தற்போதைய செய்திகள்

முதலமைச்சர் ஸ்டாலினால் தமிழகத்துக்கு தலைகுனிவு – புதுவை கிழக்கு மாநில கழக செயலாளர் அன்பழகன் பேட்டி

புதுச்சேரி

அரசியல் சட்டஅனுபவம் இல்லாத முதலமைச்சர் ஸ்டாலினால் தமிழகத்துக்கு தலைகுனிவு ஏற்பட்டுள்ளது என்று புதுவை கிழக்கு மாநில கழக செயலாளர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து புதுச்சேரி கிழக்கு மாநில கழக செயலாளர் அன்பழகன் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார் அப்போது அவர் கூறியதாவது:-

மேற்கு வங்க சட்டமன்றத்தை நிறுத்தி வைத்த செயல் இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு விரோதமானது என்றும், அரசியலமைப்பு விதிமுறைகள் மற்றும் மரபுகளுக்கு விரோதமானது என்றும் தமிழக முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இது அவரது அரசியல் சட்ட அனுபவமின்மையை காட்டுகிறது.

இது சம்பந்தமாக தமிழக முதல்வரின் கண்டனத்தில் உண்மை இல்லை, அரசின் கோரிக்கையை ஏற்றே சட்டப்பேரவை கூட்டத்தொடர் முடித்து வைக்கப்பட்டுள்ளது என்று மேற்கு வங்க ஆளுநர் பதிலளித்துள்ளார்.

இது சம்பந்தமாக மேற்கு வங்க மாநிலத்தின் முதலமைச்சரே எதிர்ப்பு தெரிவிக்காத நிலையில், அகில இந்திய அளவில் தன்னை ஒரு தலைவராக நிலைநிறுத்தி கொள்ளும் ஒரு முயற்சியில் இந்திய அரசியலமைப்பு சட்டத்தையே புரிந்து கொள்ளாமல் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் முன்னெடுத்து சென்றுள்ளார்.

இது அகில இந்திய அளவில் தமிழகத்திற்கு பெரும் தலைகுனிவை தி.மு.க. முதலமைச்சர் ஸ்டாலின் ஏற்படுத்தியுள்ளார். அதற்காக அவர் தமிழக மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும்.

நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.வின் பொய் வாக்குறுதிகளை நம்பி வாக்களித்த மக்கள் அனைவரும் ஏன் தி.மு.க.வுக்கு வாக்களித்தோம் என வருத்தப்படுகிறார்கள். தற்போது நடைபெறும் தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க.வின் விடியா செயலற்ற அரசுக்கு சரியான பாடத்தை மக்கள் புகட்டுவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.