10 ஆண்டு கால சாதனைகளை கூறினாலே கழக வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள் -முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பேச்சு

மதுரை,
அம்மா அரசின் 10 ஆண்டு கால சாதனைகளை கூறினாலே கழக வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள் என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ கூறினார்.
மதுரை மாநகராட்சி 43-வது வார்டில் கழக தேர்தல் அலுவலகத்தை மாநகர் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.
43-வது வார்டு கழக வேட்பாளர் எஸ்.முருகன், மாவட்ட கழக துணை செயலாளர் ஜெ.ராஜா, அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் எம்.எஸ்.பாண்டியன், கழக மாணவர் அணி இணை செயலாளர் பா.குமார், வட்ட கழக செயலாளர் அரியநாச்சி ராமலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் மாநகர் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ. பேசியதாவது:-
மதுரை மாநகராட்சியில் 100 வார்டுகள் உள்ளன. இங்கு கடந்த பத்தாண்டு செய்த அம்மா அரசின் சாதனைகளை பட்டியலிட்டு சொன்னால் கழக வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள்.
தி.மு.க. ஆட்சிக்கு வந்த 8 மாதங்களில் ஏதாவது ஒரு வார்டில் செய்த சாதனையை கூறி அமைச்சர்கள் வாக்கு சேகரிக்க முடியுமா? இந்த ஆட்சியின் லட்சணம் இவர்கள் வழங்கிய பொங்கல் பரிசில் தெரிந்து விட்டது.
அம்மா ஆட்சிக் காலத்தில் முதல் முதலில் 100 ரூபாய் பொங்கல் பரிசு வழங்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து ஆயிரம் ரூபாய் வழங்கினோம். கடந்த ஆண்டு ரூ.2500 பொங்கல் பரிசு வழங்கப்பட்டது. அப்போது கூட ஸ்டாலின் ரூ.5000 வழங்க வேண்டும் என்று கூறினார்.
தற்போது முதலமைச்சராக ஸ்டாலின் உள்ளார். ரூ.5,000 பொங்கல் பரிசு வழங்கி இருக்கலாம். மக்களுக்கு கொடுக்க ஸ்டாலினுக்கு மனமில்லை. ஆட்சியில் இல்லாதபோது ஒரு பேச்சு, ஆட்சியில் இருக்கும்போது ஒரு பேச்சு என்று இரட்டை வேடம் போடுகிறார்.
தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாத தி.மு.க.வுக்கு சரியான பாடம் புகட்டும் நேரம் வந்து விட்டது. மதுரை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளிலும் தி.மு.க. கூட்டணிக்கு சரியான பாடத்தை மக்கள் புகட்டுவார்கள்.
இவ்வாறு மதுரை மாநகர் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான செல்லூர் கே.ராஜூ பேசினார்.