தற்போதைய செய்திகள்

விடியா தி.மு.க. ஆட்சியால் மக்களுக்கு பயன் இல்லை- முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ குற்றச்சாட்டு

மதுரை

தி.மு.க. ஆட்சியால் மக்களுக்கு எந்த பயனும் இல்லை. ஆனால் கழக ஆட்சியில் தமிழகம் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி பீடுநடை போட்டதாக முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பெருமிதத்துடன் கூறினார்.

மதுரை மாநகராட்சி 85-வது வார்டு மாமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் கழக வேட்பாளர் முத்துமாரி ஜெயக்குமாரை ஆதரித்து மாநகர் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ. தீவிர பிரச்சாரம் செய்து இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது:-

தமிழகத்தில் 30 ஆண்டுகாலம் சிறப்பான ஆட்சியை கழகம் தந்தது. அந்த காலத்தில் தமிழகம் பீடுநடை போட்டது. அனைத்து துறைகளும் சிறப்பாக செயல்பட்டன. இதன் காரணமாக எண்ணற்ற தேசிய விருதுகளை குவித்து சாதனை படைத்தது. ஆனால் தி.மு.க. ஆட்சிக்காலத்தில் மக்களுக்கு எந்த திட்டங்களும் வழங்கப்படவில்லை

மதுரையில் இரண்டு அமைச்சர்கள் உள்ளனர். அவர்கள் மதுரைக்கு என்ன திட்டத்தை கொண்டு வந்தார்கள் என்று கூற முடியுமா? முடியாது. ஏனென்றால் கடந்த அம்மா ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்களான பெரியார் பேருந்து நிலையம், குருவிக்காரன் கோலம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை முதலமைச்சர் காணொலி காட்சி மூலம் திறந்து வைக்கிறார். நாம் பெற்ற குழந்தைக்கு அவர் பெயர் வைத்தது போல் உள்ளது.

9 மாத தி.மு.க. ஆட்சியால் மக்களுக்கு எந்த பயனும் இல்லை. ஆனால் கருணாநிதி புகழை பரப்ப ரூ.110 கோடியில் மதுரையில் நூலகம் அமைக்கப்பட்டு வருகிறது. மதுரையில் மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்ற நிதி இல்லை என்று கூறுகிறார்கள். இதற்கு மட்டும் எப்படி நிதி வந்தது? ஆகவே பொங்கல் பரிசில் ஏமாற்றிய தி.மு.க.வுக்கு மக்கள் பாடம் புகட்டுவதோடு கழக வேட்பாளர்களை அமோக வெற்றி பெற செய்ய வேண்டும்.

இவ்வாறு மாநகர் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ. பேசினார்.

பிரச்சாரத்தின் போது மாவட்ட கழக துணை செயலாளர் ராஜா, கழக இலக்கிய அணி இணை செயலாளர் வில்லாபுரம் ரமேஷ், ஜோசப் தனுஸ்லால், ஜெயக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.