தமிழகம் தற்போதைய செய்திகள்

பிரபல சினிமா பைனான்சியர் அன்புசெழியன் மகள் திருமணம் – கழக ஒருங்கிணைப்பாளர்கள் பங்கேற்பு

சென்னை,

பிரபல சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் மகள் திருமணம் சென்னை திருவான்மியூரில் இன்று நடைபெறுகிறது. இதில் கழக ஒருங்கிணைப்பாளர்கள் பங்கேற்று மணமக்களை வாழ்த்துகின்றனர்.

பிரபல சினிமா தயாரிப்பாளரும், விநியோகஸ்தரும் பைனான்சியரும், கோபுரம் சினிமாஸ் நிறுவனருமான ஜி.என்.அன்புச்செழியன் மகள் சுஷ்மிதாவுக்கும், குடிமைப்பணி தேர்வுகளுக்கான பயிற்சி நிறுவனங்களில் முன்னிலை வகிக்கும் சன் ஐ.ஏ.எஸ். அகாடமியின் நிறுவனர்களில் ஒருவரான முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி ராஜேந்திரனின் மகன் சரணுக்கும் திருமணம் செய்ய பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டுள்ளது.

இவர்களது திருமணம் சென்னை திருவான்மியூரில் உள்ள ஸ்ரீராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டரில் இன்று (21-ந்தேதி) காலை நடைபெறுகிறது. மாலை வரவேற்பும் நடக்கிறது.

இந்த திருமண நிகழ்ச்சியில் கழக ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், கழக இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்துகின்றனர்.

இதேபோல் திரையுலக பிரபலங்கள், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், அரசு உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்துகின்றனர்.