சிறப்பு செய்திகள்

தேனியில் முதற்கட்டமாக குடும்ப அட்டைதாரர்களுக்கு 12,82 லட்சம் விலையில்லா முககவசங்கள் – துணைமுதலமைச்சர் வழங்கினார்

தேனி

தேனி மாவட்டத்தில் முதற்கட்டமாக 2,13,263 குடும்ப அட்டைதாரர்களுக்கு 12.82 லட்சம் விலையில்லா முககவசங்களை துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வழங்கினார்.

துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று கூட்டுறவுத்துறையின் சார்பில் முதற்கட்டமாக குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா முககவசங்கள் வழங்கும் பணியை மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் ம.பல்லவி பல்தேவ் முன்னிலையில் வழங்கி தொடங்கி வைத்தார்.

தமிழக அரசு தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுப்பதற்குகென பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, தேனி மாவட்டத்தில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிவுரையின்படி, அனைத்து துறை அரசு அலுவலர்களும் ஒருங்கிணைந்து கொரோனா நோய் தொற்று நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொண்டு வருகின்றனர்.

குறிப்பாக, மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டு, அறிகுறி தென்படுபவர்களை கண்டறிந்து, அவர்களை தனிமைப்படுத்தி உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு, அவர்கள் பூரண குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

மேலும், அறிகுறி தென்படுபவர்கள் அருகில் உள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதாரநிலையங்களை அணுகி உரிய பரிசோதனை மேற்கொண்டு, தம்மைச் சார்ந்தவர்களுக்கும் நோய் தொற்று பராவாமல் இருக்கவும் மற்றும் பொதுமக்கள் பொது இடங்களில் சமூக இடைவெளியினை கடைபிடித்து, சரிவர முககவசங்களை அணியவும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தொடர்ந்து விழிப்புணர்வு நடவடிக்கைள் மாவட்டம் முழுவதும் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும், அனைத்து பொது இடங்கள் மற்றும் பணியிடங்களிலும், பிற இடங்களுக்கு பயணிக்கும் போதும், பொதுமக்கள் அனைவரும் கட்டாயமாக முகக்கவசம் அணிய வேண்டும் என்பதனை தமிழக அரசு கருத்தில் கொண்டு, கொரோனா வைரஸ் நோய் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்குடன், தமிழகத்தில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா தரமான மறு பயன்பாட்டு முகக்கவசங்கள் வழங்கிட தமிழக அரசு உத்தரவிட்டது. அதில், தமிழ்நாட்டில் உள்ள 2.08 கோடி குடும்ப அட்டைதாரர்களின் 6.74 கோடி குடும்ப உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் தலா இரண்டு விலையில்லா தரமான மறு பயன்பாட்டு முகக்கவசங்கள் நியாய விலைக் கடைகளின் மூலம் வழங்கப்படவுள்ளது.

அதனடிப்படையில், தேனி மாவட்டத்தில் கூட்டுறவுத்துறை மூலம் செயல்படும் 489 நியாய விலைக் கடைகள் மற்றும் மகளிர் அமைப்புகள் மூலம் நடத்தப்படும் 28 நியாய விலைக் கடைகள் ஆக மொத்தம் 517 நியாய விலைக்கடைகளில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. அதில், முதற்கட்டமாக 228 நியாய விலைக் கடைகளில் 2,13,263 குடும்ப அட்டைகளைச் சார்ந்த 6,40,832 குடும்ப உறுப்பினர்களுக்கு 12,82,000 விலையில்லா முககவசங்கள் வழங்கும் நிகழ்வினை இன்றைய தினம் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கி தொடங்கி வைத்தார்.

இவ்விழாவில், கம்பம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.டி.கே.ஜக்கையன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இ.சாய் சரண் தேஜஸ்வி, மாவட்ட வருவாய் அலுவலர் க.ரமேஷ், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் எம்.ஏகாம்பரம், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் இரா.நிறைமதி, மாவட்ட வழங்கல் அலுவலர் இ.கார்த்திகாயினி, மாவட்ட முஸ்லீம் மகளிர் உதவும் சங்க கௌரவ செயலாளர் பொன்ராஜ் கொந்தாலம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.