பெரம்பலூர்

முதலமைச்சரின் குடிமராமத்து திட்டத்தின் கீழ் பெரம்பலூர் வட்டத்தில் ஏரிகள் புனரமைக்கும் பணி – மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டம், பெரம்பலூர் வட்டம் லாடபுரம் கிராமத்தில் உள்ள சின்ன ஏரி புனரமைப்பு பணி மற்றும் பெரம்பலூர் வட்டம் களரம்பட்டி ஏரி புனரமைக்கும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் வே.சாந்தா நேரில் சென்று ஆய்வு செய்தார்.

பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது:-

தமிழ்நாட்டில் நீர்வள ஆதாரங்களை பேணி பாதுகாக்கவும், நிலத்தடி நீர்வளத்தை பெருக்கவும், மழைநீரை விரயமின்றி சேமித்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கத்தோடு முதலமைச்சரின் குடிமராமத்து திட்டத்தின் கீழ், பெரம்பலூர் மாவட்டத்தில் நீர்வள ஆதாரத்துறையின் மூலம் ரூ.3.48 கோடி மதிப்பீட்டில் 14 பணிகள் தேர்வு செய்யப்பட்டு விவசாயிகளின் பங்களிப்போடு புனரமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டு பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.

அதன்படி பெரம்பலூர் வட்டத்திலுள்ள லாடபுரம் சின்ன ஏரியில் 900 மீ தொலைவிற்கு கரை பலப்படுத்தும் பணி, 1 எண் மதகு பழுது பார்க்கும் பணி, 9.50மீ தொலைவிற்கு கடக்கால் பழுது பார்க்கும் பணி, 42 எண்கள் எல்லைக்கல் நடும் பணிகள் ரூ.30 லட்சம் மதிப்பீட்டிலும், பெரம்பலூர் வட்டம் களரம்பட்டி ஏரியில் 41.00 மீ தொலைவிற்கு கடக்கால் பழுது பார்க்கும் பணி, 1392 மீ நீளத்திற்கு கரை பலப்படுத்துதல் பணி, 34 எண்கள் எல்லைக்கல் நடும் பணிகள்; ரூ.20.00 இலட்சம் மதிப்பீட்டிலும் விவசாயிகளின் பங்களிப்போடு புனரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. லாடபுரம் சின்ன ஏரி புனரமைக்கப்படுவதால் 0.483 மில்லியன் கனஅடி நீர் சேமிக்கப்படுவதோடு 58.240 ஹெக்டேர் விளைநிலங்களும், களரம்பட்டி ஏரி புனரமைக்கப்படுவதால் 0.384 மில்லியன் கனஅடி நீர் சேமிக்கப்படுவதோடு 75.320 ஹெக்டேர் விளைநிலங்களும் பயன்பெறும்.

நடைபெற்று வரும் முதலமைச்சரின் குடிமராமத்துப் பணிகள் மூலம் ஏரிகளின் கரைகளை பலப்படுத்துதல், மடைகளை பழுதுபார்த்தல் மற்றும் மறுகட்டுமானம் கலுங்குகளை பழுதுபார்த்தல், வரத்துக்கால்வாய்களை தூர்வாருதல், ஆக்கிரமிப்புகளை அகற்ற நில அளவை செய்து ஏரிகளில் எல்லை கற்களை நடுதல், சீமைக் கருவேல் முட்செடிகளை அகற்றுதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இப்பணிகளை தரமான முறையிலும், நீர்வள ஆதாரங்களை பேணி பாதுகாக்கின்ற வகையிலும், நிலத்தடி நீர்வளத்தை பெருக்கும் வகையிலும், மழைநீரை விரையமின்றி சேமித்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கிலும் நடைபெற வேண்டும். இப்பணிகளை காலம் தாழ்த்தாமல் விரைந்து பருவமழை தொடங்குவதற்கு முன்பாக முழுமையாக நிறைவு செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் வே.சாந்தா சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

இந்த குடிமராமத்து திட்ட ஆய்வில் பங்கேற்ற பதிவு பெற்ற விவசாய சங்கங்களிடம் நடைபெற்று வரும் பணிகளின் தன்மை குறித்தும் மேலும் விவசாய சங்க பிரதிநிதிகளின் கருத்துக்களையும் கேட்டறிந்தார். அதில் விவசாய சங்க பிரதிநிதிகள் இந்த பகுதிகளில் உள்ள கருவேல மரங்களை அகற்றிடவும், அணைக்கட்டுகளின் கரைகளை பலப்படுத்தவும் கோரிக்கை வைத்தார். உடனடியாக சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் இதற்கு தேவையான நடிவடிக்கைகள் எடுக்குமாறு அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வின்போது பொதுப்பணித்துறையின் உதவி செயற்பொறியாளர் பிரபாகரன், இளநிலை பொறியாளர் சித்தார்தன், பெரம்பலூர் வட்டாட்சியர் பாரதிவளவன் மற்றும் பாசன சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.