சிறப்பு செய்திகள்

9 மாதத்தில் ஸ்டாலின் ஆட்சிக்கு சரிவு -எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி பேச்சு

செங்கல்பட்டு

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டதாக பொய் பிரச்சாரம் செய்து வருவதால் 9 மாதத்தில் ஸ்டாலின் ஆட்சிக்கு சரிவு ஏற்பட்டுள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி கூறினார்.

கழக இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் கழக வேட்பாளர்களை ஆதரித்து சூறாவளி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். 3-வது நாளான நேற்று தாம்பரம், ஆவடி, காஞ்சிபுரம், வேலூர் மாநகராட்சிகளில் பிரச்சாரம் செய்து ஆதரவு திரட்டினார்.

தாம்பரத்தில் கழக இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி கழக வேட்பாளர்களை ஆதரித்து சிறப்புரையாற்றினார் அப்போது அவர் பேசியதாவது:-

பொன்மனச்செம்மல் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். தேர்தல் காலத்தில் ஒவ்வொரு தேர்தல் அறிக்கையிலும் கழகத்தின் சார்பில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றினார். அதே வழியில் வந்த புரட்சித்தலைவி அம்மா அவர்கள் முதலமைச்சராக இருந்த காலத்தில் தேர்தல் வருகின்ற பொழுது, கழகத்தின் பொதுச்செயலாளராக இருந்து கொண்டு கழகத்தின் சார்பாக தேர்தல் அறிக்கை வெளியிடப்படும் தேர்தல் அறிக்கையில் என்னென்ன குறிப்பிடப்பட்டிருந்ததோ அதை எல்லாம் மக்களுக்கு கொண்டு வந்து நிறைவேற்றுவார்.

விலையில்லா மிக்சி, கிரைண்டர், மின்விசிறி, 2021 வரை 52 லட்சம் பள்ளி மாணவர்களுக்கு மடிகணினி கழக அரசின் சார்பில் வழங்கப்பட்டது. பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி, புத்தகம், நோட்டு, பை போன்ற அனைத்தும் தேர்தல் அறிக்கையில் சொன்னதை செய்த ஒரே கட்சி கழகம் ஆகும். முதியோருக்கு உதவித்தொகை, மானிய விலையில் அம்மா இரு சக்கர வாகனம், தாலிக்கு தங்கம் போன்ற அற்புதமான திட்டங்களை வழங்கியது கழக அரசு.

தி.மு.க. அரசால் நாட்டிற்கு என்ன பலன் கிடைத்துள்ளது? அடித்தட்டில் உள்ள ஏழை மக்களுக்கு என்ன கிடைத்துள்ளது? கழக அரசின் போது வீடு இல்லாதவர்களுக்கு எல்லாம் பாரத பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடு கட்டி கொடுத்தோம் இந்த திட்டங்களை எல்லாம் செய்த காரணத்தினால் தான் மக்கள் நிம்மதியாக உள்ளனர். இந்தியாவிலேயே தமிழகம் ஒரு வளர்ச்சி பெற்ற மாநிலமாக உருவாவதற்கு கழக அரசு எடுத்த நடவடிக்கை தான்காரணம்.

சிறு, குறு தொழில் சிறப்பாக நடைபெறுவதற்கு அம்மாவுடைய அரசு தான் பல்வேறு நிதி உதவிகளை செய்து இந்தியாவிலேயே சிறு குறு தொழில் செய்வதில் முதன்மை வகித்தது. பல பாலங்கள் கட்டிக் கொடுக்கப்பட்டது, அற்புதமான சாலைகள் கொடுக்கப்பட்டது.

மெட்ரோ ரயில் திட்டம் ரூ.62,000 கோடிக்கு அடிக்கல் நாட்டி சாதனை படைத்தது அம்மாவின் கழக அரசு. 118 கிலோ மீட்டர் சென்னை மாநகரம் முழுவதும் பாலங்கள், சாலைகள் கொடுத்து சாதனை படைத்துள்ளது. போக்குவரத்து நெரிசல் இல்லாத மாநகரமாக ெசன்னையை உருவாக்குவதற்காக 14000 கோடி ரூபாயில் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

மாமல்லபுரத்திலிருந்து துறைமுகம் வரை, கழக அரசின் போது தான் அடிமட்டத்தில் இருக்கும் ஒடுக்கப்பட்ட, நசுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட ஏழை குடும்பத்தில் இருக்கின்ற மக்களை சமூக பொருளாதாரத்தில் உயர்த்தியது கழக அரசு.

பல திட்டங்களை நிறைவேற்றி உள்ளதால் கழகத்தினர் நாங்கள் நெஞ்சை நிமிர்த்தி வாக்கு கேட்கிறோம், தி.மு.க. ஆட்சிக்கு வந்தால், ஸ்டாலின் முதலமைச்சரானால் நிறைய செய்வார் என்ற எதிர்பார்த்தனர் மக்கள். ஆனால் 9 மாதத்தில் மக்களுடைய எதிர்ப்பை சம்பாதித்து உள்ளனர். 9 மாத காலத்தில் ஒரு ஆட்சிக்கு சரிவு ஏற்பட்டுள்ளது என்றால் அது ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசு தான்.

சட்டமன்ற பொதுத் தேர்தல் பிரச்சாரத்தின் போது நீட் தேர்வை ரத்து செய்வதற்கான ரகசியம் எங்களுக்கு தெரியும் என்று உதயநிதி ஸ்டாலின் சொன்னார். அந்த ரகசியம் தான் தெரியும் அல்லவா? இப்போது நீட் தேர்வினை ரத்து செய்யலாம் அல்லவா? ஏன் செய்யவில்லை. ஏன் இப்படி பச்சைப் பொய் பேசணும்? இப்போது எங்கே போனார் என்றே தெரியவில்லை?

தற்போது முதன் முதலாக தாம்பரம் மாநகராட்சி தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலிலே கழகத்தின் சார்பாக தலைமை கழகத்தால் அறிவிக்கப்பட்ட மாமன்ற உறுப்பினர்கள் கழக வேட்பாளர்களுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்குகளை சேகரித்து பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்து, தாம்பரம் மாநகராட்சி கழகத்தின் கோட்டை என்பதை உறுதி செய்து முத்திரையை பதிக்க வேண்டும்.

இவ்வாறு கழக இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி பேசினார்.

இக்கூட்டத்தில் செங்கல்பட்டு மேற்கு மாவட்ட கழக செயலாளர் சிட்லபாக்கம் ச.இராசேந்திரன், கழக மகளிர் அணி செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பா.வளர்மதி, அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் ஆர்.கமலக்கண்ணன், அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற தலைவர் டி.கே.எம்.சின்னையா, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் கணிதா சம்பத், ப.தன்சிங், ஒன்றிய கழக செயலாளர் என்.சி.கிருஷ்ணன், நகர கழக செயலாளர் எம்.கூத்தன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.