கோவை மாவட்டத்துக்கு கூடுதல் பாதுகாப்பு தேவை – சிறப்பு தேர்தல் அதிகாரியிடம் கழக எம்.எல்.ஏ.க்கள் மனு

கோவை,
வாக்கு எண்ணிக்கையின் போது கோவை மாவட்டத்துக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும் என்று சிறப்பு தேர்தல் அதிகாரியிடம் எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி தலைமையில் கழக சட்டமன்ற உறுப்பினர்கள் மனு அளித்தனர்.
கோவை மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணும் மையங்களில் கூடுதல் பாதுகாப்பு அளிக்கக் கோரியும், வெற்றி பெற்றவர்களின் விவரங்களை உடனே அறிவிக்கக் கோரியும் கோவை புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளரும்,
முன்னாள் அமைச்சரும், எதிர்க்கட்சி கொறடாவுமான
எஸ்பி.வேலுமணி தலைமையில் கழக சட்டமன்ற உறுப்பினர்கள் கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும்
சிறப்பு தேர்தல் பார்வையாளர் நாகராஜ் ஆகியோரிடம் கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது:-
கோவை மாவட்டம் முழுவதும் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின்போது ஆளும் தி.மு.க.வினர் தேர்தல் நடத்தை விதிகளை மதிக்காமல் பணம் மற்றும் பரிசு பொருட்களை வழங்கினர். இது சம்பந்தமாக எதிர்க்கட்சியினர் மற்றும் பொதுமக்கள் புகைப்பட ஆதாரங்களுடன் புகார் அளித்தும் மாவட்டத்தில் தேர்தல் நடத்தும் அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் ஒருதலைபட்சமாக தி.மு.க.வுக்கு ஆதரவாக செயல்பட்டனர்.
மேலும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை மனுக்கள் அளித்தனர். குறிப்பாக கோவை மாவட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் அனைத்து கழக சட்டமன்ற உறுப்பினர்கள் தர்ணா போராட்டம் நடத்தினர். அதனைத்தொடர்ந்து அரசு சார்பில் கோவை மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு சிறப்பு பார்வையாளராக மூத்த ஐ.ஏ.எஸ் .அதிகாரி நாகராஜை நியமித்து உத்தரவிட்டது.
இந்நிலையில் வாக்கு எண்ணிக்கை மையங்களில் அதிகாரிகள் தி.மு.க.வுக்கு சாதகமாக நடந்து கொள்ள வேண்டும் என வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. உயர்நீதிமன்ற உத்தரவின்படி வேட்புமனு தாக்கல் தொடங்கியதில் இருந்து முடியும் வரை அனைத்தையும் வீடியோவில் பதிவு செய்து தேர்தல் ஆணையம் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும்.
தேர்தல் நடத்தை விதிமுறைகளின்படி முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட வேண்டும். பின்னர் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் உள்ள வாக்குகளை எண்ண வேண்டும். ஒரு வார்டில் வாக்கு எண்ணிக்கை முடிந்தவுடன் உடனடியாக தேர்தல் முடிவுகள் எவ்வித காலதாமதமின்றி அறிவிக்கப்பட வேண்டும்.
தி.மு.க.வினர் தேர்தல் பிரச்சாரத்தின்போது வாக்குப்பதிவு நாளன்று தேர்தல் விதிமுறைகளை மீறி கோவை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்களை திமுகவின் வெளி மாவட்ட குண்டர்கள் காவல்துறை உதவியுடன் எவ்வித அச்சமுமின்றி வழங்கி ஜனநாயக படுகொலை செய்துள்ளனர்.
இதற்கான வீடியோ ஆதாரங்கள், புகைப்படங்கள் செய்தித்தாள்களிலும், சமூக வலைத்தளங்களில் வெளிவந்துள்ளது. கோவை மாவட்டத்தில் வாக்கு எண்ணிக்கை மையங்களில் கூடுதல் பாதுகாப்பை ஏற்படுத்த வேண்டும்.
வாக்கு எண்ணிக்கை மையங்களில் தேவையற்ற சட்ட சிக்கல்களை உருவாக்கி அதற்கான சூழ்நிலைகளை ஏற்படுத்தி தி.மு.க.வினர் தங்கள் வேட்பாளர்களை வெற்றிபெற வைக்க அதிகாரத்தையும், பண பலத்தையும் பயன்படுத்த தயாராக உள்ளனர் என்பதை இதுநாள் வரை நடைபெற்ற நிகழ்வுகள் உறுதிபடுத்துகிறது.
மேலும் வாக்கு எண்ணிக்கை நாளன்று மாநகராட்சி மாமன்ற உறுப்பினர், நகராட்சி மன்ற உறுப்பினர், பேரூராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான வாக்குகள் எண்ணிக்கையின்போது ஒவ்வொரு வார்டு வாரியாக வாக்கு எண்ணிக்கை முடிந்தவுடன் வெற்றி பெற்றவர்களின் விவரங்கள் எவ்வித காலதாமதமின்றி உடனடியாக அறிவித்து வெற்றி சான்றிதழையும் உடனே வழங்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.