தற்போதைய செய்திகள்

ஸ்டாலிலின் பித்தலாட்டத்தை நம்பி மக்கள் இனியும் ஏமாற மாட்டார்கள் – முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் உறுதி

விழுப்புரம்

ஸ்டாலினின் பித்தலாட்டத்தை நம்பி மக்கள் இனியும் ஏமாற மாட்டார்கள் என்று முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கூறினார்.

விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சி.வி.சண்முகம் கலந்து கொண்டு கோட்டக்குப்பம் நகராட்சி மன்ற வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் 22 கழக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-

தேர்தலில் பொய்யான வாக்குறுதிகளை அளித்து தி.மு.க. ஆட்சிக்கு வந்துள்ளது. குறிப்பாக பெண்களின் ஓட்டுகளை பெற முடியாத திட்டங்களை கூறி ஏமாற்றி உள்ளனர். சட்டமன்ற தேர்தலின்போது 525 வாக்குறுதிகளை ஸ்டாலின் வெளியிட்டார்.

ஆனால் ஆட்சிக்கு வந்து 9 மாதங்கள் கடந்து விட்டது. ஆனால் அறிவித்த திட்டங்கள் எதையும் செயல்படுத்தவில்லை. பொங்கல் பண்டிகைக்கு பணம் தருவார்கள் என மக்கள் எதிர்பார்த்தனர். வழங்கப்படவில்லை. கழக ஆட்சியில் ரூ.2500 வழங்கினோம். கடந்த ஆட்சியில் கடன் வாங்கியதால் நிதி பற்றாக்குறை என ஸ்டாலின் காரணம் கூறுகிறார்.

கருணாநிதி ஆட்சியில் ரூ.2 லட்சத்து 25 ஆயிரம் கோடி கடன் வாங்கினார். அதன் பிறகு 10 ஆண்டுகள் ஆட்சி செய்த நாங்கள் மத்திய அரசின் வரைமுறைக்கு உட்பட்டு கடன் பெற்றுள்ளோம். சில திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என்றால் விதிமுறைக்கு உட்பட்டு கடன் பெற்று தான் ஆக வேண்டும். பொய்யான பிரச்சாரங்களை கூறி ஆட்சிக்கு வந்த இந்த அரசால் மக்கள் வஞ்சிக்கப்பட்டு உள்ளனர்.

ஸ்டாலினின் பித்தலாட்டத்தை நம்பி இனியும் மக்கள் ஏமாற மாட்டார்கள். இதனால் தான் ஸ்டாலின் காணொலி வாயிலாக பிரச்சாரம் செய்து வருகிறார்.

தி.மு.க. அரசுக்கு வருகின்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மக்கள் சாவுமணி அடிக்க வேண்டும். இதற்கு அச்சாரமாக கோட்டக்குப்பம் நகராட்சியில் போட்டியிடும் கழக வேட்பாளர் அனைவரையும் வெற்றி செய்ய வேண்டும்.

இவ்வாறு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சி.வி.சண்முகம் பேசினார்.

கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் சக்கரபாணி, அர்ஜூனன், ஒன்றிய கழக செயலாளர்கள் சதீஷ்குமார், பக்தவச்சலம், ராமதாஸ், நகர கழக செயலாளர் கணேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.