பொய்யான வாக்குறுதிகளால் தி.மு.க. மக்கள் செல்வாக்கை இழந்து விட்டது – முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் பேட்டி

சென்னை
பொய்யான வாக்குறுதிகளால் தி.மு.க. மக்கள் செல்வாக்கை இழந்து விட்டது என்று முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் கூறினார்.
கழக இலக்கிய அணி செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வைகைச்செல்வன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பொய்யான வாக்குறுதிகளை அள்ளிவிட்டு ஆட்சியில் அமர்ந்த தி.மு.க. தேர்தல் வாக்குறுதிகளை பற்றி கேள்வி எழுப்பினால், பதில் சொல்ல தெரியாமல் திணறி வருவது மக்களை முகம் சுளிக்க வைத்திருக்கிறது. அதுமட்டுமல்ல, நீட்டுக்கு விலக்கு, ஏழு பேர் விடுதலை, நகைக்கடன் தள்ளுபடி, குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை, கேஸ் மானியம் தரப்படும் என்ற வாக்குறுதி அனைத்தும் காற்றோடு காற்றாக கரைந்து விட்டது. கடந்த 10 ஆண்டுகால ஆட்சியில் மக்களுக்கு பாதுகாப்பு அரணாக திகழ்ந்தது கழக அரசு.
தற்போது மிகப்பெரிய எதிர்பார்ப்பை நினைத்து வாக்களித்த மக்களுக்கு தி.மு.க அரசு ஏமாற்றத்தையே பரிசாக அளித்து வருகிறது. சட்டமன்ற தேர்தலில் கழகத்திற்கும், தி.மு.க.விற்கும் 3 சதவீதம் மட்டும்தான் வாக்கு வித்தியாசம். தி.மு.க அரசின் பொய்யான வாக்குறுதிகளை நம்பி வாக்களித்த மக்கள் இன்று அவதிப்படுகின்றனர்.
தி.மு.க.வினர் எப்போதெல்லாம் தேர்தல் வருகிறதோ, அப்போதெல்லாம் கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிட்டு, மக்களிடம் வாக்குகளை அறுவடை செய்து வெற்றி பெற்ற பிறகு, கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் ஏமாற்றுவதையே வாடிக்கையாக கொண்டுள்ளனர்.
தி.மு.க ஆட்சிக்கு வந்த உடன், குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று வாக்குறுதிகளை அளித்தார்கள். ஆனால், அந்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் நிதிச்சுமையை காரணம் காட்டுகின்றனர். தி.மு.க தேர்தல் அறிக்கையில் 100 நாள் வேலை திட்டம் 150 நாளாக உயர்த்தப்படும் என்று அறிவித்தார்கள். ஆனால், இன்று வரை அதற்கான எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
முதியோருக்கு உதவித்தொகை உயர்த்தி வழங்கப்படும், கல்விக்கடன் ரத்து செய்யப்படும் என்றெல்லாம் வாக்குறுதிகளை அளித்தார்கள். ஆனால், எதுவும் நிறைவேற்றப்படவில்லை.
5 பவுனுக்கு குறைவாக நகைகள் வைத்திருந்தால், உடனடியாக தேசிய மயமாக்கப்பட்ட வங்கியிலும், கூட்டுறவு சங்கத்திலும் அடமானம் வையுங்கள் என்று மு.க.ஸ்டாலினும், அவரது மகன் உதயநிதிஸ்டாலினும் சொன்னதை நம்பி ஏராளமானோர் நகைகளை அடமானம் வைத்து கடன் பெற்றுள்ளனர்.
தற்போது தகுதியானவர்கள், தகுதியற்றவர்கள் என்று நிராகரிக்கப்பட்டுள்ளது. தமிழக மக்களிடையே தி.மு.க அரசின் வாக்குறுதிகள் அனைத்தும் அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது. இதற்கெல்லாம் தக்க பதிலடி கொடுக்கும் வகையில், வரும் காலங்களில் தமிழக மக்கள் தி.மு.க..வுக்கு சரியான பாடம் புகட்டுவார்கள்.
கடந்த 10 ஆண்டு கால கழக ஆட்சியில் அம்மா அவர்கள் அறிவித்த அனைத்து மக்களின் நலன் சார்ந்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றியிருக்கிறோம். பொய்யான வாக்குறுதிகளை அளித்ததால் கடந்த 9 மாத காலங்களில் தன்னுடைய செல்வாக்கை இழந்து விட்டது தி.மு.க.. புரட்சித்தலைவி அம்மா அவர்களின் லட்சிய கனவை நிறைவேற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் ஒருங்கிணைப்பாளர்கள் அறிவித்திருக்கின்ற வேட்பாளர்களை வெற்றி பெற செய்து கழகத்திற்கு வெற்றிமாலை சூட்டுவோம்.
இவ்வாறு முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் கூறினார்.