தற்போதைய செய்திகள்

கழக ஆட்சி- தி.மு.க. ஆட்சியை ஒப்பிட்டு பார்த்து வாக்களிப்பீர் – பொதுமக்களுக்கு முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத் வேண்டுகோள்

கடலூர்

கழக ஆட்சியையும், தி.மு.க. ஆட்சியையும் ஒப்பிட்டு பார்த்து வாக்களிக்க வேண்டும் என்று பொதுமக்களுக்கு முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கடலூர் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் 23 கழக வேட்பாளர்களை ஆதரித்து கடலூர் வடக்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.சி.சம்பத் நேற்று கடலூர் நகரில்தீவிர பிரச்சாரம் ெசய்தார். அப்போது அவர் பேசியதாவது:-

குடும்பத் தலைவிக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் தருவதாக பொய்யான வாக்குறுதியை அளித்து தி.மு.க. சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று விட்டது. ஆனால் இதுவரை அந்த பணத்தை கொடுக்கவில்லை.

பொதுமக்கள் எங்கே அந்த பணம் என்று உதயநிதியை பார்த்து கேட்கின்றனர். அதனால் அவர் பிரச்சாரத்தை ரத்து செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. விவசாயக் கடனை ரத்து செய்வதில் பல்வேறு கட்டுப்பாடுகளை விடியா அரசு விதித்துள்ளது. 5 பவுன் நகைக்கடன் தள்ளுபடிக்கும் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இதனால் 35 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தி.மு.க. ஆட்சியில் கேஸ் சிலிண்டர் விலை ஆயிரம் ரூபாய்க்கு மேல் உயர்ந்துள்ளது. நீட் தேர்வை ஒரே கையெழுத்தில் ரத்து செய்வோம் என்று கூறி ஆட்சிக்கு வந்தவர்கள் இப்போது நீட் தேர்வை ரத்து செய்ய முடியாமல் விழி பிதுங்கி வருகின்றனர். கடந்த பொங்கலின் போது நாம் ஒவ்வொரு ரேஷன் கார்டுக்கும் 2500 ரூபாய் வழங்கினோம்.

அப்போது 5000 ரூபாய் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்த ஸ்டாலின் தற்போது பொங்கல் பண்டிகைக்கு ஒரு ரூபாய் கூட கொடுக்காமல் மக்களை ஏமாற்றி விட்டார். தி.மு..க ஆட்சியில் வழங்கப்பட்ட பொங்கல் தொகுப்பில் வெல்லம் தண்ணீராக ஓடுகிறது. அரிசியில் புழு உள்ளது. புளியில் வண்டுகள் இருக்கிறது. மொத்தத்தில் கேடுகெட்ட பொங்கல் தொகுப்பை கொடுத்துள்ளார்கள். இதுதான் இந்த ஆட்சியின் லட்சணம்.

தி.மு.க. ஆட்சியையும், கழக ஆட்சியையும் ஒப்பிட்டு பொது மக்கள் வாக்களிக்க வேண்டும். உங்களிடம் வாக்கு கேட்டு தி.மு.க.வினர் வருவார்கள். அப்போது அவர்களிடம் நீங்கள் கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றினீர்களா? என்று கேள்வி கேட்க வேண்டும்.

ஒட்டுமொத்த தமிழக மக்களும் ஏன் தி.மு.க.வுக்கு ஓட்டு போட்டோம் என்று வருத்தப்படும் அளவிற்கு இந்த ஆட்சி இருக்கிறது. மக்கள் நலனுக்காக பாடுபடும் அண்ணா தி.மு.க. கடந்த முறை போல் மீண்டு வெற்றி பெற்று கடலூர் மாநகராட்சியை கைப்பற்ற பொதுமக்கள் வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு கடலூர் வடக்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.சி.சம்பத் பேசினார்.