தற்போதைய செய்திகள்

ரூ.1.17 கோடி மதிப்பில் திட்டப்பணிகள் – அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ துவக்கி வைத்தார்

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு ஊராட்சி ஒன்றிய பகுதியில் ரூ.1.17 கோடி மதிப்பிலான திட்ட பணிகளை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ துவக்கி வைத்தார்.

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு ஊராட்சி ஒன்றிய பல்வேறு பகுதியில் சாலை அமைக்கும் பணிகள், அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி, கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்ட நியாய விலைக்கடை திறப்பு நிகழ்ச்சி, நியாய விலைக்கடை அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி ஆகியவை மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி, தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ கலந்து கொண்டு திருமலைக்குறிச்சி ஊராட்சி பெரியசாமிபுரத்தில் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.10.55 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட நியாய விலைக்கடை, காளாம்பட்டியில் ரூ.36.75 லட்சம் மதிப்பில் காளாம்பட்டி – நாச்சியார்பட்டி மேம்படுத்தப்பட்ட சாலை, ரூ.27 லட்சம் மதிப்பில் காளாம்பட்டி – நாச்சியார்புரம் வரை மேம்படுத்தப்பட்ட சாலை, ரூ.6 லட்சம் மதிப்பில் காளாம்பட்டி – ஆதிதிராவிடர் கிழக்கு காலனிக்கு மேம்படுத்தப்பட்ட சாலை உள்ளிட்ட பணிகளை திறந்து வைத்தார்.

மேலும் குமாரெட்யாபுரம் ஊராட்சி சங்கரலிங்கபுரத்தில் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.12 லட்சம் மதிப்பில் நியாய விலைக்கடைக்கு புதிய கட்டிடம் கட்டும் பணிகள், ரூ.9.47 லட்சம் மதிப்பில் ஆதிதிராவிடர் காலனி பகுதிக்கு சாலை அமைக்கும் பணிகள், ரூ.16 லட்சம் மதிப்பில் கழுகுமலை – நாலாட்டின்புத்தூர் விலக்கு முதல் சங்கரலிங்கபுரம் வரை சாலை அமைக்கும் பணிகள் ஆகிய பணிகளை அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்.

பின்னர் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ தெரிவித்ததாவது:-

உலகம் முழுவதும் மனித இனத்திற்கு பேரழிவாக பரவி வரும் கொரோனா வைரஸ் தாக்குதல் ஏற்பட்ட பிறகு இதுவரை சரியான மருந்துகள் கண்டுபிடிக்கப்படவில்லை என்ற நிலையிலே சமூக இடைவெளியை பின்பற்றி மக்கள் ஒன்றுகூடாமல் விழித்திருந்து தனிமையில் இருக்க வேண்டும் என்பது தான், உலக நாடுகளுக்கு உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தி இருக்கிறது. அதன் விளைவாகத்தான் தமிழகத்தில் சுய ஊரடங்கை கடைபிடித்து வழிமுறைகளை பின்பற்றி வருகிறோம். அந்த வகையிலேதான் தமிழகத்திலே மார்ச் 23 தொடங்கி இதுவரை சுய ஊரடங்கு நடைமுறையிலே இருக்கிறது.

இருந்தாலும் ஊரடங்கின் காரணமாக மக்கள் நீண்ட காலத்திற்கு வாழ்வாதாரம் பாதிக்கப்படக்கூடாது என்ற வகையிலே முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி நியாய விலைக்கடைகள் மூலம் இரண்டரை கோடிக்கும் மேற்பட்ட அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆயிரம் ரூபாய் நிவாரண தொகையும், நான்கு மாதமாக விலையில்லாமல் அத்தியாவசிய பொருட்களை வழங்கினார்.

மேலும் அமைப்பு சாரா தொழிலாளர்கள், சலவை தொழிலாளர்கள், நரிக்குறவர்கள், இசை கலைஞர்கள், கோவிலில் பணியாற்றுகின்ற அர்ச்சகர்கள் அதற்கு அடுத்தபடியாக மீனவர்கள், தீப்பெட்டி தொழிலாளர்கள், திருநங்கைகள் உட்பட அனைவருக்கும் சமுதாயத்தில் இருக்கின்ற அடித்தட்டு மக்கள் பாதிக்கக்கூடாது என்பதற்காக திரைப்படத் தொழிலாளர்கள், நலவாரியத்தில் உள்ளவர்கள், பத்திரிகையாளர்களுக்கு அரசு சார்பில் தேவையான நிவாரணம் வழங்கி அவர்களின் வாழ்வாதாரத்துக்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்திலே கொரோனா தொற்றினை தடுக்க சிறப்பாக செயல்பட்டு சரியான நடவடிக்கைகள் மேற்கொண்டதன் மூலமாகவும் மேலும் இந்தியாவிலே அதிகமான எண்ணிக்கையிலான பரிசோதனைகளை மேற்கொண்ட மாநிலமாக நமது தமிழகம் இருக்கிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை ஒரு லட்சத்து இருபதாயிரத்திற்கும் மேற்பட்ட பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது.

இதில் சுமார் 10500 பேர் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று சுமார் 80 சதவீதம் பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர். இன்னும் 600 பேர் மட்டுமே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நோயின் தாக்கம் நமது மாவட்டத்தில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. நேற்றைய தினம் கூட காணொலி காட்சி மூலம் தலைமை செயலர் நமது மாவட்ட ஆட்சியரோடு கலந்துரையாடும்போது தமிழகத்திலே தூத்துக்குடி மாவட்டத்தில் தான் இறப்பு சதவிதம் மிகவும் குறைவு என்று நமது மாவட்ட நிர்வாகத்திற்கு பாராட்டுதலை தெரிவித்துள்ளார்.

நமது மாவட்ட நிர்வாகம் கொரோனா நோய் தொற்றினை அதிக அளவு பரிசோதனைகள் மூலம் கண்டறிந்து சரியான முறையில் சிகிச்சை அளித்ததன் காரணமாகத்தான் இந்த நிலையை நாம் எட்ட முடிந்திருக்கிறது. இதற்கு நமது மாவட்ட மக்களும் முழு ஒத்துழைப்பு அளித்தார்கள்.

இந்த கொரோனா தொற்று முழுமையாக ஒழிக்கப்படும் வரை நம்மை நாம் பாதுகாத்து கொள்ள வேண்டும். முககவசம் கண்டிப்பாக அணிய வேண்டும், சமூக இடைவெளியை முறையாக பின்பற்ற வேண்டும். அத்தியாவசிய தேவைக்காக மட்டுமே வெளியே செல்ல வேண்டும். அரசு காட்டும் வழிமுறைகளை கடைபிடிப்பதன் மூலமாகத்தான் இந்த நோயை கட்டுப்படுத்தி நம்மை பாதுகாத்து கொள்ள முடியும்

அந்த வகையிலே நமது மாவட்டத்தில் கட்டுப்படுத்தப்பட்டு கடந்த ஒரு வாரமாக 100 என்ற அளவிலே நோய் தொற்று வெகுவாக குறைந்து வருகிறது. அதே நேரத்தில் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி கொரோனா நோய் தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கை இருந்தாலும் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மக்கள் பிரதிநிதிகள் தொடர்ந்து மக்கள் பணிகளிலே தடையின்றி பணியாற்ற வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். அதேபோன்று முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி மாவட்டங்கள் வாரியாக ஆய்வு கூட்டங்களை தொடர்ந்து நடத்தி வருகிறார்.

சென்னையில் நாள்தோறும் கொரோனா தொடர்பான ஆய்வு கூட்டங்களை நடத்தினாலும் திருச்சி, கோயம்புத்தூர், திருநெல்வேலி, மதுரை, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை போன்ற மாவட்டங்களில் ஆய்வு கூட்டங்களை நடத்தி உள்ளார்கள். மேலும் நமது மாவட்டத்திலும் ஆய்வு கூட்டம் மேற்கொள்ள வருகை தர உள்ளார். முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவுறுத்தலின்படி நமது மாவட்டத்தில் சாலை வசதி, குடிநீர் வசதி, பள்ளி கட்டிட வசதி, அங்கன்வாடி கட்டிடங்கள் போன்ற அத்தனை அடிப்படை வசதிகளுக்கான பணிகளும் தொடர்ந்து தொய்வின்றி நடைபெற்று வருகிறது.

இவ்வாறு அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ தெரிவித்தார்.