சிறப்பு செய்திகள்

வளமான தமிழ்நாட்டை உருவாக்க ‘இரட்டை இலை’க்கு வாக்களிப்பீர் – ஒருங்கிணைப்பாளர்கள் வேண்டுகோள்

சென்னை

கழக ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், கழக இணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டில், மாநகராட்சி மன்ற வார்டு உறுப்பினர், நகராட்சி மன்ற வார்டு உறுப்பினர், பேரூராட்சி மன்ற வார்டு உறுப்பினர் ஆகிய பதவிகளுக்கு 19.2.2022 அன்று நடைபெற இருக்கும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். கண்ட வெற்றி சின்னமும், புரட்சித்தலைவி அம்மா அவர்களால் போற்றி பாதுகாக்கப்பட்ட மக்கள் சின்னமுமான, `இரட்டை இலை’ சின்னத்திற்கு வாக்களித்து, உள்ளாட்சி நிர்வாகத்தை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்ல, வாக்காளப் பெருமக்களாகிய உங்கள் அனைவரையும் பணிவோடு வேண்டுகிறோம்.

கடந்த ஒன்பது மாதங்களாக நடைபெற்று வரும் தி.மு.க.வின் ஆட்சியை எடை போட்டு பார்த்து, தேர்தல் நாளன்று உங்களது பொன்னான வாக்குகளை பதிவு செய்யுங்கள். புரட்சித்தலைவி அம்மா அவர்களும், அவருடைய வழி வந்த கழகத்தின் ஆட்சியையும் எண்ணிப் பாருங்கள்.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் ஆட்சி என்றால் அது, தமிழ்நாட்டு மக்கள் ஒவ்வொருவரின் ஆட்சியாக, உண்மையான மக்களாட்சியாக, ஊருக்கு உழைப்பதில் உள்ளம் மகிழ்கின்ற மக்கள் தொண்டர்களின் ஆட்சியாக திகழ்ந்ததை வரலாறு சொல்லும்.

பொய்யான வாக்குறுதிகளை, மனம் போன போக்கில் மக்களிடம் கூறி, ஆட்சிக்கு வந்திருக்கும் தி.மு.க.வின் கடந்த ஒன்பது மாத கால ஆட்சியில், அந்த கட்சியினரின் வன்முறையும், அராஜகமும், அடாவடியும் எண்ணில் அடங்காதவை. நகர்ப்புற உள்ளாட்சி மன்றங்களிலும் தி.மு.க.வினரின் ஆட்சி, அதிகாரம் என்ற நிலை ஏற்பட்டால் குறுநில மன்னர்களை போலவும், கொடுங்கோல் தண்டல்காரர்களை போலவும் அந்த கட்சியினர் மக்களுக்கு தரப் போகும் தண்டனைகளை, அவர்களது கடந்த கால வரலாறு நம் கண் முன்னே நிறுத்துகிறது.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தினர் வெற்றி பெற்று நகர்ப்புற உள்ளாட்சி நிர்வாகங்களில் மேயர்களாகவும், நகரமன்ற தலைவர்களாகவும், பேரூராட்சி மன்ற தலைவர்களாகவும், மாமன்றங்களின் உறுப்பினர்களாகவும் பணியாற்றும் போது, எப்படி மக்களிடம் அன்பாகவும், பணிவாகவும், மக்களுக்கு தொண்டு செய்யும் ஊழியர்களாகவும் பணியாற்றினார்கள் என்பதையும் எண்ணிப் பாருங்கள்.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் வன்முறையை வெறுக்கின்ற, சகோதரத்துவத்தையும், சமத்துவத்தையும் விரும்புகின்ற எளிய மக்களின் இயக்கம் அல்லவா!

நீட் தேர்வு ரத்து, நகைக்கடன் தள்ளுபடி, கல்விக்கடன் ரத்து, பெண்களுக்கு மாதம் ரூ.1,000 உதவித்தொகை, சமையல் சிலிண்டருக்கு ரூ.100 மானியம், விவசாயக்கடன் தள்ளுபடி, பெட்ரோல் விலை குறைப்பு என்று, தேர்தல் நேரத்தில் ஊர், ஊராக சென்று வாக்குறுதி அளித்த தி.மு.க.வினர் இன்று, இன்னும் நான்கு ஆண்டுகள் இருக்கிறதே என்று மக்களை மீண்டும் ஏமாற்றுகின்றனர்.

கட்டுப்பாடுகள் இன்றி, வாய்ச் சவடால் செய்து, அராஜக ஆட்சி நடத்திவரும் தி.மு.க. ஆட்சிக்கு உரிய கடிவாளம், இந்த நகர்ப்புற உள்ளாட்சித்தேர்தலில் போடப்பட்டால் மட்டுமே, தி.மு.க.வை கட்டுப்படுத்தி தமிழ்நாட்டை அமைதிப் பூங்காவாய் காப்பாற்ற முடியும் என்பதை நினைவில் கொண்டு தேர்தல் நாளான்று முடிவெடுங்கள்.

சூறாவளியாக தேர்தல் பணிகளை மேற்கொண்டிருக்கும் கழக நிர்வாகிகளும், கழக உடன்பிறப்புகளும், தோழமை கட்சிகளை சேர்ந்த தொண்டர்களும், வாக்குப்பதிவு நடைபெறும் இடங்களில் வாக்குச்சாவடிக்கு வரும் பொதுமக்களிடம் பண்போடும், பாசத்தோடும் கழக வேட்பாளர்களுக்கு வாக்களிக்க கோர வேண்டும்

மேலும், நம் முகவர்கள் வாக்குப்பதிவை உன்னிப்பாக கண்காணிக்க வேண்டும். அதேபோல், வாக்குப்பதிவு நாளன்று வாக்காளப் பெருமக்கள் அனைவரும் அன்று காலை 7 மணி முதலே வாக்குச்சாவடிகளுக்கு சென்று வாக்களிக்குமாறு செய்திடல் வேண்டும். வாக்குப்பதிவு நிறைவு பெற்று அதனை சீலிட்டு வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு சென்று சேர்க்கும் வரையிலும் மிகவும் கவனமாகவும், விழிப்புடனும் பணியாற்றிட வேண்டும்.

எங்கள் உயிரினும் மேலான வாக்காளப் பெருமக்களே,

19.2.2022 அன்று நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கான தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு, கழகத்தின் வெற்றி சின்னமாம் “இரட்டை இலை’’ சின்னத்தில் உங்களது பொன்னான வாக்குகளை அளித்து, கழக வேட்பாளர்கள் மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்கள் அனைவரையும் மகத்தான வெற்றி பெற செய்து, புதிய வரலாற்று சாதனை படைத்திட வேண்டும் என்று, வாக்காளப் பெருமக்களாகிய உங்கள் அனைவரையும் இருகரம் கூப்பி மிகுந்த பணிவோடு கேட்டுக் கொள்கிறோம்.

மறந்து விடாதீர்கள், கடிவாளம் உங்கள் கையில்,
வாக்களிப்பீர் `இரட்டை இலை’ சின்னத்திற்கே!

இவ்வாறு கழக ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், கழக இணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.