தமிழகம்

12 நபர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் – முதலமைச்சர் உத்தரவு

சென்னை

பல்வேறு சம்பவங்களில் உயிரிழந்த 12 நபர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் வழங்க முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கன்னியாகுமரி மாவட்டம், தோவாளை வட்டம், ஈசாந்திமங்கலம் தெற்கு அரசன் குழி கிராமத்தைச் சேர்ந்த செல்வம் என்பவர் குலை வாழை மரம் கட்டுவதற்காக கம்பத்தில் ஏறும் போது, தவறி விழுந்து உயிரிழந்தார் என்ற செய்தியையும்,
கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் வட்டம், ஆலத்தூர் கிராமத்தைச் சேர்ந்த பிச்சமணி என்பவரின் மகன் சூரியா குளத்தில் தவறி விழுந்து உயிரிழந்தார் என்ற செய்தியையும்,

தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாட்டைச் சேர்ந்த மருதமுத்து என்பவரின் மகன் சாமிநாதன் என்பவர் அரசுப் பேருந்து மோதியதில், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்ற செய்தியையும், சேலம் மாவட்டம், எடப்பாடி வட்டம், இருப்பாளி கிராமத்தைச் சேர்ந்த செல்வி என்பவரின் கணவர் கணேசன் என்பவர் கிணற்றில் மூழ்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும்,

எடப்பாடி வட்டம், எடப்பாடி கிராமத்தைச் சேர்ந்த சுமதி என்பவரின் மகன் சதீஸ்குமார் என்பவர் காவேரி ஆற்றில் குளிக்கச் சென்ற போது தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும், தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம், பள்ளத்தூர் கிராமத்தைச் சேர்ந்த வீரமுத்து என்பவரின் மகன் மாரிமுத்து என்பவர் எதிர்பாராத விதமாக சாலை விபத்தில் உயிரிழந்தார் என்ற செய்தியையும்,

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி வட்டம் மற்றும் கிராமத்தைச் சேர்ந்த குமார் என்பவரின் மகன்கள் சிறுவர்கள் ஹிருத்திக் ரோஷன் மற்றும் அரவிந்த் ஆகிய இருவரும் கழிவு நீர் தொட்டி இடிந்து விழுந்து உயிரிழந்தனர் என்ற செய்தியையும்,திருநெல்வேலி மாவட்டம், இராதாபுரம் வட்டம், திருவம்பலாபுரம் கிராமத்தைச் சேர்ந்த தர்மலிங்கம் என்பவரது மகள் சிறுமி கீர்த்திகா என்பவர் நம்பியாற்று பகுதியில் விளையாடச் சென்ற போது, எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும்,

ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் கிராமத்தைத் சேர்ந்த ஏரோனிமூஸ் என்பவரின் மகன் அந்தோணி பிரகாஷ் என்பவர் மீன்பிடி பணியில் ஈடுபட்டிருந்த போது, எதிர்பாராத விதமாக கடலில் தவறி விழுந்து உயிரிழந்தார் என்ற செய்தியையும்,
இராணிபேட்டை மாவட்டம், சோளிங்கர் வட்டம், புலிவலம் கிராமத்தைச் சேர்ந்த ரங்கநாதன் என்பவரின் தந்தை நடராஜன் மற்றும் தாய் அன்னியம்மாள் ஆகிய இருவரும் எதிர்பாராத விதமாக எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தனர் என்ற செய்தியையும், இந்நிகழ்வில் செந்தில்வேலன் என்பவரின் மனைவி முல்லை என்பவர் பலத்த காயமடைந்துள்ளார் என்ற செய்தியையும் அறிந்து நான் மிகுந்த துயரம் அடைந்தேன்.

மேற்கண்ட பல்வேறு சம்பவங்களில் உயிரிழந்த 12 நபர்களின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த துயரச் சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ஒரு லட்சம் ரூபாயும், தீ விபத்தில் காயமடைந்த முல்லை என்பவருக்கு 50,000 ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளார்.