தற்போதைய செய்திகள்

4,694 நபர்களுக்கு ரூ.57.49 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவி – அமைச்சர்கள் வழங்கினர்

திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்ட கூட்டுறவுத்துறையின் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 4,694 நபர்களுக்கு ரூ.57.49 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ, ஊரகத் தொழில்துறை அமைச்சர் பா.பென்ஜமின், தமிழ் ஆட்சி மொழி மற்றும் தமிழ் பண்பாட்டுத்துறை அமைச்சர் கே.பாண்டியராஜன் ஆகியோர் வழங்கினர்.

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில், கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ, ஊரகத் தொழில்துறை அமைச்சர் பா.பென்ஜமின், தமிழ் ஆட்சி மொழி மற்றும் தமிழ் பண்பாட்டுத்துறை அமைச்சர் க.பாண்டியராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதில் காஞ்சிபுரம் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி மற்றும் திருவள்ளுர் மாவட்ட தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் சார்பில், கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் இல.சுப்பிரமணியன், மாவட்ட ஆட்சித் தலைவர் மகேஸ்வரி ரவிக்குமார் ஆகியோர் முன்னிலையில் மகளிர் சுய உதவிக் குழுக்களை சார்ந்த 1,584 உறுப்பினர்களுக்கு ரூ.631.15 லட்சம், சுய உதவிக்குழுக்களைச் சேர்ந்த 594 உறுப்பினர்களுக்கு கோவிட்-19 சிறப்பு கடனுதவித் திட்டத்தின் கீழ் ரூ.29.70 லட்சம்,

மாற்றுத்திறனாளிகள் கடனாக 27 நபர்களுக்கு ரூ. 8.50 லட்சம், சிறு வணிகக் கடனாக 362 நபர்களுக்கு ரூ.109.36 லட்சம், மத்திய காலக் கடனாக (கறவை மாடுகள் வளர்ப்பு) 114 விவசாயிகளுக்கு ரூ.63.90 லட்சம், பயிர்கடனாக 1,289 விவசாயிகளுக்கு ரூ. 1,033.65 லட்சம், மத்தியக் கால கடனாக (டிராக்டர் கடன்) 16 நபர்களுக்கு 129.60 லட்சம் மற்றும் பல்வேறு உதவி திட்டங்களின் கீழ் 4,694 நபர்களுக்கு ரூ.57.49 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர்கள் செல்லூர் கே.ராஜூ, பா.பென்ஜமின், க.பாண்டியராஜன் ஆகியோர் வழங்கினர். பின்னர் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ, திருவள்ளூர் மண்டல கூட்டுறவுத் துறையின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

இந்த விழாவில் அமைச்சர் பா.பென்ஜமின் பேசுகையில், அம்மா அவர்கள் வழியில் செயல்படும், முதலமைச்சர் பல்வேறு துறைகளில் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். அந்த வகையில் கூட்றவுத்துறையின் சார்பாக திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்திய திருநாட்டிலேயே திருவள்ளூர் மாவட்டம் திரூர் என்ற கிராமத்தில் தான் 1904ம் ஆண்டு விவசாயிகளுக்கென்று கூட்டுறவு கடன் சங்கம் ஆரம்பிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டது. தற்போது திருவள்ளுர் மண்டலத்தில் 122 தொடக்க வேளாண்மை கடன் சங்கங்ளும், இதர 218 சங்கங்களும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. 29 அம்மா சிறு கூட்டுறவு சிறப்பு அங்காடிகள் சிறப்பாக செய்லபட்டு வருகிறது என்றார்.

பின்னர் அமைச்சர் க.பாண்டியராஜன் பேசுகையில், அம்மா அவர்கள் வழியில் செயல்படும், முதலமைச்சர் சிறப்பான திட்டங்களை வகுத்து செயல்படுத்தி வருகிறார். தமிழ்நாடு மாநிலத்தில் தான் முதல்முறை மகளிர் சுய உதவிக்குழுக்களை அம்மா அவர்கள் தான் துவக்கி வைத்து கடன் உதவிகளை வழங்கினார். இதனால் மகளிர் பொருளாதார மேம்பாடு அடைந்துள்ளனர். அவர்கன் தங்களது தேவைகளை தாங்களே நிறைவேற்றிக் கொள்ள இது பெருந்திட்டமாகும் என்றார்.