சிறப்பு செய்திகள்

விடியா தி.மு.க. ஆட்சியை அகற்ற மக்கள் தயார் – எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி சூசகம்

அம்பத்தூர்,

கழக இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி தனது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரத்தை கடந்த 7-ந்தேதி தொடங்கினார்.

அன்று சிவகாசி, திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய மாநகராட்சிகளில் பிரச்சாரம் செய்தார். இரண்டாவது நாளான நேற்று முன்தினம் சென்னை தண்டையார்பேட்டை, எழும்பூர், விருகம்பாக்கம், வேளச்சேரி ஆகிய இடங்களிலும் கழக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

இந்நிலையில் மூன்றாவது நாளான நேற்று கழக இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி நேற்று செங்கல்பட்டு மேற்கு மாவட்டம் தாம்பரம், காஞ்சிபுரம் மற்றும் வேலூர் ஆகிய இடங்களில் பிரச்சாரம் செய்தார். தாம்பரத்தில் கழக வேட்பாளர்களை ஆதரித்து அவர் பேசியதாவது:-

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் மூலமாக தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகள் தான் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க முடியும். ஆவடி மாநகராட்சியில் நம்முடைய கழக வேட்பாளர் தான் நேரடியாக வரவேண்டும்.

ஆவடி மாநகராட்சியை கழகத்தின் கோட்டையாக உருவாக்கி காட்ட வேண்டும். மாநகராட்சியை கழகம் கைப்பற்றினால் தான் மக்களுடைய தேவைகளை நிறைவேற்ற முடியும். மக்களுக்கு அடிப்படை தேவைகளை நிறைவேற்றக்கூடிய அமைப்பு என்றால் அது உள்ளாட்சி அமைப்புதான். மாநகராட்சியில் மேயராகவும், நகராட்சி மற்றும் பேரூராட்சியில் தலைவராகவும் கழகத்தினர் வந்தால்தான் மக்களுக்கு நன்மை செய்ய முடியும்.

மக்களோடு மக்களாக இருந்து மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யும் அமைப்பு இந்த உள்ளாட்சி அமைப்பு. ஆகவே மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி கழக வேட்பாளர்கள் கடுமையாக பாடுபட்டால் தான் இதில் வெற்றி பெற முடியும். கழக வேட்பாளர்கள் வீடு வீடாக சென்று எறும்புகளை போலவும், தேனீக்களை போலவும் சுறுசுறுப்பாக செயல்பட்டு வாக்காளர்களின் உள்ளங்களில் இடம்பெற்று வெற்றி பெற வாழ்த்துகிறேன். கழக நிர்வாகிகளும், தொண்டர்களும் இரட்டை இலை சின்னத்தில் வாக்குகளை பெற வைத்து கழக வேட்பாளர்களை வெற்றி பெற செய்ய வேண்டும்.

மக்களிடம் கழக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களை எடுத்துக் கூறியும், தி.மு.க.வின் 9 மாத ஆட்சியின் அவலங்களையும் எடுத்துக்கூறி வாக்குகளை சேகரிக்க வேண்டும், 2011-க்கு முன் எப்படி இருந்தது தமிழகம். 2011-க்கு பின் 2021 வரை தமிழகத்தில் என்னென்ன சாதனைகளை செய்துள்ளோம் என்று மக்களிடத்தில் எடுத்து சொல்லி வாக்குகள் பெற வேண்டும்.

அதற்கு கழக நிர்வாகிகளும், தொண்டர்களும் அர்ப்பணிப்பு உணர்வோடு தேர்தல் பணியினை செய்ய வேண்டும். கழக வேட்பாளர்கள் ஒரு மணி நேரம் கூட ஓய்வு எடுக்காமல் வாக்காளர்களிடம் வாக்குகளை சேகரிக்க வேண்டும். கழகத்தினர் அனைவரும் ஒற்றுமையாக இருந்து தேர்தல் பணியினை மேற்கொள்ள வேண்டும்.

நான் சாதாரண தொண்டனாக இருந்து, கிளை செயலாளராக இருந்து படிப்படியாக முன்னேறி இன்று இந்த நிலைக்கு வந்துள்ளேன். ஸ்டாலினை போல் எடுத்தவுடனேயே நான் தலைவர் ஆகவில்லை. தொண்டர்களுடைய மனநிலை என்னவென்று எனக்கு தெரியும்.

தி.மு.க.வின் 9 மாத அவலமான ஆட்சியில் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். கழகத்திற்கு மக்கள் ஓட்டு போட தயாராக உள்ளனர். கழகத்தை சேர்ந்தவர்கள் எங்கு சென்றாலும் மக்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது. தி.மு.க. தலைவர் ஸ்டாலின் மக்களிடம் பெரிய அதிருப்தியையும், சரிவையும் சம்பாதித்து உள்ளார். தி.மு.க. ஆட்சியில் கொள்ளையடிப்பதில் தான் குறியாக உள்ளனர்,

எந்தெந்த துறையில் கொள்ளை அடிக்க முடியுமோ கொள்ளையடிக்கின்றனர். இதையெல்லாம் மக்கள் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இந்த ஆட்சியை அகற்றுவதற்கு மக்கள் தயாராக உள்ளனர். கழகத்தினர் அதை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

கழக ஆட்சியின்போது ஆவடி மாநகராட்சியில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது. திருநல்லூர் பேரூராட்சியில் காவல் நிலையம் ரூ.87 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. வட்டார போக்குவரத்து கழகம் ரூ.2.1 கோடியில் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. துணை மின் நிலையம் 15 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ளது.,

திருவேற்காடு நகராட்சிக்கு ரூ.1.15 கோடியில் கட்டிடம் கட்டப்பட்டுள்ளது, ஆதிதிராவிட பெண்கள் விடுதி ரூ.1.10 கோடியில் திருவேற்காட்டில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது, ஆவடியில் அம்மா திருமண மண்டபம் ரூ.10.19 கோடியில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. ஆவடியில் வட்டாட்சியர் அலுவலகம் ரூ.2.56 கோடியில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது,

திருவேற்காட்டில் குடிசை மாற்று வாரியத்தின் மூலம் ரூ.86 கோடி மதிப்பீட்டில் 860 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. சாலைகள், எல்.இ.டி. விளக்குகள், ஐ.டி. பார்க், மேம்பாலங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் அம்மாவின் கழக ஆட்சியின்போது கொண்டு வரப்பட்டுள்ளது.

2000 அம்மா மினி கிளினிக்கை பல்வேறு பகுதிகளில் திறந்து வைத்தோம். ஏழை, எளிய மக்களுக்காக தொடங்கப்பட்ட இந்த அம்மா மினி கிளினிக் திட்டத்தை தி.மு.க. அரசு மூடிவிட்டது. அம்மா உணவகங்களில் ஏழை, எளியோர் வயதானவர்கள், உழைக்கின்றவர்கள் மலிவு விலையில் உணவு அருந்தினர்.

அந்த திட்டத்தையும் தி.மு.க. அரசு முடக்க பார்க்கிறது. கொரோனா காலகட்டத்தில் நாளொன்றுக்கு 7 லட்சம் பேருக்கு உணவு வழங்கியது அம்மா உணவகம், 2021 சட்டமன்ற பொது தேர்தலின் போது தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தேர்தல் அறிக்கையில் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் கொண்டு வரப்படும் என தெரிவித்தார்.

தற்போது இல்லை என்கிறார். கழக அரசு தான் அரசு ஊழியர்களுக்கு எப்பொழுதும் பாதுகாப்பாக இருந்தது. அம்மா இருந்தபோது மத்திய அரசு எப்பொழுதெல்லாம் அகவிலைப்படியை உயர்த்துகிறதோ அப்போதெல்லாம் மாநில அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்பட்டது. ஆனால் தி.மு.க. அரசாங்கம் அதிலேயும் அரசு ஊழியர்களுக்கு நன்மை செய்யவில்லை.

கழக அரசு தான் 7-வது ஊதிய குழுவை கொண்டு வந்தது. அரசு ஊழியர்களுக்கு சம்பளம் உயர்ந்துள்ளது என்றால் கழக அரசு கொண்டு வந்த 7வது ஊதிய குழு பரிந்துரைப்படி தான். ஆகவே அரசு ஊழியர்கள் வருகின்ற காலத்தில் கழகத்திற்கு ஆதரவு தரவேண்டும். தி.மு.க. கொள்ளை அடிப்பதற்காக பொங்கல் தொகுப்பு திட்டத்தை தொடங்கி வைத்தனர்.

இதையெல்லாம் கழக வேட்பாளர்கள் மக்களிடம் சொல்ல வேண்டும். திருவள்ளூர் மாவட்டத்தில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையோடு ரூ.400 கோடி மதிப்பீட்டில் கழக அரசு கட்டி கொடுத்துள்ளது. தி.மு.க. ஆட்சி வந்தால் சட்டம்- ஒழுங்கு சீர்குலைந்து விடுகிறது. மக்கள் நிம்மதியாக வாழ முடியவில்லை, எங்கே பார்த்தாலும் கொலை கொள்ளை நடைபெற்று கொண்டிருக்கிறது.

இந்த தேர்தலிலே கழகத்தின் சார்பாக தலைமை கழகத்தால் அறிவிக்கப்பட்ட மாமன்ற உறுப்பினர்கள் கழக வேட்பாளர்களுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்குகளை சேகரித்து பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்து, ஆவடி மாநகராட்சி கழகத்தின் கோட்டை என்பதை உறுதி செய்ய வேண்டும்.

இவ்வாறு கழக இணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சரும், சட்டமன்ற எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி பேசினார்.

இந்த பிரச்சார கூட்டத்தில் கழக அமைப்பு செயலாளர் ஜே.சி.டி.பிரபாகர், திருவள்ளூர் மத்திய மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பா.பென்ஜமின், திருவள்ளூர் தெற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான வி.அலெக்சாண்டர், திருவள்ளூர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பி.வி.ரமணி, திருவள்ளூர் வடக்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான சிறுணியம் பி.பலராமன், முன்னாள் அமைச்சர் அப்துல் ரஹீம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.