சிறப்பு செய்திகள்

வாக்குப்பதிவு சதவீதம் குறைந்ததற்கு சட்டம்- ஒழுங்கு சீர்குலைவே காரணம் – எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி பேட்டி

சேலம்

வாக்குப்பதிவு சதவீதம் குறைந்ததற்கு சட்டம்- ஒழுங்கு சீர்குலைவு தான் காரணம் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி கூறினார்.

கழக இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி ஓமலூரில் உள்ள சேலம் புறநகர் மாவட்ட கழக அலுவலகத்தில் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின் போது சென்னை மாநகரத்தில் பல இடங்களில் தி.மு.க.வை சேர்ந்த வேட்பாளர்களுக்கு ஆதரவாக ரவுடிகளையும், குண்டர்களையும் வைத்து கள்ள ஓட்டுக்களை பதிவு செய்துள்ளார்கள்.

உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை மீறி இப்படிப்பட்ட செயல்களில் தி.மு.க. ஈடுபட்டுள்ளது. மக்களை சந்திக்க திராணியற்ற கட்சி தி.மு.க.. மக்கள் செல்வாக்கை தி.மு/க. இழந்து உள்ளது என்பது இதன்மூலம் நிரூபணமாகிறது.

கேள்வி:- தேர்தல் ஆணையத்திடம் ஆதாரங்கள் கொடுக்கப்பட்டுள்ளதா?

பதில்:- இவையெல்லாம் புகாராக கொடுத்துள்ளோம். தேர்தல் ஆணையம் தான் ஆளுகின்ற தி.மு.க. கட்சிக்கு கைப்பாவையாக செயல்படுகிறது. ஸ்காட்லாந்து காவல்துறைக்கு இணையாக போற்றப்பட்ட புகழ்வாய்ந்த தமிழ்நாடு காவல்துறை இன்றைக்கு கைகட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது. தி.மு.க.வினர் மிரட்டினாலும் காவல்துறை அதிகாரிகளால் எதுவும் செய்ய முடியவில்லை.

எடப்பாடி ஆலுச்சம்பாளையம் பகுதியில் தி.மு.க.வினர் சேலம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரை சிறைபிடித்தனர். அப்படி என்றால் சட்டம்- ஒழுங்கு எப்படி உள்ளது என்பதை பார்த்துக் கொள்ள வேண்டும். காவல்துறைக்கே பாதுகாப்பாக ராணுவத்தை அழைக்க வேண்டும் என்ற நிலை தமிழ்நாட்டில் உள்ளது.

காவல்துறை செயலிழருந்து உள்ளது. சட்டம்-ஒழுங்கு அடியோடு சீர்குலைந்துள்ளது. இன்றைக்கு தி.மு.க. அரசில் மக்கள் நிம்மதியாக வாழ முடியாது. எந்த ஒரு தேர்தல் வந்தாலும் மக்கள் தங்களுடைய ஜனநாயக பணியை ஆற்ற முடியாது. ஜனநாயக முறைப்படி வாக்களிக்கவும் முடியாது.

சென்னை மாநகராட்சியில் வாக்குப்பதிவு சதவீதம் குறைந்ததற்கு காரணமே சட்டம்-ஒழுங்கு சீர்கேடு தான். சென்னை மாநகர மக்கள் வாக்களிக்க முடியாததால் குறைந்த சதவீதத்தில்தான் வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது.

சென்னை மாநகராட்சியிலும், கோவை மாநகராட்சியிலும் சர்வ சாதாரணமாக வீதியில் ரவுடிகள் நடமாடிய காரணத்தினாலே அங்கே உள்ள மக்கள் தங்களின் உயிருக்கு பாதுகாப்பு இல்லை என்று அச்சப்பட்டுதான், வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களிக்க முடியாத சூழ்நிலை இருந்த காரணத்தினால்தான் வாக்குப்பதிவு குறைந்துள்ளது.

2021 சட்டமன்ற பொது தேர்தலின் போது கழக ஆட்சி இருந்தபோது சட்டம்-ஒழுங்கு சீராக இருந்தது. அந்த காலகட்டத்தில் பொதுமக்கள் அச்சம் இல்லாமல் யாருக்கு வாக்களிக்க விருப்பமோ? ஜனநாயக முறைப்படி வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களித்தார்கள்.

அதனால் வாக்குப்பதிவு சதவீதம் அதிகரித்திருந்தது, இன்றைய தினம் ரவுடிகள் குண்டர்கள் மேல் உள்ள அச்சத்தின் காரணமாக பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியேறி வாக்களிக்க முடியாத காரணத்தினால் சென்னை மாநகராட்சியில் வாக்கு சதவீதம் குறைந்துள்ளது.

கேள்வி:- வாக்கு எண்ணும் போதும் இதே மாதிரி நடைபெற்றால் என்ன செய்வீர்கள்?
பதில்:- ஏற்கனவே உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது, உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி ஒவ்வொரு வார்டும் எண்ணி முடித்த பிறகு அதை அறிவிக்க வேண்டும். அதன் பிறகுதான் அடுத்த வார்டு என்ன வேண்டும். சி.சி.டி.வி. கேமராவில் அந்த ரிசல்ட்டை பதிவு செய்ய வேண்டும் என்று சொல்லி உள்ளனர். அப்படி பதிவு செய்தவுடன் முறையாக சீல் வைக்க வேண்டும். இதையெல்லாம் உயர்நீதிமன்றம் தீர்ப்பாக கூறியுள்ளது.

உயர்நீதிமன்ற தீர்ப்பில் வாக்கு எண்ணுகின்ற மையத்தில் எந்த அதிகாரிகள் தவறு செய்கிறார்களோ அந்த அதிகாரிகளை சுட்டிக் காட்டினால் அந்த அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. ஆகவே தேர்தல் எண்ணும் மையத்தில் பணி புரிகின்ற அலுவலர்கள் முறையாக தங்கள் பணியை செய்ய வேண்டும்.

ஜனநாயக முறைப்படி தேர்தல் வாக்கு எண்ணிக்கை பணியை செயல்படுத்த வேண்டும். எந்த கட்சியை சேர்ந்தவராக இருந்தாலும் யாருக்கு வாக்கு அதிகமாக இருக்கிறதோ அறிவிக்க வேண்டும். அதை காப்பாற்ற வேண்டும் என்று நம்புகிறோம். அதுதான் ஜனநாயகம்.

அதேபோல் காவல்துறை அதிகாரிகள் என்ற எச்சரிக்கையோடு இருந்து உயர் நீதிமன்ற தீர்ப்பின்படி முழுமையாக பாதுகாப்பு அளிக்க வேண்டும். இன்றைக்கு நடந்த முடிந்த தேர்தலை பார்க்கிறபோது தேர்தல் ஆணையம் முழுமையாக செயல்பட்டது என்றால் இல்லை என்று தான் மக்கள் சொல்லிக் கொண்டிருக்கின்றனர்.

மக்கள் வாக்களிக்க தயாராக தான் இருந்தார்கள். தேர்தல் ஆணையம் இந்த தேர்தலை முறையாக நடத்தவில்லை. ஜனநாயக முறைப்படி தேர்தல் நடத்தப்படவில்லை, மக்கள் அச்சப்படாமல் வாக்களிக்கக் கூடிய சூழ்நிலையை மாநில தேர்தல் ஆணையம் நடத்தவில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். மக்கள் அச்சப்படாமல் வாக்களிக்க கூடிய சூழ்நிலையை காவல்துறை சரியாக செயல்படுத்தவில்லை.

இவ்வாறு கழக இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி கூறினார்.