தற்போதைய செய்திகள் மற்றவை

கழகத்தின் வெற்றியை பறிக்க சதி – முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் குற்றச்சாட்டு

சென்னை, பிப். 18-

கழகத்தின் வெற்றியை பறிக்க சதி நடப்பதாக முன்னாள் அமைச்சர் டி.ெஜயக்குமார் குற்றம் சாட்டியுள்ளார்.

தி.மு.க.வின் தேர்தல் விதிமீறல்கள் குறித்து சென்னை மாநகர காவல் ஆணையரிடம் நேற்று கழக அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான டி.ஜெயக்குமார், கழக செய்தி தொடர்பாளரும், கழக வழக்கறிஞர் பிரிவு இணை செயலாளருமான ஆர்.எம்.பாபு முருகவேல் ஆகியோர் புகார் மனு அளித்தனர். இதன் பின்னர்

முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கழகத்தின் வெற்றியை பறித்து விடவேண்டும் என்பதற்காக ஜனநாயகத்தில் அனுமதிக்க முடியாத அநியாயங்களை தி.மு.க. இன்றைக்கு அரங்கேற்றி வருகிறது. கழக வேட்பாளர்கள் கடத்தப்படுகிறார்கள்.

வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கிறார்கள். வேளச்சேரி, தாம்பரம் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கையும் களவுமாக பிடிபட்டுள்ளனர். அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதா என்றால் இல்லை. பறக்கும் படை வருகிறது. ஆனால் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. பறக்கும் படையை பொறுத்தவரையில் மாநில

தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் பதுக்கும் படையாகத்தான் உள்ளது.

ஒவ்வொரு மாவட்டத்திலும் குடோனை பிடித்து அண்டா, குண்டா என்று என்னென்ன பொருட்கள் உள்ளதோ அவை அத்தனையையும் அங்கு பதுக்கி வைக்கிறார்கள். வாக்காளர்களுக்கு பணத்தை அளிக்கும் செயலில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த தகவல்களை நாங்கள் முறையாக அளித்தும் கூட தேர்தல் ஆணையமும் சரி, தேர்தல்

நடத்தும் அலுவலரும் சரி நடவடிக்கை எடுக்கவில்லை. எங்களுடைய சட்ட ஆலோசனை குழு உறுப்பினர்கள் பல சந்தர்ப்பங்களில் தேர்தல் ஆணையரை நேரில் சந்தித்து மனு செய்தும் தேர்தல் ஆணையம் தட்டிக் கேட்காமல் வேடிக்கை பார்த்து கொண்டிருக்கிறது. ஒரு செயலற்ற ரோபோ பொம்மை போல இன்றைக்கு தேர்தல் ஆணையம் இருப்பது கண்டிக்கத்தக்கது.

ரோபோ பொம்மையின் ரிமோட் தி.மு.க. தலைவர்ஸ்டாலினிடம் உள்ளது. அவர் என்ன சொல்கிறாரோ அதைத் தான் அந்த ரோபோ பொம்மை கேட்கும். தேர்தல் ஆணையத்தின் மீது எங்களுக்கு நம்பிக்கை கிடையாது.

இவ்வாறு முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறினார்.