தற்போதைய செய்திகள்

இணையப் பாதுகாப்பு கட்டமைப்பினை ஏற்படுத்தி தமிழ்நாடு இந்திய நாட்டிற்கே முன்னோடியாகத் திகழ்கிறது -அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேச்சு

சென்னை 

இணையப் பாதுகாப்புக் கட்டமைப்பினை ஏற்படுத்தி தமிழ்நாடு இந்திய நாட்டிற்கே முன்னோடியாகத் திகழ்கிறது என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசினார்.

சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்னாளுமை முகாமில் வருவாய் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், தலைமைச் செயலகத் துறைகளின் தலைமை இணையப் பாதுகாப்பு அதிகாரிகளுக்கான பயிற்சியை துவக்கி வைத்தார்.

கூட்டத்தில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசியதாவது.

இணையமானது தகவல் மற்றும் தொலை தொடர்பு தொழில்நட்பத்துடன் இணைந்து நம் வாழ்க்கை மற்றும் பணிச்சூழலை எந்த அளவிற்கு மாற்றியுள்ளது என்பது நாம் அனைவரும் அறிந்ததே.

கடந்த பத்தாண்டுகளாக தகவல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உள்ளடக்கிய சமூக-பொருளாதார வளர்ச்சி மற்றும் மேம்பாட்டினை செயல்படுத்துவதில் தமிழ்நாடு முன்னணியில் உள்ளது. நாம் பல வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளதோடு, வணிகச் சூழலை மேம்படுத்தியுள்ளோம். குடிமக்கள் அனைவரும் மாநிலத்தின் சேவைகள் அனைத்தையும் இணைய வழியில் பெறுவதை ஏதுவாக்கியுள்ளோம்.

தமிழக அரசு பொதுமக்களுக்கான தனது சேவைகள் மற்றும் செயல்பாடுகள் அனைத்தையும் இணையவழியில் தானியங்கி முறையில் செயல்படுத்துவதால், அதன் பாதுகாப்பு மற்றும் நம்பகத்தன்மையில் கவனம் செலுத்துவது இன்றியமையாததாகிறது. மாநில தரவு மையம் அனைத்து தொழில்நுட்ப நடவடிக்கைகள் மற்றும் தரவுகளின் தலைமையிடமாக உள்ளது. ஆகவே, இந்தச் செயல்பாடுகள் மற்றும் தரவுகளின் பாதுகாப்பானது மிக மிக முக்கியமானதாகிறது.

தமிழ்நாடு அரசின் தகவல் தொழில்நுட்பத் துறையின் அறிவுறுத்தலின்படி, தமிழ்நாடு மின்ஆளுமை முகமை மற்றும் தமிழ்நாடு மின்னணு நிறுவனம் ஆகியவை, தேசிய தகவல் மையம் , செட்ஸ் , சி-டாக் ஆகிய நிறுவனங்களின் இணையப் பாதுகாப்பு நிபுணத்துவத்தைப் பயன்படுத்தி இந்த தமிழ்நாடு இணையப் பாதுகாப்புக் கட்டமைப்பினை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் தமிழ்நாடு இந்திய நாட்டிற்கே ஒரு முன்னோடியாகத் திகழ்கிறது. தமிழக அரசு நிறுவவுள்ள தமிழ்நாடு இணையப் பாதுகாப்பு கட்டமைப்பானது தேசியத்தரத்தில், உலகெங்கிலும் உள்ள சிறந்த நடைமுறைகளுக்கு ஏற்பவும் செயல்படும்.

தகவல் உள்கட்டமைப்பினை பாதுகாப்பதன் மூலம் நெருக்கடி காலங்களிலும் அரசுத்துறைகளின் செயல்பாடுகள் தொடர்வதையும், குடிமக்களின் தரவுகளின் மீதான தாக்கம் குறைந்தபட்ச மற்றும் ஏற்கக் கூடிய அளவினதாய் இருப்பதையும் இது உறுதி செய்திடும்.

அரசின் ஒவ்வொரு துறையும், அந்தந்த துறைகளின் தரவுகளுக்கும், பயன்பாட்டு செயலிகளுக்கும் உரிமையாளர் மற்றும் பொறுப்பாளர் என்ற போதிலும், தமிழக அரசின் தகவல் தொழில்நுட்பவியல் துறை அதன் தொடர்ச்சியான பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வை உறுதி செய்வதில் பேருதவி புரியும். தமிழக அரசு ஒரு மத்திய பாதுகாப்பு செயல்பாட்டு மையத்தை அமைத்து அதன் மூலம் எந்தவொரு அசம்பாவித மற்றும் நெருக்கடி காலத்திலும் அவசர கால பதிலை அல்லது தீர்வினை அளிக்க உள்ளது.

இத்திட்டத்தில், துறைசார் இணையப் பாதுகாப்பு அதிகாரியின் பங்கானது, அவர் சார்ந்த துறைக்கும் பாதுகாப்பு செயல்பாட்டு ஊழியர்களுக்கும் இடையில் ஒரு பாலமாக செயல்படுவதாகும். மற்ற புதிய முயற்சிகளைப் போலவே, இதிலும் துறைசார் ஊழியர்களின் விழிப்புணர்வும், பயிற்சியுமே வெற்றிக்கான திறவுகோலாய் இருக்கும்.

துறைசார் இணையப் பாதுகாப்பு அதிகாரிகளுக்கான முதல் பயிற்சியானது இன்று தொடங்கியுள்ளது.அதே வேளையில் இந்த திட்டம் பாதுகாப்பான மற்றும் வளமான தமிழக கட்டமைப்பில் முக்கியமான பங்கு வகிக்கிறது என்பதையும் பதிவுசெய்ய விரும்புகிறேன்.

இவ்வாறு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசினார்.

உடன் தகவல் தொழில்நுட்பவியல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ஹன்ஸ்ராஜ் வர்மா, எல்காட் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் விஜயகுமார், தமிழ்நாடு மின்னாளுமை முகமையின் இணை செயல் அலுவலர் இரமணசரஸ்வதி, காவல் துறை கூடுதல் இயக்குநர் டேவிட்சன் ஆசிர்வாதம், மத்திய அரசு நிறுவனங்களான சி-டாக் நிறுவனத்தின் இயக்குநர் கமாண்டர் எல்.ஆர்.பிரகாஷ், செட்ஸ் நிறுவனத்தின் இயக்குநர் சரத் சந்திர பாபு, எஸ்.டி.க்யூ.சி. நிறுவனத்தின் செயல் அலுவலர் ஜம்புலிங்கம் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.