குடும்பத்துக்கு ரூ.9900 தி.மு.க. அரசு பாக்கி – முன்னாள் அமைச்சர் நத்தம் இரா.விசுவநாதன் பேச்சு

திண்டுக்கல்,
தேர்தல் வாக்குறுதிப்படி குடும்பத்துக்கு ரூ.9900 தி.மு.க. அரசு தர வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் நத்தம் இரா.விசுவநாதன் கூறினார்.
திண்டுக்கல் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் பதவிக்கு கழகத்தின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து திண்டுக்கல் நகரில் நேற்று திண்டுக்கல் கிழக்கு மாவட்ட கழக செயலாளரும். முன்னாள் அமைச்சருமான நத்தம் இரா. விசுவநாதன் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-
நடைபெற்று வருகின்ற தி.மு.க. ஆட்சி மக்களின் விருப்பத்தோடு நடைபெறவில்லை. கடந்த 9 மாத காலத்தில் ஒரு சாதனையாவது செய்துள்ளார்களா? தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளார்களா? நீட் தேர்வை ரத்து செய்துள்ளார்களா? ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்கி உள்ளார்களா?
அரசு ஊழியர்களுக்கு பழைய பென்ஷன் திட்டம் கொண்டு வரப்படும் என கூறி 30 லட்சம் வாக்குகளை ஏமாற்றி வாங்கியுள்ளனர். இதனால் அரசு ஊழியர்கள் தி.மு.க. ஆட்சியின் மீது கடுமையான கோபத்தில் உள்ளனர். வரக்கூடிய தேர்தலில் கழக அரசுக்கு அரசு ஊழியர்களின் ஆதரவு இருக்கும்.
குடும்பத் தலைவிக்கு மாதம் ரூ 1000 தருவேன் என்றார்கள். கேஸ் சிலிண்டருக்கு ரூ.100 மானியம் தருகிறேன் என்றார்கள். 9 மாத கால கணக்கின்படி ரூ. 9 ஆயிரத்து 900 அவர்கள் தர வேண்டும். தி.மு.க.வினர் வாக்கு கேட்டு வந்தால் அவர்களிடம் முதலில் ரூ9,900 பணத்தை கொடுங்கள். கொடுத்த வாக்கை நிறைவேற்றுங்கள் என பொதுமக்கள் கேள்வி எழுப்ப வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.