தற்போதைய செய்திகள்

புதுவையில் உள்ளாட்சி தேர்தலை நடத்த அரசு முன் வர வேண்டும் – கிழக்கு மாநில செயலாளர் அன்பழகன் கோரிக்கை

புதுச்சேரி,

புதுவையில் உள்ளாட்சி தேர்தலை நடத்த அரசு முன் வர வேண்டும் என்று கிழக்கு மாநில கழக செயலாளர் அன்பழகன் கோரிக்கை விடுத்துள்ளார்.

புதுச்சேரி கிழக்கு மாநில கழக செயலாளர் அன்பழகன் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார் அப்போது அவர் கூறியதாவது:-

புதுச்சேரி மாநிலத்தில் நடைபெற இருந்த உள்ளாட்சி தேர்தலை தடுத்து நிறுத்திய தி.மு.க.வின் சுயரூபம் தற்போது வெளிவருகிறது. ரத்து செய்ய முடியாத நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என பொய் நாடகம் நடத்தி வரும் தமிழக தி.மு.க. அரசு பிற்படுத்தப்பட்டவருக்கான இல்லாத இட ஒதுக்கீட்டை வழங்கிவிட்டு தான் புதுச்சேரியில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என சதி செய்கிறது.

மகாராட்டிர மாநில உள்ளாட்சி இட ஒதுக்கீடு சம்பந்தப்பட்ட வழக்கில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கான கணக்கெடுப்பை முறையாக நடத்தாமல் எப்படி அவர்களுக்கு இட ஒதுக்கீடு அளித்தீர்கள் என்றும், தேவைப்பட்டால் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடே அளிக்காமல் தேர்தலை நடத்திக் கொள்வது மாநில அரசின் விருப்பத்தை பொறுத்தது என்றும் உச்ச நீதி மன்றம் கருத்து தெரிவித்தது. உண்மை நிலை இவ்வாறு இருக்க, புதுச்சேரி மாநில தி.மு.க. புதுச்சேரி மாநிலத்தில் உள்ளாட்சி தேர்தலையே தடுத்து நிறுத்துவதற்கு மகாராட்டிர மாநில அரசை காரணம் காட்டி மக்களை திசை திருப்புகிறது.

புதுச்சேரியில் நீண்ட காலத்திற்கு பிறகு 2006-ல் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. கடந்த 2016 முதல் தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி 5 ஆண்டு கால ஆட்சியில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படவில்லை. புதுச்சேரி மாநிலத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்துவதில் தி.மு.க.வுக்கு எந்த ஒரு விருப்பமும் இல்லை. எதையாவது ஒரு நொண்டி காரணத்தை கையில் எடுத்துக் கொண்டு நீதிமன்றத்தின் மூலம் தேர்தலை தடுத்து நிறுத்துவது தான் தி.மு.க.வின் உண்மை நிலையாகும்.

2016-ம் ஆண்டு வார்டு மறுசீரமைப்பு பணி நடைபெற்று அது சம்பந்தமான அரசாணை வெளியிடப்பட்டது. பல்வேறு குளறுபடிகளுடன் தொகுதி மறுசீரமைப்பு தவறாக செய்யப்பட்டது. வார்டு சீரமைப்பில் மக்கள் தொகையை சரியாக கணக்கெடுக்காமல் பல நகராட்சிகளில் வார்டு எண்ணிக்கை குறைத்தும், சில நகராட்சிகளில் வார்டு எண்ணிக்கை அதிகப்படுத்தியும், சில நகராட்சிகளில் பூகோள ரீதியில் சரியாக மறு சீரமைப்பு செய்யாமல், இரண்டு, மூன்று சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பல பகுதிகள் ஒரே வார்டாக அறிவிக்கப்பட்டது.

2016-ம் ஆண்டு நடைபெற்ற வார்டு மறுசீரமைப்பு அட்டவணையை ரத்து செய்து, தேர்தலை அறிவித்தாலே பல்வேறு குழப்பங்கள் தீரும். எனவே, 2001-ம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையில் அப்பொழுது இருந்த நகராட்சிகள், நகராட்சிகளின் வார்டு எண்ணிக்கைகள், கொம்யூன் பஞ்சாயத்துக்கள், கொம்யூன் பஞ்சாயத்து வார்டு எண்ணிக்கைகளில் மாற்றம் செய்யாமல் சுழற்சி முறையில் உரிய இட ஒதுக்கீடு அளித்து உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும்.

புதுச்சேரி மாநிலத்தில் சாதி ரீதியான கணக்கெடுப்பு நடத்தப்படாத சூழ்நிலையில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு எப்படி உரிய இடஒதுக்கீடு உடனடியாக வழங்க முடியும்? தி.மு.க. ஆட்சி செய்யும் தமிழகத்தில் கூட தற்போது நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படவில்லை. பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீடு விஷயத்தில் உள்ளாட்சி தேர்தலே நடத்தக்கூடாது என்ற தி.மு.க.வின் நீதிமன்ற விவாதத்திற்கு மாநில தேர்தல் ஆணையம் சரியான தகவலை தெரிவிக்காமல் பொறுப்பற்ற முறையில் நடந்ததால் நடைபெற இருந்த தேர்தல் நின்றது. இப்போது மாநில தேர்தல் ஆணையமும், தி.மு.க.வும் தேர்தலை நிறுத்திவிட்டு மாறி மாறி ஒருவர் மீது ஒருவர் குற்றம் சொல்லிக் கொண்டு இருக்கின்றனர்.

இந்திய அளவில் புதுச்சேரியில் தான் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படவில்லை என்ற நம் நாட்டு பிரதமருடைய ஆதங்கத்தை தீர்க்கும் வகையில், அரசு உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்துவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், உள்ளாட்சி தேர்தல் விஷயத்தில் நமது மாநிலத்திற்கு ஏற்பட்டுள்ள களங்கத்தை துடைத்தெறிய அரசு முன்வர வேண்டும். உள்ளாட்சி தேர்தலை நடத்த விடாமல் தடுத்து நிறுத்தியுள்ள தி.மு.க.வுக்கு உள்ளாட்சி தேர்தலுக்கான அறிவிப்பை வெளியிட்டு அரசு தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.