காவல் நிலையத்திற்குள் புகுந்து கழக வேட்பாளர் மீது தாக்குதல் – திண்டிவனத்தில் தி.மு.க.வினர் அராஜகம்

விழுப்புரம்
திண்டிவனத்தில் காவல் நிலையத்திற்குள் புகுந்து கழக வேட்பாளரை தி.மு.க.வினர் தாக்கி அராஜகத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று முன்தினம் நடைபெற்றது. விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் நகராட்சிக்கு உட்பட 13-வது வார்டில் வால்டர் ஸ்கடர்ஸ் மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடி அருகே மதியம் தி.மு.க. வேட்பாளர் வழக்கறிஞர் எம்.டி.பாபு, கழக வேட்பாளர் சுதா சரவணன் ஆகிய இருவரும் வாக்கு சேகரித்துள்ளனர்.
இதனால் இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது தி.மு.க. வேட்பாளர் பாபு, கழக பெண் வேட்பாளர் சுதாவை எட்டி உதைத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சுதாவின் மகன் அசோக் பதிலுக்கு தாக்கியுள்ளார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் தலையிட்டு இரு தரப்பினரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக கழக வேட்பாளர் சுதா தனது கணவர் சரவணன், மகன் அசோக் ஆகியோருடன் ரோசனை காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க சென்றுள்ளார். இதனை அறிந்த தி.மு.க. வேட்பாளர் பாபு மற்றும் அவரது அண்ணன் சுரேஷ் தலைமையில் 50-க்கும் மேற்பட்டோர் காவல் நிலையத்திற்குள் புகுந்து சுதா மற்றும் அவரது கணவர், மகன் ஆகியோரை கடுமையாக தாக்கியுள்ளனர். இதனை தடுக்க முற்பட்ட காவலர்களையும் அவர்கள் மிரட்டியுள்ளனர்.
இது குறித்து தகவலறிந்த திண்டிவனம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அர்ஜூனன் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட கழக நிர்வாகிகள் காவல் நிலையத்தின் முன்பு திரண்டதால் பதற்றமான சூழ்நிலை நிலவியது.
உடனடியாக டி.ஐ.ஜி. பாண்டியன், எஸ்.பி. ஸ்ரீநாதா ஆகியோர் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுக்காப்புக்காக ரோசனை காவல்நிலையத்தில் குவிக்கப்பட்டனர். இதனை தொடர்ந்து படுகாயமடைந்த கழக வேட்பாளர் சுதா சரவணனை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் பற்றி கேள்விப்பட்ட விழுப்புரம் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சிவி.சண்முகம் ரோசனை காவல் நிலையத்திற்கு நேரில் சென்று கழக வேட்பாளரை காவல் நிலையத்திலேயே தாக்கியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இதைத்தொடர்ந்து தி.மு.க. வேட்பாளர் பாபு, அவரது அண்ணன் சுரேஷ் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
காவல் நிலையத்தில் புகுந்து கழக பெண் வேட்பாளரை தி.மு.க.வினர் தாக்கிய சம்பவம் திண்டிவனத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.