தற்போதைய செய்திகள்

கொரோனா பரிசோதனை முடிவினை எஸ்.எம்.எஸ் மூலம் தெரிவிக்கும் நடைமுறை – அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் தொடங்கிவைத்தார்

சென்னை

சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை செய்பவர்களுக்கு பரிசோதனை முடிவுகள் அவர்களின் கைப்பேசிக்கு குறுஞ்செய்தியாக ( எஸ்.எம்.எஸ்) அனுப்பும் சேவையை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தொடங்கிவைத்தார்.

தொடர்ந்து அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அம்மாவின் அரசு, முதலமைச்சரின் தலைமையில், கொரோனா தொற்று காலத்திலும் நோயாளிகளுக்கு சிறப்பான முறையில் சிகிச்சைகளை அளித்து வருகிறது. தமிழ்நாட்டில் 63 ஆய்வகங்கள் மற்றும் 78 தனியார் ஆய்வகங்கள் என மொத்தம் 141 ஆய்வகங்கள் மூலம் இதுவரை 43,46,861 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இந்திய அளவில் தமிழ்நாட்டில்தான் அதிக எண்ணிக்கையிலான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில் இராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் மட்டும் 1,91,000 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதுநாள்வரை ஆர்டி -பிசிஆர் பரிசோதனை செய்து கொண்டவர்களுக்கு எஸ்ஆர்எப் என்ற பரிசோதனை படிவ எண் வழங்கப்பட்டு வந்தது. அந்த எண்ணைக் கொண்டு பரிசோதனை மையத்திற்கு சென்று முடிவினை தெரிந்து கொள்ள வேண்டும். ஆனால் தற்போது தொடங்கப்பட்டிருக்கும் இந்த புதியமுறையின் மூலம் பரிசோதனை செய்யும் போது நோயாளி அல்லது அவரை சார்ந்த நபரின் கைப்பேசி எண் பெற்றுக் கொள்ளப்படும். 24 மணி நேரத்திற்குள்ளாகவே, அந்த கைப்பேசி எண்ணிற்கு பரிசோதனை முடிவுகளை குறுஞ்செய்தியாக (எஸ்.எம்.எஸ்) அனுப்பி வைக்கப்படுகிறது. இது பொதுமக்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்றுள்ளது..

இந்த புதிய நடைமுறையால் காலதாமதமின்றி பரிசோதனை முடிவு கிடைக்கப் பெறுவதால் உடனடியாக சிகிச்சை பெற முடியும். நோயாளிக்கு ஏற்படும் மன உளைச்சல் குறையவும் பேருதவியாக உள்ளது. இந்த புதியமுறை அனைத்து பரிசோதனை மையங்களுக்கும் படிப்படியாக விரிவுபடுத்தப்படும்.

அம்மாவின் அரசு, முதலமைச்சரின் தலைமையில் மேற்கொள்ளப்பட்டு வரும் மக்கள் நலன் காக்கும் பணிகள் கொரோனா சிகிச்சையை வலுப்படுத்துவதாக அமையும். பல்வேறு தரப்பினர்களின் தொடர் பாராட்டுக்களை பெற்று வருகிறது.

இவ்வாறு அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.