தேனி

தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ரூ.12 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டிட பணி ஆட்சியர் நேரில் ஆய்வு

தேனி

தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் புதிதாக ரூ.12 கோடி மதிப்பீட்டில் மகப்பேறு பெண்களின் நலன் கருதி, கட்டப்பட்டு வரும் கூடுதல் கட்டடங்களின் கட்டுமானப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ம.பல்லவிபல்தேவ் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி வட்டத்திற்குட்பட்ட தேக்கம்பட்டி ஊராட்சியில் கொரோனா நல மையாக தற்சமயம் செயல்பட்டு வரும் அரசினர் பல்வகை தொழில் நுட்ப கல்லூரியில்  மாவட்ட ஆட்சித்தலைவர் ம.பல்லவிபல்தேவ் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, தெரிவித்ததாவது:-

தேனி மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்றினை கட்டுப்படுத்திட பல்வேறு நடவடிக்கைகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக வெளிமாநிலங்கள், வெளி மாவட்டங்களி லிருந்து தேனி மாவட்டத்திற்கு வருகை புரிந்தவர்களிடமிருந்து இந்நோய் தொற்று பரவி வருவதற்கு அதிக வாய்ப்பு உள்ளதால், இதனை கட்டுப்படுத்திட மாவட்ட எல்லைப்பகுதிகளில் தீவிர மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, கண்காணிக்கப்பட்டு வருகிறது.

மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நோய் தொற்றினால் பாதிக்கப்படுபவர்களுக்கு கூடுதலாக படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டுள் ளவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு ஏதுவாக, மாவட்டத்தில் தேனி என்.ஆர்.டி. நினைவு அரசு மருத்துவமனை, தேக்கம்பட்டி அரசினர் பல்வகை தொழில் நுட்ப கல்லூரி,

போடிநாயக்கனூர் அரசு பொறியியல் கல்லூரி, வடபுதுப்பட்டி தனியார் பொறியியல் கல்லூரி, கொடுவிலார்பட்டி தனியார் பொறியியல் கல்லூரி, உத்தமபாளையம் தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி என மொத்தம் 6 இடங்களில் கொரோனா நல மையங்கள் ஏற்படுத்தப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இம்மையங்களில், கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு தரமான மருத்துவ சிகிச்சைகள், உணவு மற்றும் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு, சிகிச்சை மேற்கொள்பவர்களுக்கு மருத்துவ ஆலோசனைகளும், யோகா பயிற்றுநர்கள் மூலம் பயிற்சிகளும் வழங்கப்பட்டு வருகிறது.

மேலும், பொதுமக்கள் தேவையற்ற காரணங்களுக்காக வெளியே செல்வதை தவிர்த்து, அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டுமே வெளியில் செல்ல வேண்டும். வெளியே செல்லும் போது கட்டாயம் முககவசம் அணிவது, வீட்டிற்கு நுழைவதற்கு முன் கிருமி நாசினி திரவம் கொண்டு கைகளை நன்கு கழுவுவது,

சமூக இடைவெளியை கடைபிடிப்பது மற்றும் தங்களின் சுற்றுப்புறப்பகுதிகளை சுகாதாரமாக வைத்து கொள்வது போன்ற நடவடிக்கைகளை சரிவர மேற்கொண்டால் மட்டுமே, நாம் கொரோனா தொற்றினை முற்றிலும் தவிர்த்திட முடியும். ஆகவே, அரசால் மேற்கொள்ளப்பட்டு வரும் நோய் தொற்று தடுப்பு நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் உறுதுணையாக இருந்து, தங்களையும், சமூகத்தையும் பாதுகாத்திட வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.