தற்போதைய செய்திகள்

பெண்களுக்கு பாதுகாப்பு அரணாக அம்மாவின் அரசு திகழ்கிறது – அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பெருமிதம்

மதுரை

தி.மு.க. ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு கிடைக்காத நிலை இருந்தது. ஆனால் அம்மாவின் அரசு பெண்களுக்கு பாதுகாப்பு அரணாக திகழ்கிறது என்று அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.

மதுரை மாநகர் மாவட்ட மகளிர் அணிக்கான நேர்காணல் நடைபெற்றது. இதில் மதுரை மாநகர் மாவட்டச் செயலாளரும், கூட்டுறவு துறை அமைச்சருமான செல்லூர் கே.ராஜூ சிறப்புரையாற்றினார். இதில் மாவட்ட கழக துணைச் செயலாளர் சி.தங்கம், மாவட்ட கழக பொருளாளர் ஜெ.ராஜா, அனைத்துலக எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் எம்.எஸ். பாண்டியன், பொதுக்குழ உறுப்பினர் சக்தி மோகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பேசியதாவது;-

இந்தியாவில் எண்ணற்ற இயக்கங்கள் உள்ளன. அதில் பெண் குலத்திற்கு அதிக திட்டங்களை செய்த இயக்கம் என்றால் ஒரே இயக்கம் நமது இயக்கம் ஆகும்.புரட்சித்தலைவி அம்மா பல்வேறு திட்டங்களை பெண்களுக்காக செய்தார்கள் குறிப்பாக தொட்டில் குழந்தை திட்டம், பெண் கமாண்டோ படைகள், மகளிர் காவல் நிலையங்கள், மகளிர் சுய உதவி குழுக்கள், கிராமபுற ஏழைப் பெண்களுக்கு விலையில்லா கறவை மாடுகள் மற்றும் ஆடுகள், ஒரு கோடியே 80 லட்சம் குடும்பங்களுக்கு விலையில்லா மிக்சி, கிரைண்டர், மற்றும் மின்விசிறி திட்டங்கள், கர்ப்பிணி பெண்களுக்கு உதவிதொகை, தாலிக்கு தங்கம் திட்டம், இரண்டு பெண்கள் குழந்தைகள் பிறந்தால் வைப்புநிதி, அதேபோல் தாயாரின் பெயரையும் இன்சியலாக போட்டுக் கொள்ளலாம் என்று அறிவித்தார் அதுமட்டுமல்லாது உள்ளாட்சி தேர்தலில் பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீட்டை அம்மா அறிவித்தார்.

அம்மா அறிவித்தபடி நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் பெண்களுக்கு 50 சதவீத ஒதுக்கீட்டை முதல்வர் மற்றும் துணை முதல்வர் செயல்படுத்தி அம்மாவின் கனவை நனவாக்கினார். அம்மா தேர்தல் அறிக்கையில் தாலிக்கு 4 கிராம் வழங்கப்படும் தங்கம் 8 கிராமமாக உயர்த்தி வழங்கப்படும் என்று அறிவித்தார். அம்மாவின் வழியில் ஒரு சிறந்த ஆட்சியை நடத்திவரும் நமது முதல்வரும், துணை முதல்வரும், அம்மாவின் தேர்தல் அறிக்கையை நனவாக்கும் வகையில் தற்போது 8 கிராம் தங்கத்தை வழங்கி வருகின்றனர்.

அதேபோல் அம்மா அவர்கள் தேர்தல் அறிக்கையில் கூறியபடி உழைக்கும் பெண்களுக்கு மானிய விலையில் இருசக்கர வாகனம் வழங்கும் திட்டத்தினை அம்மா பிறந்தநாளன்று பாரதப்பிரதமர் மூலம் முதல்வரும், துணைமுதல்வரும் தொடங்கி வைத்து தற்போது செயல்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த 2011 முதல் தற்போது வரை 2 லட்சத்து 20 ஆயிரம் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு இதுவரை 67 ஆயிரம் கோடி ரூபாய் அளவில் கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. இதுபோல் எந்த மாநிலத்திலும் மகளிருக்கு வழங்கப்படவில்லை என்பதை பெருமையுடன் கூறிக் கொள்கிறேன்.

திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு கிடையாது என்ற நிலை இருந்தது. ஆனால் பெண்களுக்கு பாதுகாப்புள்ள ஒரே இயக்கம் நம் இயக்கம் தான். ஆகவே பெண்களாகிய நீங்கள் வரும் தேர்தலில் முக்கிய பங்கு வகிக்க வேண்டும். ஒவ்வொரு வீட்டு இல்லங்களிலும் உள்ள சமையலறை வரை செல்லும் பெண்களை நீங்கள் நான்காண்டு கால அம்மா அரசின் சாதனைத் திட்டங்களை பெண்களிடத்தில் எடுத்துக் கூறி வருகின்ற தேர்தலில் மதுரை மாநகர் மாவட்டத்தில் உள்ள மதுரை மத்தியம், மதுரை மேற்கு, மதுரை தெற்கு, மதுரை வடக்கு ஆகிய 4 தொகுதிகளிலும் கழகம் மாபெரும் வெற்றிபெற அயராது பாடுபட வேண்டும். நீங்கள் இந்த இயக்கத்திற்கு நன்றாக பணியாற்றுங்கள். உங்களுக்கு மிகப்பெரிய எதிர்காலத்தை முதல்வரும், துணை முதல்வரும் உருவாக்கித் தருவார்கள்.

இவ்வாறு அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பேசினார்.