தற்போதைய செய்திகள்

ரூ.51 லட்சத்தில் கூடுதல் வகுப்பறை கட்டட பணி – மாநில திட்டக்குழுத்துணைத்தலைவர் சி.பொன்னையன் ஆய்வு

கிருஷ்ணகிரி

போலுப்பள்ளி கஸ்தூரிபா பாலிகா உண்டு உறைவிடப்பள்ளியில் ரூ.51 லட்சம் மதிப்பில் புதிய கூடுதல் வகுப்பறை கட்டட கட்டுமான பணியை மாநில திட்டக்குழுத் துணைத்தலைவர் சி.பொன்னையன் நேரில பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கிருஷ்ணகிரி மாவட்டம், போலுப்பள்ளி கஸ்தூரிபா பாலிகா உண்டு உறைவிடப்பள்ளி, பீமாண்டப்பள்ளியில் தொகுப்பு பால் குளிரூட்டும் மையம் மற்றும் சூளகிரி கொல்லப்பள்ளியில் கஸ்தூரிபா பாலிகா உண்டு உறைவிடப்பள்ளி ஆகியவற்றை மாநில திட்டக்குழுத் துணைத் தலைவர் சி.பொன்னையன் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இவ்வாய்வின் போது மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் சு.பிரபாகர் முன்னிலை வகித்தார்.

மாநில திட்டக்குழுத் துணைத் தலைவர் சி.பொன்னையன் முன்னதாக போலுப்பள்ளி கஸ்தூரிபா பாலிகா உண்டு உறைவிடப்பள்ளியில் மாநில சமச்சீர் வளர்ச்சி நிதியிலிருந்து ரூ.51 லட்சம் மதிப்பில் புதியதாக கட்டப்பட்டுள்ள கூடுதல் வகுப்பறை கட்டடங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதைத்தொடர்ந்து சமையல் அறை, இருப்பறை, உணவு உட்கொள்ளும் அறை, மூலிகை தோட்டம் மற்றும் நூலக அறையை பார்வையிட்டார்.

மேலும் வேப்பனப்பள்ளி ஒன்றியத்திற்குட்பட்ட பீமாண்டப்பள்ளியில் பால்உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கம் சார்பாக ரூ.13.50 – லட்சம் மதிப்பில் 5000 லிட்டர் கொள்ளளவு கொண்ட தொகுப்பு பால் குளிரூட்டும் மைய கட்டுமான பணிகளையும், தொடர்ந்து சூளகிரி ஒன்றியத்திற்குட்பட்ட கொல்லப்பள்ளியில் இயங்கி வரும் கஸ்தூரிபா பாலிகா உண்டு உறைவிடப்பள்ளி வளாகத்தில் ரூ.61 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள கூடுதல் வகுப்பறை கட்டடங்கள் என மொத்தம் ரூ.1 கோடியே 25 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் கூடுதல் பள்ளி வகுப்பறை கட்டடம் மற்றும் பால் குளிரூட்டும் மைய கட்டட கட்டுமான பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்பு ஊட்டசத்து தோட்டம், நூலகம், வகுப்பறைகள், மூலிகை தோட்டம் ஆகியவற்றை பார்வையிட்ட குழு துணைத்தலைவர் இப்பள்ளிகளுக்கு தேவையான வசதிகள் மேற்கொள்ள நிதி தேவைபடின் உடனடியாக வழங்குவதாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் தெரிவித்தார்.

இவ்வாய்வின் போது மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க தலைவர் பி.கே.குப்புசாமி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் இரா.முருகன், மாவட்ட திட்ட உதவி இயக்குநர் எல்.கே.சாந்தா, புள்ளியில் அலுவலர் கே.ஆதிமூலம், உதவி திட்ட அலுவலர் டி.எஸ்.நாராயணன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மு.சேகர் மற்றும் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.