தற்போதைய செய்திகள்

கழகத்துக்கு எதிராக தி.மு.க. பொய் பிரச்சாரம் – முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் ஆவேசம்

சென்னை

கழகத்துக்கு எதிராக தி.மு.க. பொய் பிரச்சாரம் செய்து வருவதாக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறினார்,.

சென்னையில் நேற்று கழக அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான டி.ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நீட்டை முதல் முதலாக அறிமுகம் செய்தது காங்கிரஸ், தி.மு.க. கட்சிகள் தான். இவர்கள் செய்த துரோகத்தை
அங்கு (சட்டமன்றத்தில்) பதிவு செய்யவிடவில்லை. ஜனநாயகத்தின் முக்கிய தூணாக இருக்கும் சட்டமன்றம் எப்படி தன் கடமையை செய்துள்ளது? இதனை நீங்கள் யோசிக்க வேண்டும்.

எனவே தான் எதிர்க்கட்சி தலைவர் வெளியே வந்து இதனை தெரிவித்தார். ஏனென்றால் தொடர்ந்து பொய் பிரச்சாரத்தை செய்து வருகிறார்கள். அம்மா அரசில் தான் நீட் அமல்படுத்தப்பட்டது போன்ற ஒரு கற்பனை தோற்றத்தை உருவாக்குகிறார்கள். உண்மை இது இல்லை.

சட்டமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் கருத்துக்களை தெரிவிக்க விடவில்லை. ஒரு சாதாரண கட்சி உறுப்பினர் எல்லாம் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் பேசலாம். நாங்களும், தோழமை கட்சிகளும் 75 சட்டமன்ற உறுப்பினர்களை பெற்றுள்ளோம். எங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரம் எவ்வளவு? உட்கார வைத்து விட்டார்கள். தி.மு.க., காங்கிரஸ் செய்த துரோகம் கண்டிப்பாக மக்களுக்கு தெரிகிறது.

எவ்வளவு தான் சில ஊடகங்களை கையில் போட்டுக் கொண்டு அவர்கள் இதுபோன்று எங்களுக்கு எதிராக பிரச்சார அரசியல் செய்தாலும் அது எதுவும் எடுபடாது. எங்களுக்குத்தான் அந்த சூட்சுமம் தெரியும் என்றவர்கள் அங்கேயே (சட்டமன்றத்தில்) முதல் கையெழுத்து போட வேண்டியது தானே?

17 வருடம் மத்தியில் கூட்டணியில் இருந்தீர்கள். என்ன செய்தீர்கள்? மக்களுக்கு ஒரு நன்மையும் கிடைக்கவில்லை. கல்வியை பொது பட்டியலிலிருந்து மாநில பட்டியலுக்கு மாற்றியிருந்தால் நாங்களே நீட்டை ஒரு கையெழுத்தில் முடித்து விட்டிருப்போம். ஆனால் முடிக்காமல் போனதற்கு யார் காரணம்? தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி தானே காரணம்.

17 வருடம் ஆட்சியில் இருந்து இதனை செய்ய தவறிவிட்டு, இப்போது பாராளுமன்றத்தில் குரல் கொடுக்கிறார்கள். கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் போல அவர்கள் எம்.பி. வில்சன் பேசுகிறார். இவர்களே மாற்றிவிட்டு, இவர்களே குரல் கொடுக்கிறார்கள். மாநில பட்டியலுக்கு மாற்றியிருந்தால் மாநில அரசு தனது அதிகாரத்தின்படி கையெழுத்து போடலாம்.

தேர்தல் காலத்தில் எப்படி எங்களுக்கு அந்த வித்தை தெரியும் என்று சொன்னீர்கள்? ஏன் இன்னும் கையெழுத்து போடவில்லை? பேச்சு புயல் ஆ.ராசா விலக்கு அளிக்க முடியாக ஒரு சட்டத்திற்கு சட்டமன்றத்தில் ஒரு தீர்மானம் கொண்டு வருகிறார்கள்.

இது வெட்கக்கேடானது என்று கழக ஆட்சியின் போது தெரிவித்தார். அந்த வெட்கக்கேடான செயலைத் தானே தி.மு.க. செய்துள்ளது. இப்போது ஆ.ராசா பேச வேண்டியது தானே? எங்களை பொறுத்தவரை நீட் வேண்டாம் என்பது தான் நிலையான நிலைப்பாடு.

இவ்வாறு முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறினார்.