திருநெல்வேலி

கொரோனா பரிசோதனை அறிக்கையை எளிதாக பெற இணையதள வசதி – திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்

திருநெல்வேலி

கொரோனா வைரஸ் தொற்று மருத்துவ பரிசோதனை அறிக்கை அனைவருக்கும் எளிதாக கிடைக்கும் வகையில் புதியதாக உருவாக்கப்பட்ட tvmcreport.org என்ற இணையதள முகவரியை திருநெல்வேலி, மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஷில்பா பிரபாகர் சதிஷ் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார்.

இதன்பின்னர் மாவட்ட ஆட்சியர் கூறியதாவது:-

திருநெல்வேலி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றுநோய் தடுப்பு நடவடிக்கைகளில் மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. திருநெல்வேலி, மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றுநோய் பாதித்த நபர்கள் மருத்துவ பரிசோதனை அறிக்கையை எளிதாக பெறும் வகையில் திருநெல்வேலி, மருத்துவக்கல்லூரி மூலம் tvmcreport.org என்ற இணையதளம் உருவாக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வெளியிடப்பட்டது.

இதில் மருத்துவ பரிசோதனை மேற்கொண்ட நபரின் பதிவு செய்யப்பட்ட கைபேசி எண்ணை பதிவு செய்து கைபேசி எண்ணிற்கு கிடைக்கப்பெறும் ஒரு முறை கடவுசொல்லை பதிவு செய்தால் சம்பந்தப்பட்ட நபரின் கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் மருத்துவ அலுவலரின் ஒப்புதலுடன் மருத்துவ பரிசோதனை மேற்கொண்ட 24 மணிநேரத்திலிருந்து 36 மணி நேரத்திற்குள் கிடைக்கப்பெறும்.

23.08.2020 முதல் கொரோனா வைரஸ் தொற்றுநோய் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டவர்களின் மருத்துவ அறிக்கையினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். எனவே, கொரோனா மருத்துவ பரிசோதனை மேற்கொண்ட நபர்கள் மேற்படி இணையதளத்தை பயன்படுத்தி கொரோனா மருத்துவ பரிசோதனை அறிக்கையை பெற்றுக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.