கழகம் வரலாற்று வெற்றி பெறும் – ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் திட்டவட்டம்

தூத்துக்குடி
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க.வுக்கு பாடம் புகட்ட மக்கள் முடிவு எடுத்து விட்டார்கள். எனவே கழகம் வரலாற்று வெற்றி பெறும் என்று ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.
நகர்ப்புற உள்ளாட்சித்தேர்தல் 19.2.2022 அன்று நடைபெற உள்ளதை முன்னிட்டு, கழக ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் நேற்று தூத்துக்குடி மாநகராட்சி, ஏவிஎம் மஹாலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்துகொண்டு,
தூத்துக்குடி மாநகராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள் மற்றும் தூத்துக்குடி வடக்கு, தூத்துக்குடி தெற்கு ஆகிய மாவட்டங்களுக்கு உட்பட்ட நகராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள், பேரூராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள் ஆகிய பதவிகளுக்கு, கழகத்தின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் செய்தார்.
அப்போது அவர் பேசியதாவது:–
கடந்த 2006-11 ம் ஆண்டு தி.மு.க. ஆட்சி மின்சார தட்டுப்பாட்டை தீர்க்க முடியாத ஆட்சியாக இருந்தது. அம்மா 2011-ல் ஆட்சி பொறுப்பேற்ற ஒரு வருடத்தில் தமிழகத்தை முழுவதும் மின்சார தட்டுப்பாடு இல்லாத மாநிலமாக மாற்றினார். மின்சாரம் நல்ல முறையில் இன்று வரை கிடைப்பதற்கு அம்மா தான் காரணம். குடும்பத் தலைவியின் பணி சுமையை குறைப்பதற்கு விலையில்லா மிக்சி, கிரைண்டர், மின்விசிறி தருவேன் என்று அறிவித்தார். 5 ஆண்டு காலம் நிறைவாக இதனை வழங்கினார்.
திருமண நிதியுதவியாக ரூ.25 ஆயிரம் என அறிவித்தார். அதனை அளித்தார். 5 ஆண்டு காலம் தாலிக்கு தங்கம் 4 கிராம் அளித்தார். அந்த பெண் பட்டதாரியாக இருந்தால் திருமண
உதவித்தொகையை ரூ.50 ஆயிரமாக வழங்கினார். 2016-ல் தேர்தலில் தாலிக்கு தங்கம் இனிமேல் 8 கிராம் வழங்கப்படும் என்று தெரிவித்தார்.
அம்மாவின் மறைவுக்கு பின்னர் எடப்பாடியார் ஆட்சியில் 8 கிராம் தங்கம் வழங்கப்பட்டது என்பதுதான் வரலாறு. இப்படி பல்வேறு நிலைகளில், நாட்டு மக்களுக்கு சொன்ன வாக்குறுதிகளை காப்பாற்றிய அரசு
அம்மா அரசு.
நாட்டு மக்களையும், நாட்டை பற்றியும் சிந்தித்து தொலைநோக்கு திட்டங்களை அம்மா அவர்கள் பார்த்து பாரர்த்து செயல்படுத்தினார். 10 ஆண்டுக்காலம் யாரும் குறை சொல்ல முடியாத அளவுக்கு கழக ஆட்சி நடைபெற்றது. 2021-ல் தேர்தலில் மீண்டும் கழக ஆட்சி வரும் என்ற ஆரோக்கியமான சூழ்நிலை இருந்த நேரம். மக்கள் நம் மீது நம்பிக்கை
வைத்திருந்தார்கள். ஆனால் தி.மு.க. சொன்ன பொய்யான வாக்குறுதிகளை நம்பி மக்கள் வாக்களித்ததால் அக்கட்சி ஆட்சிக்கு வந்தது. சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றுகின்ற ஆட்சியாக இருக்கிறதா என்றால் இல்லை.
மாணவர்களின் நலன் கருதி, நான் முதல்வராக வந்தவுடன் நான் போடும் முதல் கையெழுத்தில் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று சொன்னார். நீட் தேர்வை யார் ரத்து செய்ய முடியும். பாராளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி குடியரசு தலைவர் தான் ரத்து செய்ய முடியும். போகிற போக்கில் சொல்லி விட்டு போய் விட்டார். வீட்டில் சென்று கையெழுத்து போட்டு போட்டு பார்க்கிறார். நீட் ரத்து ஆகவில்லை.
ஓய்வூதியத்தை ரூ.1000 திருந்து, 1,500 ஆக உயர்த்தி தருவதாக சொன்னார்கள். தரவில்லை. இல்லத்தரிகளுக்கு மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் வங்கி கணக்கில் சேர்க்கபடும் என்றார்கள். இதுவரை சேரவில்லை. 1 00 நாள் வேலை திட்டத்தை 150 நாட்களாக உயர்த்தி தருவோம் என்றார்கள். உயர்த்தி தரவில்லை.
5 பவுனுக்கு குறைவாக நகைக் கடன் பெற்றிருந்தால் ரத்து செய்யப்படும் என்றார்கள். இவர் மட்டுமல்ல அவர் மகனும் தேர்தல் பிரசாரத்தில் தெரிவித்தார். இவர்களை நம்பி தமிழகத்தில் உள்ள 50 லட்சம் பேர் நகையை அடமானம் வைத்தார்கள். இப்போது 10 மாதம் கழித்து தகுதி உள்ளவர்களுக்கு மட்டுமே நகைக் கடன் தள்ளுபடி என்று சொல்கிறார்கள்.
நகையை அடமானம் வைத்து அவர்கள் நடுத்தெருவில் நிற்கும் சூழ்நிலையை உருவாக்கியது யார்.
நாங்கள் அம்மாவின் காலத்திலிருந்து 7 ஆண்டு காலம் பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கினோம். அதோடு ஆயிரம் ரூபாய் அளித்தோம். கடந்த ஆண்டு நல்ல பரிசு பொருட்களோடு சேர்த்து ரூ.2,500 வழங்கினோம். அப்போது ஸ்டாலின் ரூ.2,500 போதாது. ரூ.5 ஆயிரம் தரவேண்டும் என்று தெரிவித்தார். ஆனால் தற்போது தி.மு.க. ஆட்சியில் அவர் ரொக்கப்பரிசு வழங்கவில்லை. அளித்த பொருளும் சரியில்லை.
வெள்ளம் உருகி தண்ணீராக போகிறது. பப்பாளி விதையை எதுக்கு போட்டார்கள் என்று தெரியவில்லை. இவை அனைத்தையும் வெளி மாநிலத்தில் வாங்கியுள்ளார்கள். இந்த 9 மாத காலத்தில் எந்த உருப்படியான திட்டத்தையும் செயல்படுத்தவில்லை. நாங்கள் செயல்படுத்திய திட்டங்களை தான் இப்போது நடைமுறை படுத்திவருகிறார்கள்.
இன்னும் அவர்கள் ஆரம்பிக்கவே இல்லை. திகைத்து போய் நிற்கிறார்கள். தி.மு.க. அரசிடம் நிர்வாக திறமை இல்லை. ஆட்சி பொறுப்பேற்று 9 மாதத்தில் மக்கள் அதிருப்தியை சம்பாதித்த ஒரே அரசு தி.மு.க. அரசு தான் என்பது நிரூபணம் ஆகியுள்ளது. பொய் சொல்லி பொய் வாக்குறுதிகளை அளித்த தி.மு.க.வுக்கு சரியான பாடம் புகட்ட வேண்டும் என்று அனைத்து மக்களும் முடிவு எடுத்துள்ளார்கள். அனைத்து இடங்களிலும் கழகம் மாபெரும் வெற்றி பெறும் என்பது வரலாறு ஆகப்போகிறது.
அதற்கு சாதகமான சூழ்நிலை ஏற்படுள்ளது.
இவ்வாறு கழக ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.