தற்போதைய செய்திகள்

அரியலூர் மாவட்டத்தில் பயனாளிகளுக்கு ரூ.2.71 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் – அரசு தலைமைக்கொறடா தாமரை எஸ்.இராஜேந்திரன் வழங்கினார்

அரியலூர்

அரியலூர் மாவட்டத்தில் பயனாளிகளுக்கு ரூ.2.71 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அரசு தலைமைக் கொறடா தாமரை எஸ்.இராஜேந்திரன் வழங்கினார்.

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட ஆட்சியரின் விருப்ப நிதியிலிருந்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி அரசு தலைமைக்கொறடா தாமரை எஸ்.இராஜேந்திரன் தலைமையில், மாவட்ட ஆட்சித்தலைவர் த.ரத்னா முன்னிலையில் நேற்று நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கீழ் செயல்படுத்தப்படும் தூய்மை பாரத இயக்கத்தின் (ஊரகம்) மூலம் திடக்கழிவு மேலாண்மை திட்டம் அனைத்து 201 கிராம ஊராட்சிகளிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது 5000 குடும்பங்களுக்கு அதிகமாக உள்ள ஊராட்சிகளை தேர்வு செய்து 67 ஊராட்சிகளுக்கு மின்கலம் மூலம் இயக்கப்படும் மூன்றுசக்கர குப்பை வண்டிகள் ரூ.2 கோடியே 25 லட்சம் மதிப்பீட்டில் வழங்கப்பட்டன.

மேலும், மகளிர் திட்டம் சார்பில் வேளாண் இயந்திர வாடகை மையம் அமைத்திட நான்கு ஊராட்சி அளவிலான குழு கூட்டமைப்புகளுக்கு தலா ரூ.10 லட்சம் வீதம் நான்கு கூட்டமைப்புகளுக்கும் மொத்தம் ரூ.40 லட்சம் மானியத்தில் வேளாண் இயந்திரங்கள் வழங்கப்பட்டன.

அதைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சியரின் தன்விருப்ப நிதியிலிருந்து மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 5 நபர்களுக்கு ரூ.2,92,500 மதிப்பிலான இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட இரு சக்கர வாகனங்களும், 7 நபர்களுக்கு ரூ.53,200 மதிப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான மூன்று சக்கர வாகனங்களும், ரூ.45,000 மதிப்புள்ள நவீன செயற்கை கை ஒரு நபருக்கும், 10 நபர்களுக்கு ரூ.57,500 மதிப்பிலான தையல் இயந்திரங்களும், 8 நபர்களுக்கு பல்வேறு உதவி திட்டங்களின்கீழ் ரூ.1,45,000 மதிப்பிலான காசோலைகளையும் என ஆகமொத்தம் 31 பயனாளிகளுக்கு ரூ.5,93,200 மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் அரசு தலைமைக்கொறடா தாமரை எஸ்.இராஜேந்திரன் தெரிவித்ததாவது:-

முதலமைச்சர் கொரோனா பேரிடர் காலத்திலும் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை நிறைவேற்றுவதில் போர்கால அடிப்படையில் பல்வேறு வகையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

அதன் அடிப்படையில், பொது மக்களுக்கு தேவையான உணவு பொருட்கள் அனைத்தும் நியாயவிலைக்கடைகள் மூலமாக முற்றிலும் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலமாக ஊரடங்கு காலத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு தேவைப்படும் உணவு பொருட்கள் 200 நபர்களுக்கு ரூ.2 லட்சம் மதிப்பிலும், 14,174 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.1000 வீதம் ரூ.1,47,74,000 ஒதுக்கீடு செய்யப்பட்டு மாற்றுத்திறனாளிகளின் இல்லங்களுக்கே மாவட்ட நிர்வாகத்தின் மூலமாக சென்று வழங்கப்பட்டுள்ளது.

மேலும், அரியலூர் மாவட்டத்திலுள்ள 2,27,448 தகுதி வாய்ந்த அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ரூ.1000 மும் கொரோனா பேரிடர் நிவாரண நிதியாக வழங்கப்பட்டுள்ளது. எனவே, கொரோனா பேரிடர் காலத்திலும் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வரும் முதலமைச்சர் தலைமையிலான அரசு மக்களின் தேவை அறிந்து சேவை செய்யும் அரசாக செயல்பட்டு வருகிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அரசு தலைமைக்கொறடா தாமரை.எஸ்.இராஜேந்திரன் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஊராட்சிக்குழுத்தலைவர் பொ.சந்திரசேகர், மாவட்ட வருவாய் அலுவலர் இரா.ஜெய்னூலாப்தீன், திட்ட இயக்குநர் (ஊரக வளர்ச்சி முகமை) சு.சுந்தர்ராஜன், ஊராட்சி ஒன்றியக்குழுத்தலைவர் செந்தமிழ்செல்வி, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) பழனிசாமி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் இ.பொம்மி மற்றும் அலுவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.