தற்போதைய செய்திகள்

நம்பிக்கை மோசடி கட்சி தி.மு.க – முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் சாடல்

சென்னை

நம்பிக்கை மோசடி கட்சி தி.மு.க. என்று முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறினார்.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் 53-வது நினைவு நாளை முன்னிட்டு சென்னை காமராஜர் சாலையில் உள்ள அவரது நினைவிடத்தில் கழகத்தின் சார்பில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது. இதன் பின்னர் கழக அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான டி.ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கேள்வி:- சமூக நீதி கூட்டமைப்பில் இணைய வேண்டும் என்று முதலமைச்சர் கடிதம் எழுதியுள்ளாரே?

பதில்:- தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தமிழகத்தின் முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு குறிப்பாக ஒரு யுக்தியை கையாளுகிறார். அதாவது மக்களை திசை திருப்புகின்ற யுக்தி அது. ஆட்சிக்கு வருவதற்கு முன்பாக தேர்தல் வாக்குறுதிகளை அள்ளி வீசிவிட்டு ஆட்சிக்கு வந்த பிறகு மக்கள் எதிர்பார்க்கின்ற வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை.

ஆயிரம் ரூபாய் தருவேன் என்று சொன்னது, பெட்ரோல் விலையை குறைப்போம் என்று சொன்னது. இப்படி பல்வேறு வாக்குறுதிகள் உள்ளன. பொங்கல் பரிசு தொகையாக நாங்கள் ரூ.2,500 கொடுத்தோம். இவர்கள் ரூ.3 ஆயிரம் அல்லது 5 ஆயிரம் அளித்திருக்கலாம்.

தமிழகத்திற்கு நீட் தேவையில்லாதது. எங்களுக்கு தான் அதன் சூட்சுமம் தெரியும் என்று மோசடியாக வாக்குறுதிகளை அளித்தார்கள். இது நம்பிக்கை மோசடி. மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற முடியாத இயலாமையை மறக்கடிக்க ரெய்டு நடத்துவார்கள். ஊடகங்கள் அதை பற்றியே பேச வேண்டும். கழக முன்னோடிகள், முன்னாள் அமைச்சர்கள் மீது
வழக்கு போடுவது ஒரு யுக்தி. இவர்கள் தேர்தல் காலத்தில் தமிழ் இனம், சமூக நீதி என்று எடுத்து கொள்வார்கள்.

இந்த இரண்டு விஷயத்தை சொல்வதற்கு இவர்களுக்கு என்ன யோக்கியதை உள்ளது? அருகதை உள்ளது? என்ன தகுதி
உள்ளது? முள்ளிவாய்காலில் 1.50 லட்சம் பேரை படுகொலை செய்தார்கள். இது உலக தமிழர்கள்மத்தியில் ஆறாத வடுவாக உள்ளது. இந்த நிலைமை தமிழ் இனத்திற்கு ஏற்பட்டதற்கு யார் காரணம்? தி.மு.க., காங்கிரஸ் கட்சி தானே அன்றைக்கு இருந்தது.

அதுபோல சமூக நீதி என்று சொல்கிறார். இன்றைக்கு சமூக நீதிக்கு ஆபத்தா? இதனை எல்லாம் நாங்கள் பாதுகாத்து வைத்துள்ளோம். பிற்படுத்தப்பட்டோருக்கு 50 சதவீத இடஒதுக்கீட்டை உருவாக்கியது யார்? புரட்சித்தலைவர்.

ஆதிதிராவிடருக்கும், பழங்குடியினருக்கும் 18 சதவீதம் அன்றைக்கே உருவாக்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல் உச்சநீதிமன்றம் மண்டல் கமிஷன் மூலமாக இந்தியா முழுவதும் 50 சதவீதத்திற்கு மேல் இடஒதுக்கீடு இருக்கக்கூடாது என்று சொல்லும்போது, அப்போது புரட்சித்தலைவி அம்மா அவர்கள் வெகுண்டெழுந்தார். அப்போது நான் பிற்படுத்தபடுத்தப்பட்டோர் அமைச்சர்.

30 பிற்படுத்தப்பட்டோருக்கு, 20 மிகவும் பிற்படுத்தபட்டோருக்கு, ஆதிதிராவிடருக்கு 18. பழக்குடியினருக்கு 1 சதவீதம்
என ஒட்டு மொத்தமாக 69 சதவீதத்திற்கு பாதுகாப்பு வழங்கிய ஒரே முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள். அன்றைக்கு அனைத்து மாநில முதலமைச்சர்களும் கடிதம் எழுதினார்கள்.

பின்னர் பிரதமரை சந்தித்து அதனைத் தொடர்ந்து பாராளுமன்றத்தில் சட்டம் இயற்றி அதன் அடிப்படையில் 69 சதவீத இடஒதுக்கீட்டிற்கு இந்திய அரசியலமைப்பின் 9-வது அட்டவணையில் இடம்பெற செய்து பாதுகாப்பு வழங்கியதன் காரணமாக இன்றைக்கு 69 சதவீத இடஒதுக்கீட்டை நாம் பெற்றுக் கொண்டிருக்கிறோம்.

இதற்கு யார் காரணம்? கருணாநிதி காரணமா? தி.மு.க. தலைவர் ஸ்டாலின் காரணமா? புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரும், புரட்சித்தலைவி அம்மா அவர்களும் தானே இதற்கு காரணம். இதற்காக ஸ்டாலினுடன் இன்றைக்கு இருக்கும் வீரமணி
அன்றைக்கு அம்மாவுக்கு சமூக நீதி காத்த வீராங்கனை என்று பட்டம் அளித்தாரே. சமூக நீதி, சமூக நீதிக்கான திட்டங்கள் என்றாலே அது நாங்கள் தான். இவர்கள் என்ன கொண்டு வந்தார்கள், சொல்ல முடியுமா?

தற்போது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிறது. அரசு மீது உள்ள கடுமையான கோபத்தில் இருக்கும் மக்கள் அதிருப்தியை திசை திருப்ப வேண்டும் என்பதற்காக எடுத்திருக்கும் யுக்தி இது. தூங்கி எழுந்தவுடன் அவருக்கு (ஸ்டாலினுக்கு) இன்றைக்கு சமூக நீதி கூட்டமைப்பு என்று நினைவு வந்து விட்டது. சமூக நீதிக்கு பாதுகாப்பு வழங்கிய அரசு புரட்சித்தலைவர் மற்றும் புரட்சித்தலைவி அரசு தான். இப்போது சட்டம்- ஒழுங்கு சரியில்லை. அராஜகம், அட்டூழியம், கட்டப்பஞ்சாயத்து, தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்களின் அத்துமீறல்கள் அதிகரித்துள்ளது.

இன்றைக்கு உயர்நீதிமன்றம் ஒரு உத்தரவு பிறப்பித்துள்ளது. அமைச்சர் செஞ்சி மஸ்தான், நகராட்சி ஆணையாளர், வேட்பாளர்
ஆஜராக வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளது. தேர்தல் நடக்காத நிலையில் நகர்மன்ற உறுப்பினர் என்று கல்வெட்டு போட்டு அதனை அமைச்சர் செஞ்சி மஸ்தான் திறந்து வைக்கிறார்.

இதற்கு உயர்நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது. இவர்கள் தேர்தல் வெற்றியை நிர்ணயம் செய்து விட்டார்களா? தேர்தல் ஆணையம் டம்மியா? தேர்தல் ஆணையம் என்று ஒன்று
இல்லையா? வெற்றியை நிர்ணயம் செய்து விட்டு தேர்தலை நடத்துவார்களா? இதற்கு தேர்தல் ஆணையம் பதில் சொல்ல வேண்டும்.

6.50 கோடி அளவுக்கு பண பரிவர்த்தனை நடந்துள்ளது என்று அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீது அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்து சொத்துக்களை முடக்கியுள்ளது. இவர்கள் யோக்கியர்களா? இதேபோல் பெரும்பாலான அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டு உள்ளது.

அவர்கள் விரைவில் கம்பி எண்ணும் நாள் நிச்சயம் வரும். 2024 பாராளுமன்ற தேர்தல், 2026 சட்டமன்ற தேர்தல் ஆகியவற்றில் கழகத்தின் தலைமையிலான கூட்டணி தான் வெற்றி பெறும். தி.மு.க.வுடன் சேர்ந்து ஒரு தமிழினத்தை கொன்று விட்டு, தமிழன் தமிழன் என்று ராகுல்காந்தி சொன்னால் தமிழர்கள் நம்ப மாட்டார்கள். அவ்வாறு தமிழன் என்று சொல்ல அவருக்கு எந்த முகாந்திரமும் இல்லை.

இவ்வாறு முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறினார்.