தற்போதைய செய்திகள்

ஊழலை பற்றி பேசுவதற்கு உதயநிதிக்கு தகுதி கிடையாது – எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி பேட்டி

கோவை

ஊழலை பற்றி பேசுவதற்கு தயநிதிக்கு தகுதி கிடையாது என்று சட்டமன்ற எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி கூறினார்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க.வினர் கோவை மாவட்டம் முழுவதும் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டனர்.
இதையடுத்து வாக்கு எண்ணிக்கை நேர்மையான முறையில் நடைபெற வேண்டும் என்பதை வலியுறுத்தி கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் மற்றும் கோவைக்கு தேர்தல் சிறப்பு பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ள நாகராஜன் ஆகியோரிடம் கோவை புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி கொறடாவுமான எஸ்.பி.வேலுமணி தலைமையில் கழக சட்டமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை மனு வழங்கினர்.

இதன் பின்னர் சட்டமன்ற எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கோவை மாவட்டத்தில் தி.மு.க.வினர் கரூர், சென்னை குண்டர்கள் வைத்து கலவரத்தையும் பல்வேறு முறைகேடுகளையும் நிகழ்த்தி கொண்டிருக்கின்றனர். இதையடுத்து தி.மு.க.வினர் மீது நடவடிக்கை எடுக்க கோரியும், தேர்தல் முறையாகவும் அமைதியாகவும் நடக்க துணை ராணுவத்தை நியமிக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இரு தினங்களுக்கு முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டோம். ஆனால் சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்காமல் கழக சட்டமன்ற உறுப்பினர்கள் 9 பேர் உள்பட 17பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளார்.

ஒவ்வொரு வார்டிலும் கரூர், சென்னை ரவுடிகள் குவிந்தனர். பண விநியோகத்தை தொடர்ந்து செய்தனர்.
கோவை மாவட்டத்தில் மோசமான சூழ்நிலையை உருவக்கினர். அதிகாரிகளை தி.மு.க.வினர் மிரட்டுகின்றனர். தி.மு.க. தோற்றாலும் வெற்றி பெற்றதாக அறிவிக்க வேண்டும் என நிர்பந்திக்கப்படுகின்றனர்.

இதற்காக முதலமைச்சர் அலுவலகத்தில் இருந்தே பேசுகின்றனர். மோசமான ஜனநாயக படுகொலையை செய்ய ஆயத்தமாகி வருகின்றனர். நீதிமன்ற அறிவுறுத்தல்களை அதிகாரிகள் கடைபிடிக்கவில்லை. இதை தடுக்க வேண்டும் என்பதற்காக மனு அளிக்கப்பட்டது.

முதல்வரின் மகன் உதயநிதி கடைசி நாள் பிரச்சாரத்தில் வெளிப்படையாகவே மிரட்டல் விடுத்தார். ஊழலை பற்றி பேசும் தகுதி உதயநிதிக்கு கிடையாது. உதயநிதி குடும்பமே ஊழலில் இருந்து வந்தது.

தாத்தாவில் இருந்து இப்போது வரை அனைவரும் ஊழலில் திளைத்தவர்கள்.சாவுமணி அடிப்பேன் என்ற வார்த்தையை உதயநிதி சொல்லி இருக்கிறார். முதலமைச்சர் மகன் இப்படி ஒரு மோசமான வார்த்தையை பேசி இருக்கிறார். இதை எடப்பாடியார் கண்டித்தார்.

இந்த விவகாரத்தில் முதலமைச்சர் தனது மகனை கண்டிக்கவில்லை. முதலமைச்சருக்கும், உதயநிதிக்கும், இங்கு இருக்கும் அமைச்சருக்கும், கலவரம் செய்தாவது தி.மு.க.வை வெற்றிபெற வைக்க வேண்டும் என பார்க்கின்றனர். நீதிமன்றம் இதை பார்த்து கொண்டு இருக்கின்றது. நாளை வாக்கு எண்ணிக்கை சரியாக நடக்கவில்லை என்றால் நீதிமன்றத்தை அணுகுவோம்.

எங்கள் போராட்டம் அரசியல் நாடகமா? கரூர், சென்னை குண்டர்கள், ரவுடிகள் கோவையில் இருந்தார்களா? என்பது மக்களுக்கு தெரியும். கோவை மாவட்டத்தில் நடைபெற்று வரும் சூழ்நிலைகள் குறித்து மத்திய உள்துறை அமைச்சகத்துக்கும், உள்துறை செயலாளருக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் நல்ல தீர்ப்பு கொடுப்பார்கள். உறுதியாக கோவை மாநகராட்சி மேயர் பதவியை கழகம் கைப்பற்றும்.

இவ்வாறு சட்டமன்ற எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி கூறினார்.