சிறப்பு செய்திகள்

கொடுக்கும் கட்சி கழகம்; எடுக்கும் கட்சி தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் பிரச்சாரம்

சேலம்,

கொடுக்கின்ற கட்சி கழகம், எடுக்கின்ற கட்சி தி.மு.க. என்று ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.

கழக ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் நேற்று சேலம் மாவட்டம் நெய்க்காரப்பட்டியில் சேலம் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் கழக வேட்பாளர்களை ஆதரித்து பேசியதாவது:-

2021 சட்டமன்ற பொதுத்தேர்தலின்போது தி.மு.க. தலைவர் ஸ்டாலின் 525 கவர்ச்சியான வாக்குறுதிகளை தந்தார், அதை நம்பி வாக்களித்த பலனை தற்போது மக்கள் அனுபவித்து கொண்டிருக்கின்றனர்.

கடந்த பத்தாண்டு கால கழக ஆட்சியை மக்கள் பார்த்து விட்டனர். 9 மாத தி.மு.க. ஆட்சியையும் மக்கள் பார்த்து கொண்டிருக்கின்றனர். சொன்ன வாக்குறுதியை நிறைவேற்ற முடியாத கையாலாகாத அரசாக தான் தி.மு.க. இன்று செயல்பட்டு கொண்டிருக்கிறது.

தி.மு.க.வினரால் உருப்படியாக எந்த ஒரு திட்டத்தையும் மக்களிடம் சேர்க்க முடியவில்லை. நிர்வாகத்தில் அவ்வளவு குளறுபடி நடைபெற்று கொண்டிருக்கிறது. அம்மா அவர்கள் கொடுத்த வாக்குறுதிகளை நூற்றுக்கு நூறு நிறைவேற்றியது வரலாறு. தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தேர்தல் நேரத்தில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் முதல் கையெழுத்தில் நீட் தேர்வை ரத்து செய்வோம் என்றார். மிகப்பெரிய பொய் சொல்கிறார்.

நீட்டை கொண்டு வந்தது காங்கிரஸ். தி.மு.க. கூட்டணி ஆட்சி. அப்பொழுது தி.மு.க.வில் இணை அமைச்சராக இருந்த காந்திசெல்வன் தான் அந்த சட்ட மசோதாவை தாக்கல் செய்தார்.

எவ்வளவு பெரிய துரோகத்தை தி.மு.க. செய்து விட்டு நாடகமாடுகின்றனர்.கழக ஆட்சியில் கொரோனா பாதித்த போது நிவாரணம் வீடு வீடாக சென்று கொடுக்கப்பட்டது. ஆனால் தற்போது தி.மு.க.வினர் எங்கேயாவது கொடுப்பதை பார்த்திருக்கிறார்களா?

கொடுக்கின்ற கட்சி கழகம், எடுக்கின்ற கட்சி தி.மு.க., கழக ஆட்சியில் கொடுக்கப்பட்ட பொங்கல் பரிசு தொகுப்பில் எந்த குறையும் இல்லாமல் கொடுக்கப்பட்டது. ஆனால் தி.மு.க. ஆட்சியில் குப்பையாக கொடுத்துள்ளனர். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கழகம் பெறுகின்ற வெற்றி தி.மு.க.வுக்கு ஒரு பாடமாக இருக்க வேண்டும். கழக வேட்பாளர்கள் வெற்றி அடைய வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் கழக தொண்டர்களும், நிர்வாகிகளும் பணியாற்ற வேண்டும்.

அந்த வெற்றிக்கனியை பறித்து பொன்மனச்செம்மல் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். மற்றும் இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா ஆகியோர் பாதங்களில் சமர்ப்பிக்க வேண்டும். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் நல்ல தீர்ப்பை மக்கள் கொடுப்பார்கள் என்று நம்பிக்கை உள்ளது.

இவ்வாறு கழக ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.

இக்கூட்டத்தில் கழக அமைப்பு செயலாளர்கள் பொன்னையன், செம்மலை, சேலம் மாநகர் மாவட்ட கழக செயலாளர் ஜி.வெங்கடாஜலம், சட்டமன்ற உறுப்பினர்கள் பாலசுப்பிரமணியன், ராஜமுத்து, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம், முன்னாள் மேயர் சவுண்டப்பன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் எம்.கே.செல்வராஜ், சக்திவேல், மாநகர் மாவட்ட கழக பொருளாளர் பங்க் வெங்கடாஜலம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.