தற்போதைய செய்திகள்

மக்களுக்கு தி.மு.க. அரசு வேட்டு வைத்து விட்டது- எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி சாடல்

சென்னை

வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களுக்கு தி.மு.க. அரசு வேட்டு வைத்து விட்டது என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி கூறினார்.

கழக இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி நேற்று மாலை சென்னை எழும்பூரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பங்கேற்று சென்னை மாநகராட்சி வார்டு கவுன்சிலர் பதவிகளுக்கு போட்டியிடும் கழக வேட்பாளர்களை ஆதரித்து பேசியதாவது:-

அம்மாவுடைய அரசு இருக்கின்ற பொழுது கொரோனா வைரஸ் தொற்று இருந்தது, அப்பொழுது பல மக்களுக்கு வேலை இல்லாமல் இருந்தது. மக்கள் பாதிக்கக்கூடாது என்பதற்காக ஏற்கனவே நியாயவிலை கடைகளில் குடும்ப அட்டைக்கு 30 கிலோ அரிசி கொடுக்கப்பட்டது.

அதை 60 கிலோ அரிசியாக கொடுத்தோம். இது மட்டுமில்லாமல் சர்க்கரை, பருப்பு 10 மாத காலம் கொடுத்தோம். கொரோனா தொற்று காலத்தில் ஆயிரம் ரூபாய் கொடுத்தோம். கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கும் ஆயிரம் ரூபாய் கொடுத்தோம், மக்கள் மீது கவனம் செலுத்தாதது தி.மு.க. அரசு, ஒரு பொம்மை அரசாங்கம், ஒரு பொம்மை முதலமைச்சர் இந்த நாட்டை ஆண்டு கொண்டிருக்கிறார்.

தி.மு.க. அரசு ஓட்டு போட்ட மக்களுக்கு வேட்டு வைத்து விட்டது. ஓட்டு போட்ட மக்களை மறந்து விட்டனர். இது அவர்களுடைய சுயநலம், அனைத்தும் விளம்பர அரசியல், ஸ்டாலின் விளம்பர பிரியர், அவருக்கு விளம்பரம் இல்லை என்றால் தூக்கம் வராது. தினமும் பத்திரிகையிலும், ஊடகங்களிலும் வரவேண்டும். இதனால் மக்களுக்கு என்ன நன்மை? ஆனால் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். காலத்திலும் சரி, புரட்சித்தலைவி அம்மா காலத்திலும் சரி, நான் முதலமைச்சராக இருக்கும்போதும் சரி இப்படி செய்ததில்லை.

நாங்கள் உழைக்கிறோம், உழைக்கின்ற அந்த உழைப்புக்கேற்ற திட்டங்களை மக்களுக்கு கொடுக்கிறோம், அதன் மூலம் மக்கள் நன்மை பெறுகிறார்கள் அதை நாங்கள் தொலைக்காட்சிகளிலும், பத்திரிகைகளிலும் காட்டுவோம்.

ஸ்டாலின் 525 தேர்தல் அறிவிப்புகளை வெளியிட்டு விட்டு, தற்போது 70 சதவீத அறிவிப்புகளை நிறைவேற்றி விட்டதாக கூறுகிறார். தேர்தல் அறிக்கையிலே குறிப்பிட்டிருந்த எந்த அறிவிப்புகளையும் நிறைவேற்றாத அரசாங்கம் தி.மு.க. அரசாங்கம். அறிவித்த அத்தனை தேர்தல் அறிவிப்புகளையும் சிந்தாமல் சிதறாமல் நிறைவேற்றிய அரசாங்கம் அம்மாவின் அரசாங்கம்.

இவ்வாறு கழக இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி பேசினார்.