தற்போதைய செய்திகள்

அம்பத்தூரில் கொரோனா சிகிச்சைக்கு 180 படுக்கைகள் கொண்ட அறைகள் தயார் – வி.அலெக்சாண்டர் எம்.எல்.ஏ தகவல்

அம்பத்தூர்

அம்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க மாதனாங்குப்பம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரிகளில் சுமார் 180 படுக்கைகள் தயார் செய்யப்பட்டு வருவதாக வி.அலெக்சாண்டர் எம்.எல்.ஏ தெரிவித்தார்.

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக அம்பத்தூர் தொகுதிக்குட்பட்ட பட்டரவாக்கம், கொரட்டூர் பகுதிகளில் தூய்மை பணியாளர்களுக்கு மருத்துவமுகாம் மற்றும் கபசுரக் குடிநீர், மூலிகை தேநீர் ஆகியவை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் வி.அலெக்சாண்டர் எம்.எல்.ஏ., மண்டல கண்காணிப்பாளர் பாஸ்கரன் ஆகியோர் கலந்து கொண்டு தூய்மை பணியாளர்களுக்கு முககவசம், கிருமிநாசினி, கபசுரக்குடிநீர் ஆகியவற்றை வழங்கினர்.

கொரோனாவால் பாதிக்கப்படும் நபர்கள் தனிமைப்படுத்தப்பட்டு தங்க வைப்பதற்காக மாதனாங்குப்பம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் 150 படுக்கை வசதிகள் கொண்ட சிறப்பு முகாம் தயார் செய்யப்பட்டு வருகிறது. அதனை வி.அலெக்சாண்டர் எம்.எல்.ஏ நேரில் சென்று பார்வையிட்டார்.

பின்னர் வி.அலெக்சாண்டர் எம்.எல்.ஏ செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:-

அம்பத்தூர் சட்டமன்ற தொகுதியில் கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு கொரட்டூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியிலும் அம்பத்தூரில் உள்ள அரசு பாலிடெக்னிக் போன்ற பகுதிகளில் சிகிச்சை அளிப்பதற்கு மருத்துவ உபகரணங்களுடன் படுக்கைகள் தயார் செய்யப்பட்டு வருகிறது.

அந்த வகையில் மாதனாங்குப்பம் பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் 180 படுக்கைகள் மருத்துவ உபகரணங்களுடன் தயார் செய்யும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெறுகின்றன. நாளைக்குள் இந்த பணிகள் முடிவு பெற்று ஒருவேளை அதிக நபர்கள் பாதிக்கப்பட்டால் சிகிச்சை பெற தயார் நிலையில் வைக்கப்படும். மேலும் தங்க வைக்கும் நபர்களை கண்காணிப்பதற்கு சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டு வருகிறது. அம்பத்தூரில் பொதுமக்களுக்கு ஒரு லட்சம் முக கவசத்தை வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

இவ்வாறு வி.அலெக்சாண்டர் எம்.எல்.ஏ தெரிவித்தார்,

இந்த ஆய்வின் போது மண்டல அலுவலர் தமிழ்ச்செல்வன் செயற்பொறியாளர் சுந்தரேசன் அம்பத்தூர் பகுதி கழக செயலாளர் என்.அய்யனார், முகப்பேர் எஸ்.பாலன், டன்லப் வேலன், ஜான், சலீம், எல்.என்.சரவணன், எல்.ஜி.பிரகாஷ், பத்மநாபன் உட்பட பலர் உடனிருந்தனர்.