தேர்தல் பணிக்கு செல்லும் அரசு ஊழியர்கள் நடுநிலையுடன் இருந்து பணியாற்ற வேண்டும் – எதிர்க்கட்சி தலைவர் வேண்டுகோள்

சேலம்
தேர்தல் பணிக்கு செல்லும் அரசு ஊழியர்கள் நடுநிலையுடன் இருந்து பணியாற்ற வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கழக இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி சேலம் கோட்டை மைதானத்தில் சேலம் மாநகராட்சியில் போட்டியிடுகின்ற 60 கழக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-
நான் முதலமைச்சராக இருந்தபோது ஒரே ஆண்டில் 11 மருத்துவக் கல்லூரிகளை கொண்டு வந்த அரசு கழக அரசு, 6 சட்ட கல்லூரிகளை கொண்டு வந்தோம். அதேபோல் பாலிடெக்னிக், பொறியியல் கல்லூரிகளையும் கொண்டு வந்தோம். இதையெல்லாம் கொண்டு வந்த காரணத்தினால் தான் பின்தங்கிய ஏழை மக்கள், உயர்நிலைக்கல்வி படிக்கக்கூடிய சூழ்நிலை உருவாகியுள்ளது.
நாட்டிலேயே உயர் கல்வித்துறையில் தமிழகம் நம்பர் 1 மாநிலமாக சாதனை படைத்தோம். உள்ளாட்சித் துறையில் சிறப்பாக செயல்பட்டு நூற்றுக்கும் மேற்பட்ட விருதுகளை வாங்கிய அரசு கழக அரசு. போக்குவரத்து துறையிலும் 4 விருதுகளை வாங்கி உள்ளோம். பொதுமக்களுக்கு தடையில்லாத மின்சாரம் வழங்கியது அம்மாவுடைய அரசு.
ஆனால் தற்போது தி.மு.க. ஆட்சியில் மின்தடை ஏற்பட்டால் அதற்கு அணில் போனது தான் காரணம் என்கிறார்கள். நாட்டு மக்களை எல்லாம் எப்படி ஏமாற்றி கொண்டிருக்கிறார்கள் என்று பாருங்கள். கழக ஆட்சியில் தடையில்லா மின்சாரம் வழங்கினோம். உற்பத்தியை பெருக்கினோம், தொழில்துறை வளர்ச்சியை உண்டாக்கினோம். புரட்சித்தலைவி அம்மா அவர்கள் இருக்கும்பொழுது தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டை சென்னையில் நடத்தினார்.
அதில் 3 லட்சத்து 5000 கோடி ரூபாய் மதிப்பில் தொழில் முதலீட்டை ஈர்த்து அதன் மூலம் 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகளை வாங்கி தந்த அரசு அம்மாவுடைய அரசு. இப்படி கல்வியில் புரட்சி, சுகாதாரத்றையில் புரட்சி, தொழில்துறையில் வளர்ச்சி, புரட்சி என்று புரட்சிக்கு சொந்தக்கார அரசு அம்மா அரசு.
ஸ்டாலின் 9 மாத காலத்தில் என்ன செய்திருக்கிறார். மக்கள் துன்பமும், வேதனையும் பட்டது தான் மிச்சம். சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை தினந்தோறும் நடக்கிறது. அப்படிப்பட்ட அரசாக தான் தி.மு.க. அரசு திகழ்கிறது. கழக ஆட்சியின்போது நான் முதலமைச்சராக இருந்தபோது இந்தியா டுடே என்ற நாளிதழ் ஒவ்வொரு ஆண்டும் துறை வாரியாக ஆய்வு செய்தது.
அதேபோல் காவல்துறையையும் ஆய்வு செய்தார்கள். அப்போது இந்தியாவிலேயே சிறப்பாக காவல்துறையை வழிநடத்துகிற அரசு என்று தேர்ந்தெடுக்கப்பட்டு எனக்கு விருது வழங்கினார்கள். அதேபோல் விருதுகளை அதிகமாக பெற்ற மாநிலமாக தமிழ்நாடு நான் முதலமைச்சராக இருந்தபோது இருந்தது. இதேபோல் மத்திய அரசிடம் கோரிக்கை வைத்து சாலைகள் அமைத்தோம். அவையெல்லாம் இப்போது கிடப்பில் போடப்பட்டுள்ளது.
தற்போது மத்திய நிதி அமைச்சர் நிதின் கட்கரி சொல்கிறார். தேசிய சாலை அமைப்பு பணிக்கு தமிழ்நாடு அரசு முழு ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்று கூறுகிறார். இது ஊடகங்களில் செய்தியாக வந்ததை நாம் பார்த்தோம். இதனால் சாலை அமைப்பு பணிகள் முடங்கி இருக்கிறது.
இப்படி அனைத்து பணிகளும் முடங்கி இருக்கும் பொழுது நான் முதன்மையான முதலமைச்சர் என்று ஸ்டாலின் சொல்கிறார். ஸ்டாலின் நான் கலைஞர் மகன் என்று கூறி கொள்கிறார். சொல்வதைதான் செய்வேன் என்கிறார். என்ன சொன்னார், என்ன செய்தார்? நீங்கள் தான் கலைஞர் மகன். ஆட்சி செய்யுங்கள். அதுதான் நாங்களும் கேட்கிறோம்.
தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவோம் என்று சொன்னார்கள். அரசு ஊழியர்கள் பெறும் கனவோடு இருந்தார்கள். தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் கைவிட்டு விட்டார்கள், சட்டமன்றத்திலேயே நிதியமைச்சர் சொல்கிறார்.
அரசு ஊழியர்களுக்கு சாப்பாடா இல்லை என்கிறார். இதனால் படித்த அரசு ஊழியர்களையும் ஏமாற்றியது தி.மு.க. அரசு. ஆனால் கழக அரசு அப்படி அல்ல. மத்திய அரசு 7-வது ஊதியக்குழுவை உயர்த்தி வழங்கியபோது தமிழகத்திலும் அரசு ஊழியர்களுக்கு சம்பளத்தை உயர்த்தி வழங்கியது கழக அரசு. ஆகவே அரசு ஊழியர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
அரசு ஊழியர்களுக்கு கழகம் எப்போதும் விரோதிகள் அல்ல. அரசு ஊழியர்களை மதிக்கின்ற கட்சி கழகம். என்னிடத்தில் ஒரு அரசு அதிகாரி சொன்னார். தி.மு.க. வேட்டி கட்டிக் கொண்டு வந்த நபர் ஒருவர் அதிகாரிகளை மிரட்டுவதாக கூறி வேதனைப்பட்டார். கழகம் ஆட்சியில் இருந்தபோது அரசு ஊழியர்களுக்கு எவ்வளவு மரியாதை கொடுத்தது.
இப்போதாவது அரசு ஊழியர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். இனியாவது கழகத்தை அரசு ஊழியர்கள் ஆதரிக்க வேண்டும். தேர்தல் அதிகாரிகளாக செல்லும் அரசு ஊழியர்கள் நடுநிலையாக இருந்து ஜனநாயக கடமை ஆற்ற வேண்டும். கழகம் அரசு அதிகாரிகளுக்கு எப்பொழுதும் துணை இருக்கும்.
இவ்வாறு கழக இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி பேசினார்.