கோவை

கொரோனா பாதித்த இளைஞருக்கு குடல் அறுவை சிகிச்சை செய்து காப்பாற்றிய கோவை அரசு மருத்துவர்கள்

கோவை

கொரோனா பாதித்த இளைஞருக்கு நள்ளிரவில் 4 மணி நேரம் குடல் அறுவை சிகிச்சை செய்து கோவை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் காப்பாற்றியுள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் கருப்பகவுண்டன்புதூர் பகுதியில் வசிக்கும் வட மாநிலத்தைச் சேர்ந்த வாலன் ராவ் என்பவரின் மகன் விக்ரம்குமார் (20). கடந்த ஒரு வாரத்துக்கு முன் சாலை விபத்தில் சிக்கிய விக்ரம்குமாருக்கு, வயிற்றினுள் உள்ள குடலில் துளை ஏற்பட்டது. திருப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவருக்கு, குடலோடு குடல் இணைக்கப்பட்ட அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

ஆனால், அறுவை சிகிச்சை செய்த இடத்தில் கசிவு ஏற்பட்டதால், மேல் சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கடந்த 14-ம்தேதி நள்ளிரவில் உயிருக்கு ஆபத்தான நிலையில், அனுமதிக்கப்பட்டதால், மீண்டும் அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்யப்பட்டது.

அறுவை சிகிச்சை மருத்துவர் வெங்கடேசன், உதவி மருத்துவர் முருகதாசன், மயக்கவியல் துறைத் தலைமை மருத்துவர் நர்மதா யாங்ஷி , உதவி மருத்துவர் செந்தில்நாதன், பயிற்சி மருத்துவர்கள் பெரியசாமி, சபரிகார்த்திக், செவிலியர் விஜயலட்சுமி ஆகியோர் அடங்கிய மருத்துவக் குழுவினர் வெற்றிகரமாக அறுவை சிகிச்சையை மேற்கொண்டு உயிரைக் காப்பாற்றினர்.

இதுதொடர்பாக மருத்துவமனையின் டீன் பி.காளிதாஸ் கூறும்போது, “விக்ரம்குமாரை அனுமதித்தபோது அவருக்குக் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இருப்பினும், உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டி இருந்ததால் பரிசோதனை முடிவுக்குக் காத்திராமல் நள்ளிரவு 1.45 மணி முதல் காலை 6.30 மணி வரை முழு கவச உடை (பிபிஇ கிட்) அணிந்து மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மேற்கொண்டனர்.

அப்போது, வயிறு முழுவதையும் திறந்து, குடலில் கசிவு உள்ள இடத்தைக் கண்டறிந்து, பாதிக்கப்பட்ட இடம் அகற்றப்பட்டது. பின்னர், வெற்றிகரமாக குடலோடு குடல் இணைக்கப்பட்டது. பெரிய அறுவை சிகிச்சை என்பதால் விக்ரம்குமார் உடனடியாக மயக்கத்தில் இருந்து வெளியே வரவில்லை.

ஒருநாள் முழுவதும் அவருக்கு செயற்கை சுவாசம், அதற்கான மருந்துகள் அளிக்கப்பட்டு இயல்பு நிலைக்குக் கொண்டுவரப்பட்டார்.அறுவை சிகிச்சைக்குப் பிறகு வெளியான கொரோனா பரிசோதனை முடிவில்தான் தொற்று இருப்பது உறுதியானது. அவசர காலத்தில் மருத்துவர்கள் துணிந்து பணியாற்றியதால் இளைஞரின் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது” என்றார்.