தற்போதைய செய்திகள்

ஸ்டாலினுக்கு தோல்வி பயம் – முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் பேட்டி

சென்னை,

ஸ்டாலினுக்கு தோல்வி பயம் வந்து விட்டது என்று முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறினார்.

சென்னை மாநகராட்சி 73 மற்றும் 74 வார்டு மாமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் கழக வேட்பாளர்களை ஆதரித்து கழக அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான டி.ஜெயக்குமார் திரு.வி.நகர் தொகுதிக்குட்பட்ட பட்டாளத்தில் நேற்று தீவிர பிரச்சாரம் செய்து இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார். பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:-

கேள்வி:- முதலமைச்சர் ஸ்டாலின் மகளிருக்கு ஆயிரம் ரூபாய் கண்டிப்பாக தரப்படும் என்று தெரிவித்துள்ளாரே?

பதில்:- நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின்போது இந்த தகவலை தெரிவித்துள்ளார். இந்த தேர்தல் நேரத்தில் அதே பசப்பு வார்த்தைகள். அதே ஏமாற்று வார்த்தைகள். நம்பிக்கை மோசடி செய்யும் வகையில் தான் அதே ஆயுதத்தை எடுத்துள்ளார். ஆட்சிக்கு வந்தவுடன் ஆயிரம் ரூபாய் தருவோம் என்றார்கள். கடந்த 9 மாதகாலமாக தரவில்லை. இப்போது தேர்தல் வந்த காரணத்தினால் தோல்வி பயம் வந்து விட்டது.

கடந்த சட்டமன்ற தேர்தலில் ஆட்சிக்கு வந்தவுடன் மகளிருக்கு மாதம்தோறும் ஆயிரம் தருவோம் என்றார்கள். 9 மாதம் ஆகி விட்டது. இதுவரை தரவில்லை. இப்போது தி.மு.க. தோல்வியை தழுவும் என்ற காவல்துறையின் புலனாய்வு அறிக்கை ஸ்டாலினிடம் சென்றுள்ளது. நிச்சயமாக தி.மு.க. மண்ணை கவ்வும் என்பதால் மறுபடியும் நாங்கள் ஆயிரம் ரூபாய் தருவோம் என்று ஆயுதத்தை எடுத்திருக்கிறார்.

இப்போதுகூட எப்போது தருவோம் என்று சொல்லவில்லை. தேர்தல் முடிந்தவுடன் என்ன சொல்வார்கள். நாங்கள் எப்போது தருவோம் என்று தேதியை குறிப்பிட்டோமா என்று கேட்பார்கள். இவர்கள் எப்போது தருவார்கள் என்றால் 2024-ல் பாராளுமன்ற தேர்தல் நடக்கும்.

அப்போது 2 கோடி நபர்களுக்கு தருவோம் என்று சொல்லி விட்டு 2 லட்சம் பேருக்கு தருவார்கள். நாங்கள் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றி விட்டோம் என்று சொல்லலாம்.
இல்லை என்றால் 2026-ல் சட்டமன்ற தேர்தல் வருவதற்கு 6 மாதத்திற்கு முன்பு 2 லட்சம் பேருக்கு அளித்து விட்டு தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றி விட்டோம் என்று சொல்வார்கள்.

மக்களை ஏமாற்றி வாக்குகளை பெற வேண்டும் என்பதற்காக தோல்வி பயத்தின் வெளிப்பாடுதான் இந்த ஆயிரம் ரூபாய் ஆயுதத்தை கையில் எடுத்துள்ளார். பொங்கல் பரிசாக ரூ.100 வழங்க வாக்கில்லாத அரசு இந்த அரசு. நாங்கள் 2,500 ரூபாய் பலா சுளை போல அளித்தோம்.

மக்கள் ஜாதி, மதம், இனம் கடந்து 2 கோடி பேர் மகிழ்ச்சியாக பொங்கலை கொண்டாடினார்கள். பொங்கல் பரிசில் ரூ.500 கோடி ஊழல் செய்து மக்களுக்கு வெறும் குப்பையை அளித்தவர்கள். 500 ரூபாய் கூட தருவதற்கு வக்கில்லாத அரசு எப்படி ஆயிரம் ரூபாய் தரும்.

கேள்வி:- தொடர்ந்து தி.மு.க.வினர் தேர்தல் விதிமுறைகளை மீறுகிறார்கள் என்று நீங்கள் ஆணையத்தில் மனு அளித்துள்ளீர்கள். ஆளுநரை சந்தித்துள்ளீர்கள். அடுத்தக்கட்ட நடவடிக்கையாக நீதிமன்றம் செல்ல வாய்ப்பு உள்ளதா?

பதில்:- ஏற்கனவே ஊரக உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக வழக்கு போட்டோம். அப்போது ஒரு நல்ல தீர்ப்பை நீதிமன்றம் அளித்தது. இதனை அவர்கள் நடைமுறைப்படுத்தவில்லை. அதன் பிறகு ஆளுநரை சந்தித்துள்ளோம். அவரும் அதற்கு விளக்கம் கேட்பதாக தெரிவித்துள்ளார். இந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் நடக்கும் அத்துமீறல்கள், அநியாயங்கள், அனைத்தையும் தொகுத்து ஆளுநரிடமும் மனுவாக அளித்துள்ளோம்.

நாங்கள் தெரிவிக்கும் கருத்துக்களை தேர்தல் ஆணையம் கேட்டு கொண்டுதான் இருக்கும். இன்றைக்கு தி.மு.க.வுக்கு அதிகாரம் இருக்கிறது என்று ஜனநாயகத்தை வளைத்து, ஜனநாயகத்தை கேலிகூத்தாக்கும் செயலில் அரசு அதிகாரிகள் ஈடுபட்டால், கண்டிப்பாக அந்த அதிகாரிகள் நீதிமன்ற கூண்டில் நிற்கும் நிலை வரும். நிச்சயமாக நாங்கள் இதனை விட மாட்டோம். இதற்கு மேல் மக்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள். மக்கள் நல்ல தீர்ப்பு வழங்குவார்கள்.

இவ்வாறு முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறினார்.