வேலூர்

தமிழக மாணவ சமுதாயத்தை ஸ்டாலின் ஏமாற்றி விட்டார்

மாவட்ட கழக செயலாளர் த.வேலழகன் குற்றச்சாட்டு

வேலூர்,

நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என பொய் வாக்குறுதி அளித்து தமிழக மாணவ சமுதாயத்தை முதலமைச்சர் ஸ்டாலின் ஏமாற்றி விட்டார் என்று வேலூர் புறநகர் மாவட்ட கழக செயலாளர் த.வேலழகன் குற்றம் சாட்டியுள்ளார்.

வேலூர் புறநகர் மாவட்டம் அணைக்கட்டு மேற்கு ஒன்றியம் அகரம் கூட்ரோடு பகுதியில் ஒன்றிய கழக செயலாளர் கே.ஆனந்தன் தலைமையில் உள்ளாட்சி தேர்தல் குறித்து நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

மாவட்ட கழக துணை செயலாளர் ஆர்.மூர்த்தி, மாவட்ட கழக பொருளாளர் ஜி.பி.மூர்த்தி, மாவட்ட சார்பு அணி செயலாளர்கள் ரமேஷ் குமார், பாபு, எ.டி.கண்ணன், குமார், அன்வர் பாஷா, சரவணன், ஹேமந்த்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய கழக அவைத்தலைவர் ரவி வரவேற்றார்.

கூட்டத்தில் வேலூர் புறநகர் மாவட்ட கழக செயலாளரும், ஆவின் தலைவருமான த.வேலழகன் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-

வருகின்ற உள்ளாட்சித் தேர்தலில் தலைமை அறிவிக்கும் வேட்பாளர்களை ஏற்றுக்கொண்டு அவர்களின் வெற்றிக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். தி.மு.க.வினர் தில்லுமுல்லு, அராஜக செயல்களில் ஈடுபடுவார்கள். ஆகவே கழகத்தினர் அவர்களை தீவிரமாக கண்காணிக்க வேண்டும்.

ஆட்சிக்கு வந்ததும் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என பொய்யான வாக்குறுதி அளித்து தமிழக மாணவ சமுதாயத்தை ஏமாற்றியவர் முதலமைச்சர் ஸ்டாலின். முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி 7.5 சதவீத இட ஒதுக்கீடு கொண்டு வந்து அரசு பள்ளி மாணவர்களின வாழ்க்கையில் ஒளி தீபம் ஏற்றியதோடு ஏழை, எளிய மாணவர்களின் டாக்டர் கனவை நனவாக்கினார்.

தி.மு.க. ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டு விட்டது. எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை, கற்பழிப்பு, கள்ளச்சாராயம், லாட்டரி சீட்டு விற்பனை, விலைவாசி உயர்வு, ரேஷன் அரிசி கடத்தல், ஆள் கடத்தல், கந்துவட்டி கொடுமை உள்ளிட்ட சமூக விரோத செயல்கள் பெருகி விட்டன.

பெட்ரோல், டீசல் விலை உயர்வை தி.மு.க. அரசு கட்டுப்படுத்தவில்லை. நகைக்கடன், மகளிர் சுயஉதவி குழுக்கள் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளவில்லை. குடும்பத்தலைவிக்கு மாதாமாதம் ரூ.1000, முதியோர்களுக்கு ரூ.1,500, எரிவாயு சிலிண்டருக்கு ரூ.100 மானியம் வழங்கப்படும் என தேர்தல் நேரத்தில் அறிவித்து இன்று வரை வழங்காமல் திமுக அரசு மக்களை ஏமாற்றி வருகிறது.

உள்ளாட்சித் தேர்தலில் அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட்டு வெற்றிக்கனியை தலைமையிடம் சமர்ப்பிக்க வேண்டும்.
கழகத்தின் 50-ம் ஆண்டு பொன்விழாவை மாவட்டம் முழுவதும் சிறப்பாக கொண்டாட வேண்டும். கழகத்தின் பொன்விழா ஆண்டை சிறப்பாக கொண்டாடுவதில் வேலூர் புறநகர் மாவட்டம் முதன்மை மாவட்டமாக விளங்க வேண்டும்.

இவ்வாறு மாவட்ட கழக செயலாளர் த.வேலழகன் பேசினார்.

கூட்டத்தில் ஒன்றிய அம்மா பேரவை செயலாளர் அன்பரசன், சச்சிதானந்தம், சீனிவாசன், நாகராஜ், தலைமை கழக பேச்சாளர் தர்மராஜ், வெங்கடேசன், சிவக்குமார், முனிரத்தினம், கிருஷ்ணமூர்த்தி,ர விக்குமார் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.