கோவையை கலவர பூமியாக மாற்ற தி.மு.க.வினர் முயற்சி – எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி குற்றச்சாட்டு

கோவை
வார்டு தோறும் வெளி மாநில ரவுடிகளை அனுப்பி வைத்து கோவையை கலவர பூமியாக மாற்ற தி.மு.க.வினர் முயற்சித்து வருவதாக எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி குற்றம் சாட்டியுள்ளார்.
கோவை மாவட்டம் முழுவதும் சென்னை, கரூர் மற்றும் வெளி மாநிலங்களை சேர்ந்த ரவுடிகளை வரவழைத்து தி.மு.க.வுக்கு ஆதரவாக பணம் மற்றும் பரிசு பொருட்களளை அக்கட்சியினர் கொடுத்து வருகின்றனர்.
இதனை தடுக்க முயன்ற கழக நிர்வாகிகளை மீது தாக்குதல் மற்றும் கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட சம்பவவங்களில் தி.மு.க.வினர் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையடுத்து கழக அமைப்பு செயலாளரும், கோவை புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சரும், எதிர்க்கட்சி கொறடாவுமான எஸ்.பி.வேலுமணி தலைமையில் சட்டமன்ற உறுப்பினர்கள் கோவை மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை ஆணையர் ஆகியோரிடம் தேர்தல் ஆணைய விதிமுறைகளுக்கு புறம்பாக ஈடுபட்டு வரும் தி.மு.க.வினர் மற்றும் ரவுடிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் மனு அளித்தனர்.
இதன் பின்னர் எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு தி.மு.க.வினர் ஏற்பாட்டின் பேரில் கோவை மாவட்டம் முழுவதும் சென்னை கரூர் மற்றும் வெளி மாநிலங்ளை சேர்ந்த ரவுடிகளை கொண்டு தி.மு.க.வுக்கு ஆதரவாக சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இவர்கள் சட்டத்திற்கு கட்டுப்பட்டு தேர்தல் வேலைகளில் ஈடுபட்டு வரும் கழக நிர்வாகிகள் மீது தாக்குதல் நடத்துவதோடு வாக்காளர்களை அச்சுறுத்தும் வகையிலும் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் மீது காவல்துறை மற்றும் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும் கழகத்தினர் மீது பொய்வழக்கு போட்டு காவல் நிலையத்தில் சட்ட விரோதமாக அடைத்து தரக்குறைவாக நடத்துகின்றனர்.
குறிப்பாக கோவை 90-வது வார்டு குனியமுத்தூரில் தி.மு.க. ஏற்பாட்டின் பேரில் வெளிமாவட்டங்களை சேர்ந்த ரவுடிகள் மூலம் வாக்காளர்களுக்கு பரிசு பொருட்கள் மற்றும் பணம் கொடுத்து கொண்டிருந்தனர்.
அப்போது அந்த நபர்கள் மீது புகார் கொடுத்த கழக செய்தி தொடர்பாளர் பேராசிரியர் கல்யாணசுந்தரம் மீது பொய் வழக்குப் பதிவு செய்ததுடன் அவருடன் இருந்த சுமன், பிரகாஷ், சக்திகுமார், ஜான்சன், சண்முகம், ஹரிபிரசாத், கார்த்திக் கிருஷ்ணன், ராகுல் பிரசாத் உள்ளிட்ட தொண்டர்களை கண்ணியமற்ற முறையில் தரையில் அமர வைத்து அதிகாரத்தை பயன்படுத்தி கொன்று விடுவோம் என்று கோவை குனியமுத்தூர் காவல் ஆய்வாளர் பாலமுருகன் நடந்து கொண்டுள்ளார். மேலும் சம்பந்தமில்லாத ராமநாதபுரம் காவல் நிலையத்தில் சட்ட விரோதமாக அடைத்து வைத்து மிரட்டி உள்ளனர்.
அமைதிப் பூங்காவாக திகழும் கோவை மாவட்டத்தில் தி.மு.க.வினர் கலவர பூமியாக மாற்ற தி.மு.க.வினர் முயற்சி செய்து வருகிறார்கள். சென்னை மற்றும் வெளிமாநில ரவுடிகளை அழைத்து வந்து ஒவ்வொரு வார்டுக்கும் அனுப்பி வைத்து அராஜகத்தில் ஈடுபடுவதால் பதற்றமான சூழ்நிலை தற்போது நிலவி வருகிறது.
இது கோவை மக்கள் மத்தியில் அச்ச உணர்வை ஏற்படுத்தி உள்ளது. இதை கட்டுப்படுத்த வேண்டிய காவல்துறை தி.மு.க.வுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறது. இது தொடர்பாக நியாயம் கேட்க சென்ற சட்டமன்ற உறுப்பினர்களை தரக்குறைவான முறையில் காவல்துறை நடத்தும் சூழ்நிலை நிலவி வருகிறது.
எனவே கோவை மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அமைதியான முறையில் நடைபெற வழிவகை செய்ய வேண்டும் என்று பொது மக்களின் சார்பாக கேட்டுக் கொள்கிறோம்.
இவ்வாறு எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி. வேலுமணி கூறினார்.