தி.மு.க.வினரிடம் வங்கி கணக்கை கொடுத்து ஏமாந்து விடாதீர்கள் – முன்னாள் அமைச்சர் தங்கமணி எச்சரிக்கை

நாமக்கல்,
தேர்தல் நேரத்தில் பொய் சொல்லி ஏமாற்றும் தி.மு.க.வினரிடம் வங்கி கணக்கை கொடுத்து ஏமாற வேண்டாம் என்று முன்னாள் அமைச்சர் பி.தங்கமணி எச்சதிக்கை விடுத்துள்ளார்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு நாமக்கல் மாவட்டத்தில் போட்டியிடும் கழக வேட்பாளர்களை ஆதரித்து கழக அமைப்பு செயலாளரும், நாமக்கல் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பி.தங்கமணி எம்.எல்.ஏ. தீவிர பிரச்சாரம் செய்து இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார். ஆலம்பாளையம் பேரூராட்சியில் பிரச்சாரம் செய்தபோது அவர் பேசியதாவது:-
பத்தாண்டு காலத்தில் இந்த பகுதி மக்களின் அனைத்து தேவைகளையும் நிறைவேற்றியுள்ளேன். இந்த பத்து மாத காலத்தில் தி.மு.க.வினர் ஒரு திட்டத்தையாவது கொண்டு வந்திருக்கிறார்களா? தேர்தல் காலத்தில் தி.மு.க.வினர் வாக்குறுதி கொடுத்தார்கள். எப்படி கொடுத்தார்கள்.
கடந்த காலங்களில் கருணாநிதி இருக்கின்ற பொழுது அனைவருக்கும் இரண்டு ஏக்கர் நிலம் தருவதாக கூறினார்கள். அதேபோல் இப்போது அவருடைய மகன் மகளிர் அனைவருக்கும் ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகை கொடுப்பதாக வாக்குறுதி அறிவித்தார்.
ஒரு குடும்பத் தலைவிக்காவது கொடுத்தார்களா? ஸ்டாலின் மகன் உதயநிதி கரூரில் பிரச்சாரம் செய்த பொழுது, ஆயிரம் ரூபாய் தருவதாக கூறினீர்களே எங்கே என்று மகளிர் எல்லோரும் கேட்டனர். அதற்கு இன்னும் நான்கு வருடகாலம் ஆட்சி இருக்கிறது, கொடுப்போம் என்று சொல்லி விட்டு சென்று விட்டார்.
அதேபோல் இங்கே போட்டியிடுபவர் என்ன சொல்கிறார். தி.மு.க.வின் லெட்டர் பேடில் உங்களது ஆதார் எண்ணை கொடுங்கள். ரேஷன் கடையில் கொடுங்கள். நாங்கள் உங்களுக்கு ஆயிரம் ரூபாய் தருகிறோம் என்று கூறுகிறார். நாங்கள் பொங்கல் பரிசு கொடுத்தோம்., ரூ.1000, ரூ.2500 கொடுத்தோம். இப்படி வாங்கிக் கொண்டு கொடுத்தோமா? 10 மாதமாக மக்களை பற்றி கவலைப்படாமல் இப்பொழுது தேர்தல் நேரத்தில் பொய்யான வாக்குறுதி கொடுத்து ஏமாற்றுகிறார்கள்.
மக்கள் திட்டம் எதுவாக இருந்தாலும் ரேஷன் கடைக்கு சென்று நேரடியாக வாங்கிக் கொள்ளலாம். எந்த ஒரு லெட்டர் பேடிலும் கையெழுத்து போட்டு ஏமாந்து விடாதீர்கள். பத்து மாதமாக கொடுக்காமல் ஏன் இப்போது கொடுக்கிறார்கள்.
ஆலம்பாளையம் பேரூராட்சியில் மட்டும் தான் இந்த மாதிரி செய்து கொண்டிருக்கிறார்கள். வேறு எங்கும் கிடையாது. தமிழ்நாடு முழுவதுமே கொடுத்தால் மட்டுமே இங்கு கொடுக்க முடியும். ஏமாந்து விடாதீர்கள்.
உள்ளாட்சியில் ஒரு நல்லாட்சி மலர வேண்டும். இந்த குதி மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும். இந்த பகுதி மக்களின் அடிப்படை வசதிகளை செய்து தருவதற்கு இந்த பகுதி மக்களின் திட்டங்களை நிறைவேற்றுவதற்கு மக்கள் பிரதிநிதிகளாக நல்லவர்களை தேர்ந்தெடுக்க வேண்டும். அதற்காக இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து கழக வேட்பாளர்களை வெற்றி பெற செய்யுங்கள்.
இவ்வாறு கழக அமைப்பு செயலாளரும், நாமக்கல் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பி.தங்கமணி பேசினார்.