தற்போதைய செய்திகள்

கழக அரசின் ஒவ்வொரு நடவடிக்கையிலும் உள்நோக்கம் கற்பிப்பது ஸ்டாலின் வாடிக்கை – அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

மதுரை

கழக அரசின் ஒவ்வொரு நடவடிக்கையிலும் உள்நோக்கம் கற்பிப்பதை எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் வாடிக்கையாக கொண்டு செயல்பட்டு வருகிறார் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றம்சாட்டி உள்ளார்.

அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மதுரையில் செய்தியாளர்கள் கேள்விக்கு பதில் அளித்து கூறியதாவது:-

தேவையான நேரத்தில் தேவையான தளர்வுகளை முதலமைச்சர் அறிவித்து வருகிறார். உடற்பயிற்சி கூடம், ஓட்டுநர் பயிற்சி நிலையம், அதேபோல் ஊரக பகுதியில் கோயில்கள் திறக்கப்பட்டது போல் நகர் பகுதியில் 10 ஆயிரம் ரூபாய் வருமானம் கொண்ட கோயில்களை திறக்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். இ-பாஸ் எந்தவித சிரமமும் இல்லாத வகையில் எளிதாக கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அத்தியாவசிய தேவைக்கு விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இ-பாஸ் தடையின்றி உடனடியாக வழங்கப்பட்டு வருகிறது.
இ-பாஸ் நடைமுறையை எளிமை படுத்திய பின்னர் இ-பாஸ் கிடைக்கவில்லை என்ற புகார் வரவில்லை. இ-பாஸ் நடைமுறை மக்களின் நலனுக்கும் பாதுகாப்பிற்காக மட்டுமே தவிர எந்தவித உள்நோக்கமும் கிடையாது அனைத்து விபரமும் கையில் உள்ளது.

அரசின் ஒவ்வொரு நடவடிக்கையிலும் உள்நோக்கம் கற்பிப்பதை எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் வாடிக்கையாக கொண்டு செயல்பட்டு வருகிறார். மத்திய அரசு கொடுக்கும் தளர்வுகளை முதல்வர் கவனத்துடன் ஆய்வு செய்து கையாண்டு வருகிறார். ரயில் போக்குவரத்து, பொது போக்குவரத்து போன்றவை கால சூழ்நிலைக்கு ஏற்ப துவங்க நடவடிக்கை எடுக்கப்படும். ஏற்கனவே பொது போக்குவரத்து துவங்கியதால் பல்வேறு சவால்களை சந்திக்க நேரிட்டது.

5 மாத காலங்களில் நோய் தடுப்பு நடவடிக்கையை மேற்கொள்ள தத்தளித்து வந்த நிலையில் தமிழகத்தில் மட்டும் வேளாண் பணிகள் தடையின்றி நடக்கவும் விளை பொருட்களை சந்தைப்படுத்தவும் நடவடிக்கை எடுத்ததன் காரணமாக இன்று விலைவாசி கட்டுக்குள் உள்ளது.

50 ஆண்டுகளுக்கு முன்பே திமுகவையும், கருணாநிதியையும் தீய சக்தி என்று தமிழக மக்களுக்கு புரட்சித்தலைவர் அடையாளம் காட்டினார். கடந்த 50 ஆண்டுகளாகவே அதிமுக மக்களிடத்தில் இதைத்தான் கொண்டு சென்றிருக்கிறது. 50 ஆண்டு காலமாக சொல்லி வரும் கருத்தை இன்றைக்கு பிஜேபி தலைவர் நட்டாவும் சொல்லியிருக்கிறார். அவருக்கு யார் சொன்னார் என்பது தெரியாது. திமுகவை பற்றி விவரம் அறிந்தவர்கள் எல்லாம் திமுக தீயகட்சி என்று இதைப்பற்றித்தான் எண்ணம் கொண்டிருந்தனர்.

அதிமுக கூட்டணியில் தொடர்ந்து பயணிப்பதாகவே தேமுதிக தெரிவித்துள்ளது. விஜயகாந்த் கிங்காக இருக்க வேண்டும் என அவரது தொண்டர்கள் நிர்வாகிகள் விருப்பப்படுவது அவர்களின் உரிமை. தேர்தலை மையமாக வைத்து மக்களை சந்திப்பவர்கள் அல்ல அதிமுக. எப்போதும் மக்களோடு மக்களாக இருப்பதுதான் அதிமுக என்று கூறினார்.
இவ்வாறு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.