிகளுக்கு
மாற்றியும் வாக்காளர்களின் சம்மதமில்லாமல் ஒப்புதல் இல்லாமல், அவர்களுக்கு தெரியப்படுத்தாமல் மிகப்பெரிய தேர்தல் விரோத நடவடிக்கையில் ஈடுபட்டு இருக்கிறது.

குறிப்பாக ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாத முதல் வாரத்தில் வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிடுவது தேர்தல் ஆணையத்தின் வழக்கம். தேர்தல்கள் நடைபெறும் காலங்களில் தேர்தல் நடப்பதற்கு முன்பாக வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடுவதும் மரபு.

ஒரு வாக்காளர் தன்னுடைய இடமாற்றத்தையோ, பெயர் நீக்கம், பெயர் சேர்த்தலையோ அதற்கென வழங்கப்பட்ட மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் அடிப்படையில் உள்ள மனுவின் வாயிலாகத்தான் எழுத்துப்பூர்வமான கோரிக்கையை வைக்க முடியும்.

ஆனால் தற்போது நடைபெற இருக்கின்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் இது போன்ற எந்தவிதமான விதியையும் பின்பற்றாமல் வாக்காளர்களுக்கு தெரியப்படுத்தாமல் ஒருவருடைய வாக்கை அவர் வசிக்கும் பகுதியில் இருந்து வேறு பகுதிக்கு தேர்தல் ஆணையம் மாற்றி வாக்காளர் பட்டியலை வெளியிட்டு இருக்கிறது.

குறிப்பாக சேலம் மாவட்டம் வாழப்பாடி பேரூராட்சியில் வாக்காளர் பட்டியல் வரிசை எண் 531, 532 ஒரே வீட்டில் வசிக்கும் மகன் மற்றும் தாய்க்கு சொந்தமான வரிசை எண் ஆனால் இதில் 532 வரிசையில் உள்ள வாக்கை பன்னிரண்டாவது வார்டிலும் 531 வரிசையில் உள்ள வாக்கை பதினோராவது வாட்டிலும் திருத்தி
அமைத்து பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இது ஒரு உதாரணத்திற்காக மட்டும் தான். ஆனால் அதே வாழப்பாடி பேரூராட்சியில் 43 வாக்காளர்களை இதேபோல வெவ்வேறு வார்டுகளுக்கு வாக்காளர் பட்டியல் பெயர் திருத்தம் என்ற பெயரில் தான்தோன்றித்தனமான நடவடிக்கையை மாவட்ட நிர்வாகமும், தேர்தல் ஆணையமும் எடுத்திருக்கிறது எனக்கு வந்த தகவலின்

அடிப்படையில் மாநிலம் முழுவதும் இதுபோன்ற மிகப்பெரிய வாக்காளர் பட்டியலில் குளறுபடி எல்லா இடத்திலும் நடந்திருப்பதாக தெரிகிறது.

உடனடியாக தேர்தல் ஆணையம் இதில் தலையிட்டு இந்த குளறுபடிகளை தேர்தல் நடப்பதற்கு முன்பாக சரி செய்ய வேண்டும். இல்லை என்றால் வாக்குப்பதிவு அன்று மிகப்பெரிய சட்டம் ஒழுங்கு சீர்கெடக்ககூடிய நிலைமைக்கு வழிவகுத்து விடும்.

அதோடு மட்டுமல்லாமல் தேவையில்லாமல் நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிக்கக்கூடிய வகையில் வழக்குகளை தொடுக்க காரணமாக தேர்தல் ஆணையம் அமைந்து விடும்.

எனவே இந்த புகாரின் மீது உடனடியாக மாநில தேர்தல் ஆணையம் தலையிட்டு அந்தந்த மாவட்ட ஆட்சித்தலைவர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி உடனடியாக இந்த தவறுகளை களைய வேண்டும்.

இவ்வாறு அந்த புகார் மனுவில் கூறி உள்ளார்.