தற்போதைய செய்திகள்

36.61 லட்சம் விலையில்லா முகக்கவசம் வழங்கும் பணி – அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி துவக்கி வைத்தார்

விருதுநகர்

விருதுநகர் மாவட்டத்தில் 5.84 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு, 36.61 லட்சம் விலையில்லா முகக்கவசங்கள் வழங்கும் பணியை பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி துவக்கி வைத்தார்.

விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டத்தில் உள்ள கூட்டுறவுப் பண்டக சாலை கடையில் நேற்று கூட்டுறவுத்துறை மூலம் முதலமைச்சர் உத்தரவிற்கிணங்க, நியாயவிலைக் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா முகக்கவசம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட ஆட்சித்தலைவர் இரா.கண்ணன் தலைமை வகித்தார். திருவில்லிப்புத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மு.சந்திரபிரபா முன்னிலை வகித்தார்.

இதில் பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா முகக்கவசங்களை வழங்கி தெரிவித்ததாவது:-

முதலமைச்சர் கொரோனா வைரஸ் தாக்குதலிலிருந்து பொதுமக்களை பாதுகாத்திட எண்ணற்ற திட்டங்களை அறிவித்தவுடன் இந்த நோய்த்தாக்குதலை பேரிடர் காலமாக அறிவித்து அதற்கேற்ப திட்டங்களை செயல்படுத்தி பொது சுகாதாரத்துறையுடன் பல்வேறு துறைகள் ஒருங்கிணைந்து சிறப்பாக பணியாற்றி தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்குதல் கட்டுக்குள் வைத்த முதல்வராவார். அவரது செயல்பாட்டை பாராட்டும் வண்ணம் மத்திய அரசே கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை எடுத்ததில் தமிழகம் முதன்மை மாநிலம் என பாராட்டைப் பெற்றதாகும்.

அந்த அளவிற்கு முதலமைச்சர் இந்த கொடிய வைரஸ் தாக்குதலிலிருந்து மனித உயிரிழப்பு ஏற்படக்கூடாது என்பதற்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தி வந்த நிலையில் பொதுமக்கள் பல்வேறு இடங்களுக்கு சென்று வரும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு வீட்டிலிருந்து வெளியில் செல்லும் ஒவ்வொருவரும் கட்டாயம் முகக்கவசம் அணிந்து செல்ல வேண்டும். அப்பொழுதுதான் பாதுகாப்பான பயணமாக இருக்கும் என எண்ணி ஒவ்வொரு குடும்ப அட்டைதாரருக்கும் விலையில்லா முகக்கவசம் வழங்க உத்தரவிட்டு அனைத்து பகுதிகளிலும் வழங்கப்படுகின்றன.

அதனடிப்படையில், விருதுநகர் மாவட்டத்தில் மொத்தம் 5,84,301 குடும்ப அட்டைகள் உள்ளன. இதன்மூலம் நகர்ப்பகுதியில் 14,00,632 பயனாளிகளுக்கும், கிராமப்புறங்களில் 22,60,750 பயனாளிகளுக்கும் என ஆக மொத்தம் 18,30,891 பயனாளிகளுக்கு தலா 2 விலையில்லா முகக்கவசங்கள் வீதம் 36,61,382 விலையில்லா முகக்கவசங்கள் வழங்கப்படவுள்ளது. அதனடிப்படையில், இன்று சிவகாசி வட்டத்தில் உள்ள கூட்டுறவுப் பண்டக சாலை கடை எண்-3 ல் நடைபெற்ற குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா முகக்கவசம் வழங்கும் நிகழ்ச்சியில் முதற்கட்டமாக 11 குடும்ப உறுப்பினர்களுக்கு விலையில்லா முகக்கவசங்கள் வழங்கியதுடன் மற்ற பகுதிகளிலும் நியாயவிலைக் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு விலையில்லா முகக்கவசங்கள் வழங்கப்படும்.

பொதுவாக, நோய்த்தாக்குதல் உள்ள இக்காலக்கட்டத்தில் ஒவ்வொருவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும். அதேபோல் அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு உறுதுணையாக இருந்து தேவையற்ற பயணங்களை பொதுமக்கள் தவிர்த்து பாதுகாப்பாக இருந்து ஆரோக்கியமுடன் இருந்திட வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் இரா.மங்களராமசுப்பிரமணியன், கூட்டுறவுச்சங்க இணைப்பதிவாளர் திலீப்குமார், சார் ஆட்சியர் (சிவகாசி) ச.தினேஷ்குமார், மாவட்ட வழங்கல் அலுவலர் கல்யாணசுந்தரம், சிவகாசி வட்டாட்சியர் வெங்கடேஷ், சிவகாசி கூட்டுறவு பண்டகசாலைத் தலைவர் அசன்பக்ருதீன் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.