தற்போதைய செய்திகள்

வட்டார வளர்ச்சி அலுவலரை கண்டி எம்.எல்.ஏ- கழக நிர்வாகிகள் மறியல்

விழுப்புரம்,

அவமதிப்பு செய்த வட்டார வளர்ச்சி அலுவலரை கண்டித்து கழக சட்டமன்ற உறுப்பினர் தலைமையில் கழகத்தினர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இச்சம்பவம் திண்டிவனம் அருகே ஒலக்கூரில் பரபரப்பை ஏற்படுத்தியது.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த ஒலக்கூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் சட்டமன்ற உறுப்பினர் அர்ஜூனன் திட்டப்பணிகள் குறித்து கேட்டறிவதற்காக வட்டார வளர்ச்சி அலுவலர் சீதாலட்சுமியை சந்திக்க வந்தார். அப்போது அவர் அங்கு இல்லை. இதுபற்றி வட்டார வளர்ச்சி அலுவலருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் சட்டமன்ற உறுப்பினரை அவமதிக்கும் நோக்கில் அவர் வருவது தெரிந்தும் கூட வட்டார வளர்ச்சி அலுவலர் வெகுநேரமாகியும் வரவில்லை.

மேலும் தொலைபேசியில் தொடர்பு கொண்ட போது சிறிது நேரத்தில் வருவதாக கூறிய வட்டார வளர்ச்சி அலுவலர் அப்போதும் வெகுநேரமாகியும் வரவில்லை. இதனால் ஆவேசம் அடைந்த கழக நிர்வாகிகள், வட்டார வளர்ச்சி அலுவலர் சீதாலட்சுமியின் அவமதிக்கும் செயலை கண்டித்து சட்டமன்ற உறுப்பினர் அர்ஜூனன் தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு நிலவியது.

தகவலறிந்து வந்த போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். வட்டார வளர்ச்சி அலுவலரை வரவழைக்க ஏற்பாடு செய்வதாக கூறினர். இதையடுத்து சாலை மறியலை சட்டமன்ற உறுப்பினர் அர்ஜூனன் தலைமையில் கழகத்தினர் கை விட்டனர். போராட்டத்திற்கு பிறகு அங்கு வந்த வட்டார வளர்ச்சி அலுவலர் சீதாலட்சுமி கழக நிர்வாகிகள் முற்றுகையிட்டு சட்டமன்ற உறுப்பினரை அவமதிக்கும் செயலை செய்கிறீர்களே இது நியாயமாக இருக்கிறது என்று சரமாரியாக கேள்வி கேட்டனர். ஒரு வழியாக காவல்துறையினரின் சமாதானத்திற்கு பின்னர் சட்டமன்ற உறுப்பினர் அர்ஜூனன், வட்டார வளர்ச்சி அலுவலரிடம் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து கேட்டறிந்தார்.

மேலும் பணிகளை ஒருதலை பட்சமாக வழங்க கூடாது. அதிகாரிகள் நியாயமாக நடந்து கொள்ள வேண்டும் என்று சட்டமன்ற உறுப்பினர் அர்ஜூனன், வட்டார வளர்ச்சி அலுவலருக்கு அறிவுறுத்தினார். இந்நிகழ்வின்போது உடன் முன்னாள் ஒன்றிய கழக செயலாளர்கள் ராஜேந்திரன், பன்னீர், கழக நிர்வாகிகள் ராம்குமார், பிரதாப், குட்டி, நீலமேகம், முருகன் மற்றும் பலர் உடனிருந்தனர்.