தற்போதைய செய்திகள்

ஸ்டாலின் சொன்னதை செய்ய மாட்டார் – முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ சாடல்

மதுரை

முதலமைச்சர் ஸ்டாலின் சொன்னதை செய்ய மாட்டார் என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ கூறினார்.

மதுரை மாநகராட்சி வார்டு மாமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் கழக வேட்பாளர்களை ஆதரித்து கழக ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் இன்று பிரச்சாரம் மேற்கொள்கிறார்.

இதையடுத்து அவர் பிரச்சாரம் மேற்கொள்ளும் பழங்காநத்தம் பகுதியில் நடைபெற்று வரும் முன்னேற்பாடு பணிகளை மாநகர் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ., மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழக வி.வி.ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ. ஆகியோர் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

இந்நிகழ்வின்போது மாவட்ட கழக துணை செயலாளர் ராஜா, மாவட்ட கழக பொருளாளர் அண்ணாதுரை, அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் எம்.எஸ்.பாண்டியன், புறநகர் கிழக்கு மாவட்ட இளைஞரணி செயலாளர் வக்கீல் ரமேஷ், ஒன்றிய கழக செயலாளர் நிலையூர் முருகன், கழக இலக்கிய அணி இணை செயலாளர் வில்லாபுரம் ரமேஷ், பகுதி கழக செயலாளர் முத்துவேல் உள்பட பலர் உடனிருந்தனர்.

இதன் பின்னர் மதுரை மாநகர் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ. செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

ஸ்டாலின் தற்பொழுது மகளிருக்கு 1000 ரூபாய் கொடுப்பேன் என்று கூறுகிறார். தேர்தலுக்காக தான் கூறுகிறார் என்று மக்களுக்கு நன்றாக தெரிந்து விட்டது. தி.மு.க.வின் செயல்பாடுகளால் மக்கள் கொதிப்படைந்துள்ளனர்.

நிச்சயம் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்று அறிந்த ஸ்டாலின் தற்போது ஆயிரம் ரூபாய் தரப்படும் என்று கூறி வருகிறார். நிச்சயம் ஸ்டாலின் கொடுக்கப் போவது இல்லை. ஏனென்றால் தி.மு.க.வினர் சொல்வார்கள். ஆனால் செய்ய மாட்டார்கள். இது தான் அவர்களின் வாடிக்கை.

தற்போது சிறுபான்மை மக்கள் கூட கழகம் மீது பற்றுதலாக இருந்து வருகின்றனர். ஏனென்றால் சிறுபான்மை மக்களுக்கு தி.மு.க. ஒன்றும் செய்யவில்லை.

கடந்த 10 ஆண்டில் நிதி ஆயோக் அமைப்பு தமிழகத்தின் செயல்பாடுகள் பற்றி பாராட்டி உள்ளது இதனை ஸ்டாலின் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்து வருகிறார்.

இவ்வாறு மாநகர் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ. கூறினார்.