பயந்து நடுங்குகிற கோழைகள் தி.மு.க.வினர்,கழக நிர்வாகிகள் அச்சமின்றி மக்களிடம் வாக்கு கேட்பார்கள் – எதிர்க்கட்சி தலைவர் பேச்சு

சென்னை
மக்களை நேரில் சந்திக்க பயந்து அச்சப்படுகின்றனர் தி.மு.க.வினர். ஆனால் கழக நிர்வாகிகள் நெஞ்சு நிமிர்த்தி மக்களிடம் வாக்கு கேட்பார்கள் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி கூறினார்.
கழக இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி நேற்று மாலை சென்னை விரும்பாக்கத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பங்கேற்று சென்னை மாநகராட்சி வார்டு கவுன்சிலர் பதவிகளுக்கு போட்டியிடும் கழக வேட்பாளர்களை ஆதரித்து இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்து பேசியதாவது:-
தி.மு.க. அரசு மக்களிடையே மிகப்பெரிய அதிருப்தியை சம்பாதித்துள்ளது. இது ஒரு நல்ல சந்தர்ப்பம். அமாநகராட்சி பணிகள் அத்தனையுமே, மேயருக்கு உட்பட்டது. நீங்கள் சட்டமன்ற உறுப்பினராக, நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கலாம். ஆனால் தேர்வு செய்யப்படும் மாமன்ற உறுப்பினர்களுக்கு மண்டல தலைவரையும், மேயரையும் தேர்வு செய்யும் பொறுப்பு உள்ளது. நீங்கள் எல்லாம் வெற்றி பெற்றால் தான் கழகத்தை சேர்ந்தவர் மேயராக வரமுடியும். மண்டல குழு தலைவராக முடியும்.
நாட்டில் எத்தனையோ துறைகள் இருக்கின்றன. உள்ளாட்சித்துறை என்பதுதான் முதல் துறை. இந்த உள்ளாட்சித்துறை மூலமாகத் தான் நாட்டு மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள், குடிநீர் வசதி, சாலை வசதி, தெருவிளக்கு வசதி, வடிகால் வசதி, குப்பைகளை அகற்றுதல் இப்படி மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யும் பணி மாமன்ற உறுப்பினராகும் உங்களுக்கு இருக்கிறது.
இப்படி முதன்மையான இந்த துறைக்கு தேர்தல் நடைபெறுகிறது. தேர்தல் மூலமாக வெற்றிபெற்று மேயர் பதவியை கைப்பற்ற வேண்டும். மண்டல குழு பொறுப்பையும் நாம் பெறவேண்டும். ஏனென்றால் இந்த தி.மு.க. ஆட்சியில் எந்த நன்மையும் மக்களுக்கு கிடைக்கவில்லை. திறமையான அரசு இல்லை.
தர்மம், நீதியோடு நாம் தேர்தலை நடத்தினோம். இப்போது தி.மு.க.வினர் பலபேரை மிரட்டி வாபஸ் வாங்க வைத்துள்ளனர். இதுவா ஜனநாயகம். இதற்கு தேர்தலில் நிற்க வேண்டிய அவசியமே இல்லையே? மக்களை சந்திக்க அச்சப்பட்டு நடுங்குகிற கட்சி
தி.மு.க.. கோழைத்தனமாக இருக்கிறார்கள். கழகத்தினர் நெஞ்சை நிமிர்த்தி மக்களை சந்தித்து வாக்கு கேட்பார்கள். நம்மிடம் நேர்மை, ஜனநாயகம் உள்ளது.
நிறைய திட்டங்களை நிறைவேற்றியுள்ளோம். மக்களிடம் நன்மதிப்பை பெற்றுள்ளோம். அதனால் அச்சமின்றி மக்களை சந்திக்கிறோம். ஆனால் தி.மு.க. தோல்வி பயத்தில் வெற்றிவாய்ப்பை இழந்து விடுவோம் என்ற அச்சத்தின் அடிப்படையில் குறுக்கு வழியில் பல இடங்களில் கழக வேட்பாளர்களை மிரட்டி வாபஸ் வாங்க வைத்துள்ளனர். தி.மு.க. என்றாலே பித்தலாட்ட கட்சி. சென்னை மாநகரத்தை பொறுத்தவரையில் நீங்கள் விழிப்போடு இருந்து செயல்பட வேண்டும். எதற்கும் அஞ்சும் நிலைமை நமது கட்சியினருக்கு இருக்கக்கூடாது.
கொரோனா காலத்தில் 10 மாத காலம் விலையில்லா பொருட்களை வழங்கிய அரசு அம்மாவின் அரசு. அம்மா
உணவகத்தின் மூலம் தினந்தோறும் 7 லட்சம் பேருக்கு உணவு அளித்தோம். இன்றைக்கு அம்மா உணவக திட்டத்தை முடக்கப்
பார்க்கிறார்கள். பணியார்களை குறைத்துள்ளார்கள். பொருட்களை குறைத்து விட்டார்கள். இதற்கு மக்கள் தகுந்த பாடத்தை புகட்டுவார்கள்.
அம்மா அவர்கள் பொங்கல் தொகுப்பில் முதற்கட்டமாக 100 ரூபாய், அரிசி, சர்க்கரை, கரும்பு அளித்தார். அம்மா அரசில் தொடர்ந்து நான் முதலமைச்சராக இருந்தபோது கடந்த ஆண்டுக்கு முந்தைய ஆண்டு எல்லா குடும்ப அட்டைக்கும் ஆயிரம் ரூபாய் பொங்கல் பரிசு அளித்தோம். கடந்த ஆண்டு ரூ.2,500 அளித்தோம். இந்த ஆண்டு 21 பொருட்களுடன் பொங்கல் தொகுப்பு என்று முதல்வர் அறிவித்தார். 21 பொருட்கள் கிடைத்ததா? 16 பொருட்கள் கிடைத்தது. அதுவும் தரமானதாக
இல்லை. பொங்கல் தொகுப்பு என்ற பெயரிலே தி.மு.க. கொள்ளை அடித்தது தான் மிச்சம். சுமார் ரூ.500 கோடி அளவுக்கு ஊழல் நடைபெற்றுள்ளது.
வெளி மாநிலத்திலிருந்து வெல்லத்தை வாங்கியுள்ளார்கள். மக்கள் வயிற்றில் அடித்துள்ளார் ஸ்டாலின். புளியில் பல்லி இருந்ததாக ஒருவர் பதிவிட்டார். அவர் மீது ஜாமீனில் வெளி வர முடியாத அளவிற்கு வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனால் மனமுடைந்த
அவரது மகன் தற்கொலை செய்து கொண்டார். தவறு செய்தால் தட்டிக் ேகட்கும் உரிமை மக்களிடம் உள்ளது. இது ஜனநாயக நாடு. சர்வாதிகார நாடு கிடையாது. தி.மு.க.விடம் ஜனநாயகத்தை எதிர்பார்க்க முடியாது.
இவ்வாறு கழக இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி பேசினார்.
இக்கூட்டத்தில் கழக மகளிர் அணி செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பா.வளர்மதி, கழக அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.கோகுல இந்திரா, தென்சென்னை தெற்கு மேற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான விருகை வி.என்.ரவி, தென்சென்னை வடக்கு மேற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான தி.நகர் பி.சத்தியா, அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் ஆர்.கமலக்கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.