தற்போதைய செய்திகள்

மக்களை ஏமாற்றுகிறார் முதலமைச்சர் ஸ்டாலின்-எதிர்க்கட்சி துணை கொறடா சு.ரவி குற்றச்சாட்டு

ராணிப்பேட்டை

தேர்தல் வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றுகிறார் முதலமைச்சர் ஸ்டாலின் என்று எதிர்க்கட்சி துணை கொறடா சு.ரவி குற்றம் சாட்டியுள்ளார்.

ராணிப்பேட்டை மாவட்ட கழக அலுவலகத்தில் மாவட்ட கழக அவைத்தலைவர் ஆர்.ஜி.கே.நந்தகோபால் தலைமையில் உள்ளாட்சி தேர்தல் குறித்து நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. ராணிப்பேட்டை மாவட்ட கழக செயலாளரும், எதிர்க்கட்சி துணை கொறடாவுமான சு.ரவி எம்.எல்.ஏ. கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-

வருகின்ற உள்ளாட்சி தேர்தலில் கழக வேட்பாளர்களை 100 சதவீதம் வெற்றிபெற செய்து வெற்றிக்கனியை தலைமையிடம் சமர்பிக்க அனைவரும் அயராது பாடுபட வேண்டும். நாம் அனைவரும் ஒற்றுமையுடன் தேர்தல் பணி ஆற்றினால் எந்த கொம்பாதி கொம்பனாலும் கழகத்தை அசைத்து பார்க்க முடியாது. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோரின் தலைமையை ஏற்று என்றும் சிறப்பாக செயல்படுவோம். தலைமை அறிவிக்கின்ற கழக வேட்பாளரை நாம் அமோக வெற்றி பெற செய்ய வேண்டும்.

50-வது ஆண்டு பொன்விழா காணும் கழகம் தமிழகத்தில் 31 ஆண்டுகள் ஆட்சி செய்துள்ளது. பொன்விழாவை முன்னிட்டு ஏழை, எளியவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்க வேண்டும். மூத்த கட்சி நிர்வாகிகளை மரியாதை செய்து கவுரவிக்க வேண்டும். நலிவடைந்த கழக நிர்வாகிகளுக்கு நிதி உதவி செய்ய வேண்டும்.

முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தமிழகத்தில் சிறப்பான ஆட்சி வழங்கினார். தி.மு.க.வினரின் மக்கள் விரோத செயலை தட்டிக்கேட்க வேண்டும். தொண்டர்களுக்கு ஒரு பிரச்சினை என்றால் கழக நிர்வாகிகள் வீறுகொண்டு எழ வேண்டும். தி.மு.க.வின் அவலங்களை தகவல் தொழில்நுட்ப பிரிவு பொதுமக்களுக்கு விரைந்து தெரிவிக்க வேண்டும்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தில் மன்னர் ஆட்சி செய்து வருகிறார். அவரை போலவே ராணிப்பேட்டையில் தி.மு.க. அமைச்சர் காந்தி மன்னர் ஆட்சி செய்கிறார். அமைச்சர் காந்தியின் மகன் சந்தோஷ் காந்தி எந்த ஒரு அரசு பொறுப்பிலும் இல்லாமல் அரசு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.

மக்கள் ஆட்சி தத்துவத்தை தி.மு.க.அரசு குழி தோண்டி புதைத்து வருகிறது. தமிழகத்தில் நடைபெறுவது மன்னராட்சியா ? மக்களாட்சியா? என்று தெரியவில்லை. தேர்தல் நேரத்தில் பொய்யான வாக்குறுதிகளை அள்ளி வீசி வெற்றிபெற்ற பிறகு ஒரு வாக்குறுதியையும் நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றி வருகிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.

விவசாயிகள் பயிர் செய்த நெல்லை ஒன்றரை மாதங்களாக கொள்முதல் செய்யாமல் தி.மு.க. அரசு அலட்சிய போக்கை கடைபிடித்து வருகிறது. விரைவில் நெல் கொள்முதல் நிலையங்களை திறந்து நெல்லை கொள்முதல் செய்து, ஏழை விவசாயிகளின் துயர் துடைக்க வேண்டும். விவசாயிகளின் இடு பொருட்கள், கட்டுமான பொருட்கள் விலை உயர்வை கட்டுப்படுத்த தி.மு.க. அரசு தவறி விட்டது. கழகம் ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் தமிழக மக்களின் நலனுக்காக பாடுபடும்.

இவ்வாறு எதிர்க்கட்சி துணை கொறடா சு.ரவி எம்.எல்.ஏ. பேசினார்.

.